உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை வானொலி நாடகத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1925 ஆம் ஆண்டளவிலே இலங்கை வானொலியிலே தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பப்படலாயின என்பதைக் கலையரசு க. சொர்ணலிங்கத்தின் நூல் வாயிலாக அறியலாம். எனினும் வானொலியை நாடக அரங்கேற்ற சாதனமாக முழுமையாய்ப் பயன்படுத்திய காலம் 1940 ஆம் ஆண்டின் பின்னரேயாகும்.

1950ல் இலங்கை வானொலி நாடக தயாரிப்பாளராக சானா (சண்முகநாதன்) அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தான் வானொலி நாடகத்துறை சீர்பெற்றது. அக்காலத்தில் வானொலி நாடகங்கள் எழுதும் திறமை பெற்ற ஒரு சில எழுத்தாளருள் இலங்கையர்கோன் குறிப்பிடத்தக்கவர். இவர் வானொலிக்கு எழுதிய மிஸ்டர் குகதாசன், மாதவி மடந்தை விதானையார் வீட்டில், லண்டன் கந்தையா ஆகியன புகழ் பெற்றன. ஆரம்ப காலத்தில் வானொலி நாடகங்கள் ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன.

தமிழ்ச்சேவை ஒன்று - தேசிய சேவை

[தொகு]

தமிழ்ச்சேவை ஒன்று அதாவது தேசிய சேவையில் சனிக்கிழமைகளில் இரவு ஒன்பதரை மணிக்கு ஒலிபரப்பாகும் அரைமணித்தியால நாடகங்கள், ஒரு மணித்தியால நாடகங்கள் அக்காலத்தில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளாக கருதப்பட்டன. (மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் ஒரு மணி நேர நாடகங்கள் ஒலிபரப்பாயின.) புதன் கிழமைகளில் 15 நிமிட நாடகங்களும் ஒலிபரப்பாகின. சானா தயாரித்தளித்த மற்றொரு அரை மணி நிகழ்ச்சியில் மூன்று ஏழு - நிமிட குறுநாடகங்கள் ஒலிபரப்பாகின. இவை பெரும்பாலும் சமூகத்தில் நிலவிய குறைபாடுகளை நகைச்சுவையாக எடுத்துக் கூறுபவையாக இருந்தன.

சானா அவர்களின் பின்னர், கே. எம். வாசகர், அங்கையன் கைலாசநாதன், பி. விக்னேஸ்வரன், ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோர் நாடக தயாரிப்பாளர்களாக பணியாற்றினார்கள்.

ஆரம்பத்தில், தேசிய சேவை நாடகங்களில் தூயதமிழில் அல்லது இந்தியப் பேச்சுவழக்கில் வசனங்கள் அமைந்தன. அக்காலத்தில், ரி. வி. பிச்சையப்பா, ரொசாரியோ பீரிஸ், அப்துல் ஜப்பார், ராஜேஸ்வரி சண்முகம், பிலோமினா சொலமன், விசாலாட்சி ஹமீட் (குகதாசன்) போன்றவர்கள் நடித்து வந்தார்கள். காலப்போக்கில் யாழ்ப்பாணத்தமிழில் நாடகங்கள் தயாரிக்கப்படத் தொடங்க, கே. மார்க்கண்டன், சுப்புலட்சுமி காசிநாதன், எஸ். எஸ். கணேசபிள்ளை, எஸ். கே. தர்மலிங்கம், ரி. ராஜேஸ்வரன் முதலானோர் புகழ்பெறத் தொடங்கினார்கள். கே. எம். வாசகர், பி. விக்னேஸ்வரன் காலத்தில் புதியவர்களான கே. எஸ். பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், கமலினி செல்வராஜன், ஷாமினி ஜெயசிங்கம், சசி பரம், அருணா செல்லத்துரை முதலானோர் நிறைய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பிரபல எழுத்தாளர்களான இளங்கீரன், செங்கை ஆழியான், இந்து மகேஷ், நிலக்கிளி அ. பாலமனோகரன் முதலியோர் இக்காலத்தில் வானொலி நாடகங்களை எழுதினார்கள்.

1985 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் 60 வருட நிறைவுக் கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக நேயர்களிடையே ஒரு நாடகப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பாமா இராஜேந்திரன் என்ற நேயர் முதல் பரிசு வென்றார்.

தமிழ்ச்சேவை இரண்டு- வர்த்தக சேவை

[தொகு]

தேசிய சேவையைப் போலவே வர்த்தகசேவையிலும் நாடகங்கள் ஒலிபரப்பாகின. வர்த்தக நிறுவனங்கள் சார்பாக ஒலிபரப்பான இந்த நாடகங்களில் நடிக்க குறிப்பிட்ட கலைஞர்கள் இருந்த காலமும் உண்டு. எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், எஸ். சந்திரசேகரன், அமீனா பேகம், ஜோக்கிம் பெர்னாண்டோ போன்றவர்கள் நிறைய நாடகங்களில் நடித்தவர்கள். த்மிழ்ச் சேவை இரண்டில் ஒலிபரப்பான நாடகங்களில் சில்லையூர் செல்வராஜனின் "தணியாத தாகம்", வரணியூரானின் "இரைதேடும் பறவைகள்". ராம்தாஸின் "கோமாளிகள் கும்மாளம்", கே. எஸ். பாலச்சந்திரனின் "கிராமத்துக் கனவுகள்" போன்றவை புகழ் பெற்றன.

முஸ்லீம் சேவை

[தொகு]

இஸ்லாமிய சேவையில் ஒலிபரப்பான தமிழ் நாடகங்களை மர்ஹூம் எம். எச். குத்தூஸ் தயாரித்து வழங்கினார். பாவிக்கப்பட்ட பின்னணி இசையினாலும், தயாரிப்பு திறமையினாலும் இந்நாடகங்கள் யாவரையும் கவர்ந்தன. இந்நாடகங்களில் ஏ. எஸ். எம். ஏ. ஜப்பார், பி. எச். அப்துல் ஹமீட், கே. ஏ. ஜவாஹர், கலைச்செல்வன், அமினா பேகம், நெய் றஹீம் சஹீட் போன்றோர் நடித்து புகழ் பெற்றவர்கள்.

கிராமிய சேவை

[தொகு]

கிராமிய நாடகங்கள் இச்சேவையில் பொருத்தமாக ஒலிபரப்பட்டன. வி. என். பாலசுப்பிரமணியம், சு. வேலுப்பிள்ளை (சு. வே)., எஸ். ஜேசுரட்னம் முதலானோர் தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுத, வீ. ஏ. சிவஞானம் முதலானோர் தயாரித்து வழங்கினார்கள்.