க. சொர்ணலிங்கம்
கலையரசு சொர்ணலிங்கம் | |
---|---|
பிறப்பு | மார்ச் 30, 1889 - சூலை 26, 1982 |
இறப்பு | சூலை 26, 1982 | (அகவை 93)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை, நாடக நடிகர் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | லோட்டன் கனகரத்தினம் |
கனகரத்தினம் சொர்ணலிங்கம் (மார்ச் 30, 1889 - சூலை 26, 1982) ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர். நவீன நாடகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். கலையரசு சொர்ணலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படுபவர்.
கலையரசு சொர்ணலிங்கம் இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார். இந்த நாடக சபையின் தொடக்கவிழா 1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. சொர்ணலிங்கத்தின் நாடகங்களில் வைத்தியக் கலாநிதிகள், வழக்கறிஞர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றியுள்ளார்கள். யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தினார்.
யாழ் பரி யோவான் கல்லூரியில் கலையரசு சொர்ணலிங்கம் பயின்ற போது நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தை பாடசாலைக் காலங்களிலேயே அவர் கொண்டிருந்தார். நாடகத்திற்கு அவ்வளவு அங்கீகாரம் கிடைத்திராத ஒரு கால கட்டத்தில் நாடக சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் நாடகங்களை மேடையேற்றிய முன்னோடி நாடக நடிகர். சில காலம் பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றிய கலையரசு சொர்ணலிங்கம் பின் அத்தொழிலைக் கைவிட்டு காப்புறுதித் தொழிலில் இறங்கினார்.
கலையரசு சொர்ணலிங்கம் நாடகப் பின்னணியிலே வளர்க்கப்பட்டவர். யாழ்ப்பாணத்தில் புகைப்படக் கலையின் முன்னோடியான லோட்டன் கனகரத்தினம் என்பவர் சொர்ணலிங்கத்தின் தந்தை. தனது நாடக உந்துதலை தன் தந்தையின் வளர்ப்புச் சூழலிலே பெற்றார். புகைப்பட நுட்பத்தில் கைதேர்ந்த லோட்டன் கனகரத்தினத்தின் வீட்டில் கூத்தும் நாடகமும் இடம் பெற்றிருக்கின்றன. கூத்துக் கலைஞர்களையும் நாடகக் காட்சிகளையும் இவரது தந்தையார் புகைப்படம் பிடித்திருக்கிறார்.
1950களில் கலையரசு சொர்ணலிங்கம் கூத்தாகப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதின் முன்னோடியாகத் திகழ்ந்தார். வசனம் பேசி நடிப்பதுதான் நவீன நாடகம் என்று வலியுறுத்தினார்.
"தான் எந்த வேடம் பூண்டாலும் தானே மற்றொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர்," என்று பம்மல் சம்பந்த முதலியார் கலையரசு சொர்ணலிங்கத்தின் நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1911 - 1916 காலப்பகுதிகளில் சம்பந்த முதலியாரின் நாடகக் குழு மூன்று முறை இலங்கைக்கு வந்து தமது நாடகங்களை அரங்கேற்றியது. இவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் சொர்ணலிங்கத்துக்குக் கிடைத்தது. சம்பந்த முதலியார் கொழும்பு வந்த போது அவரைச் நேரில் சந்தித்து அவரோடும் அவருடன் வந்திருந்த நடிகர்களோடும் நாடகம் சம்பந்தமான பல நுணுக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பம்பல் சம்பந்த முதலியார் நாடகங்களைப் பின்பற்றி நவீன நாடகங்களைத் தயாரித்தளித்தார்.
புராணக் கதைகளையும், இதிகாசங்களையும், வடமொழி நாடகங்களையும், ஆங்கிலத் தழுவல் நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்கள் அமைந்தன.
வெளி இணைப்புகள்
[தொகு]- கலையரசு சொர்ணலிங்கம்: நினைவுக் குறிப்புகள், நவஜோதி ஜோகரட்னம்
- ஈழத்தில் நாடகமும் நானும், கலையரசு க. சொர்ணலிங்கம்
- ஈழத்தில் நாடகமும் நானும் (’கலையரசு’ சொர்ணலிங்கம்)[தொடர்பிழந்த இணைப்பு] - கவிஞர். முல்லை அமுதன்