நிவர் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிவர் புயல்
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு)
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு)
நிவர் புயலின் தீவிரம்
தொடக்கம்23 நவம்பர் 2020
மறைவு27 நவம்பர் 2020
உயர் காற்று3-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph)
1-நிமிட நீடிப்பு: 130 கிமீ/ம (80 mph)
தாழ் அமுக்கம்980 hPa (பார்); 28.94 inHg
இறப்புகள்6 (மொத்தம்)
பாதிப்புப் பகுதிகள்இலங்கை, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி

நிவர் புயல் (Cyclone Nivar) என்பது வங்கக் கடலில் உருவான மிகவும் சக்திவாய்ந்த சுழல் புயல் ஆகும். நவம்பர் 23 2020 அன்று, தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி 25 நவம்பர், 2020 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை தாக்கும் என்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், நவம்பர் 26 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இப்புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் புதுச்சேரி, வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.[1]

புயல் தற்போது வடக்கு கடற்கரை இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு நோக்கி மேற்கு திசையில் சென்று கொண்டிருக்கிறது, நவம்பர் 23 முதல் 26 வரை, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.

வரலாறு[தொகு]

சபீர் சிம்சன் அளவின்படி, பாதையைத் திட்டமிடும் வரைபடம் மற்றும் புயலின் தீவிரம்

நவம்பர் 23 ஆம் தேதி, சென்னைக்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, நவம்பர் 24 அன்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ தூரத்திலும் மற்றும் புதுவையிலிருந்து 410 கி.மீ. தூரத்திலும் தீவிரப் புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் என்ற பெயரை ஈரான் நாடு சூட்டியுள்ளது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம் ஆகும்.[2] இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25 ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.[3]

முன்னேற்பாடுகள்[தொகு]

இலங்கை[தொகு]

வடக்கு இலங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டன, இப்பகுதியில் அதிக மழை பெய்யும் என்று அச்சுறுத்தல் இருந்தது.[4]

இந்தியா[தொகு]

தமிழ்நாடு[தொகு]

  • இப்புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் 24 நவம்பர் 2020 அன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.[5]
  • பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாக்கப்பட்ட அளவில் இருப்பதைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 24, 25 ஆகிய தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நீர்படாதவாறு பொதுமக்கள் கவனமாக வைத்துக் கொள்ளவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
  • நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களுக்குத் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விரைவு தொடருந்துகளும், சென்னையிலிருந்து திருச்சி வரும் அனைத்து விரைவு தொடருந்துகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்தது.
  • புயல் கரையை கடக்கும் போது காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை உள்ள நான்கு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மரங்களை உடனடியாக அகற்றவும் தேவையான பணியாளர்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
  • புயல் காரணமாக நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 தேதிகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் திசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பழனிசாமியுடனும் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடி, புயல் நிவாரணம், மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.
  • நிவர் புயல் மற்றும் கனமழை பெய்யும் என்பதால் நவம்பர் 25 அன்று அரசு பொது விடுமுறை என தமிழக முதல்வர் தெரிவித்தார்.
  • புயல் காரணமாக நவம்பர் 26 அன்று தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை (மயிலாடுதுறை சேர்த்து) ஆகிய 16 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி[தொகு]

  • புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக நவம்பர் 24 முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல் அறிவிக்கப்பட்டது.
  • புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆந்திரா[தொகு]

ஆந்திராவில், 115 நிவாரண முகாம்களில் 3,363 பேர் தஞ்சமடைந்துள்ளதாக நெல்லூர் மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.[6]

கருநாடகம்[தொகு]

நவம்பர் 26 அன்று, பெங்களூரு உட்பட கருநாடகாவின் பல பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வுத் துறை மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.[7]

முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பகுதிகள்[தொகு]

புயல் கரையைக் கடந்த விதம்[தொகு]

நவம்பர் 25 2020 அன்று, அதிதீவிரப் புயலாக இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. பின்னர் அது நகர்ந்து புதுவைக்கும் - மரக்காணத்திற்கும் இடையே இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இந்த புயல் 11.30 மணி முதல் மறுநாள் நவம்பர் 26 2020 அன்று, அதிகாலை 2.30 வரை புயல் முழுவதுமாக கரையை கடந்தது.

