உயிரணு ஆற்றல் பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதிரி மெய்க்கருவுயிரி ஒன்றில் நிகழும் உயிரணு ஆற்றல் பரிமாற்றம்

உயிரணு ஆற்றல் பரிமாற்றம் (Cellular Respiration) அல்லது கலச் சுவாசம் அல்லது உயிரணுச் சுவாசம் என்பது உயிரினங்களில் இருக்கும் உயிரணுக்களில் நிகழும் ஒரு தொகுப்பு வளர்சிதைமாற்றத் தாக்கங்களும், செயல்முறைகளுமாகும். இந்த செயல்முறைகள் மூலம் ஊட்டச்சத்தில், உயிரினத்திற்கு ஆற்றல் தரக் கூடிய Adenosine triphosphate (ATP) உருவாக்கப்படுவதுடன் கழிவுகளும் உருவாகும்[1]. இங்கு நிகழும் தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளில் இருக்கும் கூடிய ஆற்றலுள்ள பிணைப்புக்களை உடைத்து, அவற்றை சிறிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன்போது உயிரின் வாழ்வுக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் சிதைமாற்ற (Catabolism) தாக்கங்களாகும்.

குருதிச் சுற்றோட்டத்தொகுதி உள்ள விலங்குகளில், அவற்றின் உடலில் உள்ள உறுப்புக்களில் இருக்கும் உயிரணுக்களில், குருதியில் இருந்து பெறப்படும் ஆக்சிசன் பயன்படுத்தப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் வளர்சிதைமாற்றத்திற்குட்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் காபனீரொட்சைட்டு கழிவாக பெறப்படும். இவ்வகையில் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் அவசியமான ஆற்றல் அல்லது சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது குருதி மூலம் உடல் உறுப்புக்கள் அல்லது இழையங்கள் அல்லது உயிரணுக்களுக்கு கொண்டு வரப்படும் ஆக்சிசனானது, ஊட்டச்சத்துக்களில் இருக்கும் உயிர் வேதியியல் ஆற்றலை, உடலால் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய Adenosine triphosphate (ATP) சக்தியாக மாற்றும் நிகழ்வாகும்.

ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.

1.உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல்: மூச்சிழுத்தல் (inhalation) மூலம், ஆக்சிசன் மிகுந்த காற்று நுரையீரலினுள் பெறப்படுகிறது.
2. O2 பரவல் : நுரையீரல்களின் நுண்ணறைகளிலிருந்து ஆக்சிசன், குருதி மயிர்த்துளைக்குழாய்கள் அல்லது இரத்தத் தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும்.
3. O2 கடத்துதல் : நுரையீரல் சிரையூடாக (அல்லது நுரையீரல் நாளத்தினூடாக) ஆக்சிசன் மிகுந்த இரத்தம் இதயத்தின் இடது மேலறையினுள் சென்று, பின் இடது கீழறைக்குக் கடத்தப்படும்.
4. O2 கொண்டு செல்லல் : குருதியில் கலந்துள்ள ஆக்சிசன் ஆனது, இடது இதயக் கீழறையிலிருந்து மகாதமனி அல்லது பெருநாடி என அழைக்கப்படும் நாடி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல தமனிகளாலும் (நாடிகளாலும்) உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்பட்டு, இறுதியில் தந்துகி வலைப்பின்னல்களால் (குருதி மயிர்த்துளைக்குழாய்களால்) ஆக்சிசன் உடலின் பல உயிரணுக்களுக்கும் பரப்பப்படும். இழையங்களின் தந்துகிகளிலிருந்து ஆக்சிசனானது குளுக்கோசு போன்ற ஊட்டச் சத்துக்களோடு, உடல் உயிரணுக்களுக்கு பரவும்.

அந்த ஆக்சிசனே இந்த உயிரணு ஆற்றல் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், காபனீரொட்சைட்டையும், நீரையும் வெளியேற்றும். இந்த காபனீரொட்சைட்டு மீண்டும் வெளியேறுவது பின்வரும் தொடர் நிகழ்வினால் நடைபெறும்.

1. CO2 கொண்டு செல்லல் : உயிரணுக்களிலிருந்து மயிர்த்துளைக் குழாய்களினுள் பரவும் காபனீரொட்சைட்டு, சிரைகள் (அல்லது நாளங்களூடாக) இதயத்துக்கு கொண்டு வரப்படும். இதயத்தின் வலது மேலறைக்கு வரும் குருதி, வலது கீழறைக்குள் செல்லும். பின் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும்.
2. CO2 கடத்துதல் : வலது கீழறையிலிருந்து காபனீரொட்சைட்டு செறிந்த குருதி, அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும். 3. CO2 பரவல் : இரத்தத்தில் இருக்கும் காபனீரொட்சைட்டு குருதி மயிர்த்துளைக்குழாய்களில் இருந்து, நுரையீரல் நுண்ணறைகளுக்குள் பரவும்.
4. வெளிமூச்சு அல்லது மூச்செறிதல்: மூச்செறிதல் (inhalation) மூலம், கார்பனீரொட்சைட்டு மிகுந்த வளிமம் நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் ஊடாகச் சென்று, மூக்கினூடாக வெளியேற்றப்படும்.

வேதியியல் நோக்கில் இந்த உயிரணு ஆற்றல் பரிமாற்றம் ஒரு ஆற்றல் வெளியேற்றும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைத் தாக்கமாகும். ஆனாலும் இது தகனத்தில் போல் விரைவாக நிகழாமல், மெதுவாகவும், பல படிநிலைகளிலும் நிகழ்வதனால் தகனத்தில் இருந்து வேறுபடுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bailey, Regina. "Cellular Respiration".