அ. ந. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. ந. கந்தசாமி
Ankanthasami.jpg
பிறப்புஆகத்து 8, 1924(1924-08-08)
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இறப்புபெப்ரவரி 14, 1968(1968-02-14) (அகவை 43)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்நடராஜா,
கௌரியம்மா

அ. ந. கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.[1] சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார்.[1][2] கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆறுமுகம் நடராஜா கெளரியம்மா தம்பதியருக்கு மகனாக அ. ந. கந்தசாமி யாழ் வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ் சிறைச்சாலை மருத்துவராக இவருடைய தந்தை ஆறுமுகம் நடராஜா பணிபுரிந்தார். நவரத்தினம், தையல்நாயகி ஆகியோர் அ. ந. கந்தசாமியுடன் உடன் பிறந்தவர்களாவர். பல சொத்துக்களின் உரிமையாளராக விளங்கிய கந்தசாமியின் தந்தை இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோதே இறந்து விட்டார். தாய் கௌரியம்மாவும் தந்தை இறந்து 41-ஆம் நாள் இறந்து விட்டார்.[3] தொடக்கக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற கந்தசாமி சிறிதுகாலம் அளவெட்டி சென்று பாட்டியுடன் வாழ்ந்து வந்தார்.[1] அங்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.[3] பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றார்.[1].

இலக்கியப் பணி[தொகு]

அளவெட்டியில் வாழ்ந்ததால் , அதன் மீதிருந்த விருப்பத்தின் காரணமாகத் தன் பெயரில் முன்னொட்டாக 'அ' என்பதையும், தந்தையின் பெயரின் முதலெழுத்தான 'ந' என்பதையும் இணைத்து அ. ந. கந்தசாமி என்று தன்னை அ. ந. கந்தசாமி அழைத்துக் கொண்டார். இவர் பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றார். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களில் ஒருவர். அதன் சங்கப் பண்ணை இயற்றினார்.

சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ. ந. க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய கந்தசாமி தேசாபிமானி இதழின் தொடக்கக்கால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் இதழில் சேர்ந்து அதன் ஆசிரியராக 1949 முதல் 1952 வரை பணியாற்றினார். ஆங்கில இதழான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நாநா' (புதினம்), பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீனப் புதினம், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.[1]

1953 இலிருந்து 1963 வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணி நிமித்தம் மொழிபெயர்த்துள்ளார்.[1][4] தகவற்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீ லங்கா' இதழாசிரியராகவும் விளங்கினார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேர்வர் பத்திரிகையில் உரை திருத்துபவராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் க. கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ. ந. கந்தசாமிக்கு உரித்தாக்கி உள்ளார்.

மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த புலமை மிக்கவர் கந்தசாமி.

ஆக்கங்கள்[தொகு]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் கட்டுரைகள்)
  • மதமாற்றம் (நாடகம்)
  • களனி வெள்ளம் (புதினம்)

வேறு[தொகு]

  • மனக்கண் (தினகரனில் வெளிவந்த புதினத் தொடர்)
  • நாநா (மொழிபெயர்ப்பு, பிரெஞ்சு எழுத்தாளரான எமிலி சோலாவின் புதினம், சுதந்திரனில் அக்டோபர் 21, 1951 முதல் ஆகத்து 28, 1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன).
  • சங்கீதப் பிசாசு (சிரித்திரனில் வெளிவந்த சிறுவர் தொடர் புதினம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ஜீவா, அந்தனி (12 பெப்ரவரி 1984). "சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்". தினகரன் வாரமஞ்சரி. 3 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!" (ஆங்கிலம்). 2021-03-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 கிரிதரன், வ. ந. (ஏப்ரல் 2009). "அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!". பதிவுகள் (112). http://www.geotamil.com/pathivukal/VNG_ON_ANK_ILAKKIYAPUUKKAl.htm. 
  4. அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ. ந. க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
அ. ந. கந்தசாமி எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ந._கந்தசாமி&oldid=3617170" இருந்து மீள்விக்கப்பட்டது