எம். ஆர். கலைச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.ஆர். கலைச்செல்வன் (1943) ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர்.

நாடக வாழ்வில்[தொகு]

1959 இல் தமிழ்நாட்டிலிருந்து வந்த எம். என். இராஜரத்தினம் பிள்ளை பிரபல எழுத்தாளர் அரு. இராமநாதன் எழுதிய "அசோகன் காதலி' என்ற நாவலைத் தழுவி "இளவரசன்' என்ற பெயரில் நாடகத்தைத் தயாரித்தார். இதுவே கலைச்செல்வனின் முதல் நாடகமாகும். இந்நாடகம் 1959 ஆம் ஆண்டு பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் மேடையேறியது. 'மனோரஞ்சித கானசபாவில் சேர்ந்து கலைச்செல்வன் நடிப்பு, பாட்டு, வாத்தியக் கருவி இயக்குதல் போன்றவற்றை நன்கு கற்று "மலர்ந்த வாழ்வு" என்ற நாடகத்தில் ஒரு துணைப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து "மரணத்தின் மடியிலே' என்ற நாடகத்திற்கு கலைச்செல்வன் கதை எழுதினார். அவர் தந்தையார் கே.எம்.எஸ். பிள்ளை நடித்தார்.

கலைச்செல்வனின் அற்புதமான நடிப்பையும் ஆற்றலையும் வியந்து நடிகவேள் லடிஸ் வீரமணி தன்னுடைய நாடகங்களில் இவரை நடிக்க வைத்தார்.

கலைச்செல்வன் இலங்கை வானொலியிலும் நாடகங்களை எழுதி குரலொலிக் கலைஞராகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு "எதனைக் கண்டான்' என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் நடித்தும் காட்டினார். அதன் பின்னர் "புயலில் ஒரு மலர்' "நீதியின் நிழல்', "எதிர் நீச்சல்' ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் எழுத்தாளர் அ. ந. கந்தசாமியின் தொடர்பு கிடைத்தது. இவர்தான் சமூகம் பற்றிய சிந்தனையை கலைச்செல்வனுக்கு உண்டு பண்ணினார். இவரின் அறிவுறுத்தலினால் "மனித தர்மம்' என்ற புரட்சிகரமான நாடகத்தை 1969 இல் லேக் ஹவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட தினகரன் தமிழ் நாடக விழாவில் கலைச்செல்வன் நடித்து பாராட்டுக்களையும், 6 விருதுகளையும், மிகவும் சிறந்த இயக்குநர் என்ற பெயரையும், கௌரவத்தையும் பெற்றுக் கொண்டார்.

கலைச்செல்வன் லடிஸ் வீரமணியின் இயக்கத்தில் "சலோமியின் சபதம்" நாடகத்தில் விவிலியத்தில் வரும் ஜொகனான் (ஜோன் த பப்டிஸ்ட்) பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்தார்.

இதுவரை கலைச்செல்வன் 60 நாடகங்களை மேடையேற்றியதுடன், 1000 இற்கு மேற்பட்ட தடவைகள் நடாத்தியுமுள்ளார். 35 நாடகங்களை இயக்கியுள்ளார். 24 நாடகங்களை எழுதியுள்ளார். 20 தமிழ், சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட நடிகராக[தொகு]

நான் உங்கள் தோழன் என்ற தமிழ்த் திரைப்படத்திலும் “ஆகாயப்பூக்கள்“ என்ற சிங்களப் படத்திலும் நடித்துள்ள இவர், "மகரந்தம்'என்ற காணொளித் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதழாசிரியராக[தொகு]

"இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸினால் வெளியிடப்பட்ட "விடிவு', சூரியன், "கதிரவன்' ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக கலைச்செல்வன் பணியாற்றியுள்ளார்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • கலைச்­செல்­வனின் குறு­நா­ட­கங்கள் (2015)

விருதுகள்[தொகு]

  • "முதுகலைஞர் விருது" (இலங்கை அரசு, 2008)
  • இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் சார்பில் ´கலாவித்தகர்" எனும் பட்டம் வழங்கப்பட்டது.
  • திருச்சி கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கலாசார பாதுகாப்பு சர்வதேச மாநாடு 2012 இல் "செம்மொழித் தமிழ்த் தென்றல்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • கொழும்பு தமிழ் சங்கத்தில் 2012 சனவரி 14 இல் நடைபெற்ற சிகரம் தொட்ட செம்மல்களுக்கான பாராட்டு விழாவில் தங்கப்பதக்கம் அணிவித்து "கலைச்செம்மல்" என்ற விருதும் வழங்கப்பட்டது.
  • மனித தர்மம் என்ற இவரது நாடக நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._கலைச்செல்வன்&oldid=3725969" இலிருந்து மீள்விக்கப்பட்டது