இலங்கையர்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையர்கோன்
Ilankaiyarkone.jpg
பிறப்புசிவஞானசுந்தரம்
செப்டம்பர் 6, 1915(1915-09-06)
ஏழாலை, யாழ்ப்பாணம்
இறப்புஅக்டோபர் 14, 1961(1961-10-14) (அகவை 47)
இறப்பிற்கான
காரணம்
அகால மரணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணியகம்அரச நிருவாக சேவை
அறியப்படுவதுசிறுகதை, நாடக ஆசிரியர்

இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம், செப்டம்பர் 6, 1915 - அக்டோபர் 14, 1961)[1] ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், திருகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார். சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.

சிறுகதைகள்[தொகு]

பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1938 ஆம் ஆண்டில் கலைமகள் இதழில் வெளியாகிற்று. இயேசுவின் விவிலிய நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதினார். ஆரம்ப காலத்தில் இவர் புராண இதிகாசம், இலங்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைக் கதைகளாக எழுதினார். கடற்கோட்டை, சிகிரியா, அனுலா, மணப்பரிசு, யாழ்பாடி ஆகிய கதைகளை கலைமகளில் எழுதினார். மேனகை என்ற பெயரில் புராண வரலாற்றுக் கதை ஒன்றை மறுமலர்ச்சி இதழில் எழுதினார். கலைமகள் தவிர கிராம ஊழியன், சூறாவளி, பாரததேவி, கலாமோகினி ஆகிய தமிழக இதழ்களிலும் எழுதினார்.[1]

1944 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியான வெள்ளிப்பாதரசம் என்ற சிறுகதை இலங்கையர்கோனை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து ஈழகேசரியில் துறவியின் துறவு, ஒரு நாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல், ஆகிய சிறுகதைகளும், பாரத தேவி இதழில் முதற் சம்பளம், வஞ்சம் போன்ற பல கதைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய 'வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் வெளியாகி உள்ளன.[1]

பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் 'முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.

நாடகங்கள்[தொகு]

சேக்சுப்பியரின் எழுத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றன. 'பச்சோந்திகள்', 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' 'மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.

'மாதவி மடந்தை', ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.

மறைவு[தொகு]

இலங்கையர்கோன் 1961 அக்டோபர் 14 இல் தனது 46வது அகவையில் அகால மரணம் அடைந்தார்.[1] அவரது இறப்பின் பின்னர் இலங்கையர்கோனின் 15 சிறுகதைகள் கொண்ட வெள்ளிப்ப்பாதரசம் தொகுதி 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

வெளியான நூல்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
இலங்கையர்கோன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • விதானையார் வீட்டில் (நாடகம்)
  • கொழும்பிலே கந்தையா (நாடகம்)
  • லண்டன் கந்தையா (நாடகம்)
  • வெள்ளிப்பாதசரம் (சிறுகதைத் தொகுப்பு)
  • மாதவி மடந்தை (மேடை நாடகம்)
  • மிஸ்டர் குகதாசன் (நகைச்சுவை நாடகம்)
  • முதற்காதல் (மொழிபெயர்ப்பு நாவல்)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 துயர் பகிர்வோம்: இலங்கையர்கோன், வீரகேசரி, அக்டோபர் 19, 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையர்கோன்&oldid=2716239" இருந்து மீள்விக்கப்பட்டது