பாதிப்பு[தொகு]

இலங்கை[தொகு]

நவம்பர் 26 அன்று, இலங்கையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பாதித்தது.[8]

இந்தியா[தொகு]

தமிழ்நாடு[தொகு]

சென்னை மாநகரப் பகுதியில் பல சாலைகள் வெள்ள நீரினால் மூழ்கப்பட்டதால், அந்த சாலைகள் மூடப்பட்டன.[9] கடுமையான மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.[10] மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் மற்றும் தாம்பரத்தைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் அடையாறு நதியின் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.[11] சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளான பாடி போன்ற சில இடங்களிலும் மழைநீர் வீடுகளில் நுழைந்து காணப்பட்டன. சென்னை மாநகரப் பகுதியில் உள்ள 223 சாலைகளில் இருந்து புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டது. மாநகராட்சியின் எல்லைக்குள் சுமார் 40,000 வீடுகளுக்கு வெள்ள நீர் நுழைந்ததாக, சென்னை மாநகர அதிகாரிகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[12] கடலூரில் காற்றின் வேகம் மணிக்கு 123 கிமீ/மணி மற்றும் 27 செ.மீ மிக அதிக மழை பெய்தது. அதனால் பல மரங்கள் சாய்ந்தது மற்றும் வயலில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கின. நவம்பர் 26 வரை, மூன்று பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.[13]

நிவர் புயலின் முதற் கட்ட பாதிப்பு விவரங்கள்[தொகு]

நிவர் புயலினால் ஏற்பட்ட முதற்கட்ட பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி 8270 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நிவர் புயல் காரணமாக சேதமடைந்துள்ளன. வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 2,000 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளது. நிவர் புயல் காரணமாக 562 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றின் காரணமாக 7,617 மின்கம்பங்களும், 221 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.[14]

புதுச்சேரி[தொகு]

புயல் கரையை கடக்கும் போது புதுச்சேரி பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் சேதமடைந்தன மற்றும் நவம்பர் 26 வரை பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.[15] புதுச்சேரி முதலமைச்சர் வேளாண்மை மற்றும் பிற துறைகளில் ஏற்பட்ட இழப்பு சுமார் 400 கோடி ரூபாய் என்று அறிவித்தார்.[16]

ஆந்திரா[தொகு]

நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி, ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'நிவர்' புயல் Updates: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் - முதல்வர் அறிவிப்பு". புதிய தலைமுறை (23 நவம்பர், 2020)
  2. "Nivar Cyclone Live: நிவர் புயல்..மதுரைக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!".
  3. "நிவர் புயல் நஷ்டத்தை தடுக்க பயிர் காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை". பிபிசி (23 நவம்பர், 2020)
  4. ECHO (November 24, 2020). "India, Sri Lanka - Tropical cyclone NIVAR (GDACS, JTWC, IMD, Department of Meteorology Sri Lanka) (ECHO Daily Flash of 24 November 2020)". reliefweb.int. ReliefWeb. பார்க்கப்பட்ட நாள் November 27, 2020.
  5. "நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து சேவை ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு". Archived from the original on 2020-11-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-23. தினகரன் (23 நவம்பர், 2020)
  6. 6.0 6.1 "1 Dead, Thousands Evacuated As Cyclone Nivar Brings Heavy Rain In Andhra". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  7. "Cyclone Nivar: IMD issues yellow alert in Karnataka". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  8. "'Nivar' Cyclonic Storm gradually weakens". sundayobserver.lk. Sunday Observer. November 26, 2020. பார்க்கப்பட்ட நாள் November 27, 2020.
  9. "Cyclone Nivar: Chennai Corporation evacuates 478 residents from low-lying areas". Chennai, India: The Hindu. November 25, 2020. பார்க்கப்பட்ட நாள் November 26, 2020.
  10. Lakshmi, K. (2020-11-26). "Gates of Chembarambakkam reservoir opened after 5 years" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/gates-of-chembarambakkam-reservoir-opened-after-5-years/article33180707.ece. 
  11. "Inundation plagues residents in and around city suburbs" (in en-IN). The Hindu. 2020-11-26. https://www.thehindu.com/news/cities/chennai/inundation-plagues-residents-in-and-around-city-suburbs/article33180597.ece. 
  12. "Cyclone Nivar: Chennai Corporation clears 223 roads of uprooted trees, restores traffic" (in en-IN). The Hindu. 2020-11-26. https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-nivar-chennai-corporation-clears-223-roads-of-uprooted-trees-restores-traffic/article33182895.ece. 
  13. Varadhan, Sudarshan (2020-11-26). "Cyclone Nivar slams into southern India causing five deaths" (in en). Reuters. https://in.reuters.com/article/asia-storm-india-idINKBN2860AP. 
  14. "நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான முதற்கட்ட தகவலை வெளியிட்டது தமிழக அரசு". Archived from the original on 2020-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  15. "Cyclone Nivar impact: Heavy rains batter Pondicherry, trees uprooted". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/cyclone-nivar-impact-heavy-rains-batter-pondicherry-trees-uprooted/articleshow/79421962.cms. 
  16. "Tentative Loss Of Rs 400 Crore Due To Cyclone Nivar: Puducherry Chief Minister". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவர்_புயல்&oldid=3713423" இலிருந்து மீள்விக்கப்பட்டது