கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.
இசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், 'வாயால் பாடி' நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தமிழ்நாடு அரசால் தமிழிசையை கற்பிப்பதற்கென உருவாக்கப்பட்ட இசைப்பள்ளிகள் ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இசைப்பள்ளியை நிறுவதே தமிழ்நாடு அரசின் திட்டமாக இருக்கிறது.
பாரம்பரிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெறும். இதற்கு மங்களம் பாடுதல் எனப்பெயர்.
தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.