உள்ளடக்கத்துக்குச் செல்

தனி ஆவர்த்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களால் ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் இசைப்பகுதி, தனி ஆவர்த்தனம் என அழைக்கப்படுகிறது. இதனை 'தனி' என்றும் பேச்சு வழக்கில் அழைப்பர். வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, ஏதேனும் ஒரு இசைக்கருவியை முதன்மைப்படுத்தி நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளிலும் (உதாரணம்: வயலின் இசை நிகழ்ச்சி) தனி ஆவர்த்தனம் இடம்பெறும். மிருதங்கம், கடம் / தபேலா, மோர்சிங் இசைக் கலைஞர்கள் தனி ஆவர்த்தனம் நிகழ்த்துபவர் ஆவர்.

நிகழ்த்தப்படும் தருணம்

[தொகு]

பொதுவாக இராகம் தானம் பல்லவி எனும் இசைவடிவம் பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கப்படும்.

நிகழ்த்தப்படும் கால அளவு

[தொகு]

பொதுவாக 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்படும்.

நிகழ்த்தப்படும் விதம்

[தொகு]

ஒரு வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை இங்கு எடுத்துக்கொள்வோம். பக்கவாத்தியங்களாக மிருதங்கம் மற்றும் கடம் இருப்பதாகக் கருதுவோம். பாடகர், இராகம் தானம் பல்லவி பாடி முடித்ததும் தனி ஆவர்த்தனத்திற்கு குறிப்பால் உணர்த்தி இடமளிப்பார்.(நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கலைஞர்களிடையே நிகழ்த்தப்படும் வடிவமைப்புக் கலந்துரையாடலில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டிருக்கும்.) தனி ஆவர்த்தனம், மிருதங்கக் கலைஞரால் ஆரம்பித்து வைக்கப்படும். அவர் 2 அல்லது 3 நிமிடங்கள் தொடர்ந்து வாசிப்பார். அதன் பிறகு அவர் தனது வாசிப்பை நிறுத்திக் கொள்ள, கடம் வாசிக்கும் கலைஞர் அதே அளவு காலகட்டத்துக்கு தனது வாசிப்பை நிகழ்த்துவார். இதன் பிறகு மீண்டும் மிருதங்க இசை. இப்படி மாறி மாறி இரு கலைஞர்களும் வாசிப்பர். ஒவ்வொரு சுழற்சியின்போதும் தனக்குரிய வாசிப்புக் காலகட்டத்தை இவ்விரு கலைஞர்களும் குறைத்துக் கொண்டே வருவர். ஒரு கட்டத்தில் இருவரின் வாசிப்பும் ஒன்றிணைந்து, ஒரு சில நிமிடங்களுக்கு அந்தக்கலவை தொடரும். இவ்விதம் நிகழும் இசைப்பகுதியின் உச்சத்தில்... பாடகர், பாடலின் முதல் வரியைப் பாடி தனி ஆவர்த்தனத்தை நிறைவு செய்வார். இத்தருணத்தில் வயலின் இசையும் பாடகருடன் இணைந்து கொள்ளும். அவ்வமயம் நேயர்களால் எழுப்பப்படும் கைத்தட்டல், தனி ஆவர்த்தனத்திற்கு முத்தாய்ப்பாக அமையும்.

சிறப்பு

[தொகு]

பக்கவாத்தியக் கலைஞர்களின் திறமையை தனியே அனுபவிப்பதற்கு, தனி ஆவர்த்தனம் நேயர்களுக்கு உதவுகிறது. பாடகரும், வயலின் இசைக் கலைஞரும் இக்கால இடைவெளியில் சற்று ஓய்வு எடுத்து பக்கவாத்திய இசை தரும் சுகத்தை நேயர்களுடன் சேர்ந்து தாமும் அனுபவிக்கிறார்கள்.

உசாத்துணை

[தொகு]

கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய இந்திய இசைக்கருவூலம் எனும் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_ஆவர்த்தனம்&oldid=2138832" இலிருந்து மீள்விக்கப்பட்டது