உள்ளடக்கத்துக்குச் செல்

வன்னி (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன்னி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Prosopis
இனம்:
P. cineraria
இருசொற் பெயரீடு
Prosopis cineraria
(லி.) துரூசு
வேறு பெயர்கள்

Adenanthera aculeata Roxb.[1]
Mimosa cineraria L.
Prosopis spicigera L.[2]
Prosopis spicata Burm.[1]

வன்னி (Prosopis cineraria அல்லது Prosopis spicigera) என்பது ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரவிக் காணப்படுகிறது.[1] இது பல பெயர்களால் இடத்துக்கிடம் அழைக்கப்படுகிறது. அரபியில் கஃப் என்றும்,[2] இராச்சசுத்தான் மொழியில் சங்ரி என்றும், பஞ்சாபியில் ஜந்த்[1] என்றும், சிந்தியில் கண்டி என்றும், கன்னடத்தில் வ(b)ன்னி என்றும், சௌங்கிரா[1], ஜந்த்/ஜந்தி, கர்,[1] கெஜ்ரி/கெஜ்ரா,[1] சமி, ஷமி ஆகிய பெயர்களால் மராத்தியிலும் இந்தியிலும்[3] சும்ரி என்று குஜராத்தியிலும் அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

வன்னி மரம் பல்வேறு சிறப்புகளை உடைய மரம்.சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தல விருட்சமாக மூலம் அறியலாம். [சான்று தேவை]

பயன்கள்

[தொகு]

வன்னிமரத்தின் நெற்றுக்களை (காய்கள்) ஆடுகள் விரும்பி உண்ணும். பிறந்த இளம் ஆட்டுக் குட்டிகளுக்கு வன்னி மரத்தின் தழைகளை உணவாக இடுவர். ஆட்டுக்குட்டிகள் இவ்வாறு வன்னிமரத்தின் தழைகளையே முதலில் உண்ணும்.[4]

தமிழ் இலக்கியங்களில் வன்னி மரம்

[தொகு]

சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து(பாடல் 44) , புறநானூறு (பாடல் 372) மற்றும் ஐம்பெரும்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் வன்னி மரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பதிற்றுப்பத்து

[தொகு]

வன்னி மன்றத்து விளங்கிய காடே (பதிற்றுப்பத்து 44/23)

பதிற்றுப்பத்தில் வன்னி மரம் மயானங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.[5.1]

# பதிற்றுப்பத்து  44
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும் 5
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர்
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு
அரண்கள் தாவு-உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து 15
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி 20
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
#வன்னி மன்றத்து #விளங்கிய காடே

புறநானூறு

[தொகு]

ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் (புறநானூறு 372/7)

 போர்க்களத்தில் வீரர்களுக்கு உணவு சமைக்க வன்னி மரக்கட்டைகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

# புறநானூறு 372 மாங்குடி கிழார்
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் 5
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
#ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின்
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே

சிலப்பதிகாரத்தில் வன்னி மரம்

[தொகு]

வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/5

சங்க காலத்திற்குப் பிந்தைய காப்பியமான சிலப்பதிகாரத்தில் (வஞ்சினமாலை), வன்னி மரம் ஒரு 'சாட்சி' சொல்லும் மரமாகக் காட்டப்படுகிறது. கண்ணகி தனது கற்பை நிரூபிக்க வன்னி மரத்தையும், மடப்பள்ளியையும் (சமையலறை) சாட்சியாக அழைக்கிறார். "வன்னி மரமும் மடப்பள்ளியும் சான்றாக" என்ற வரிகள் மூலம் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் வன்னி மரம் நீதியின் அடையாளமாக இருந்ததை அறியலாம்.[5.2]

மணிமேகலையில் வன்னி மரம்

[தொகு]

மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/87

மணிமேகலை காப்பியத்தில், கபாலிகர்கள் (மண்டை ஓடுகளை மாலையாக அணிந்த ஒரு துறவிப் பிரிவு) வன்னி மன்றங்களில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வன்னி மரங்கள் அடங்கிய பகுதிகள் புனிதமான மற்றும் துறவு வாழ்க்கைக்கு உகந்த இடங்களாகக் கருதப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.[5.2]

வன்னி மன்றம்

[தொகு]

'வன்னி மன்றம்' என்ற சொல் மக்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஒன்றுகூடும் ஒரு இடத்தைக் குறிக்கிறது.இந்த மன்றங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத் தளங்களாகவும்,புனிதமான இடங்களாகவும் கருதப்பட்டன.

சங்க காலத்தில் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இத்தகைய நடைமுறைகளிலிருந்தே உருவானதாக கருதப்படுகிறது.சங்க இலக்கியங்களில் வன்னி மரம் என்பது ஒரு சாதாரணத் தாவரம் மட்டுமல்ல; அது போர், வெற்றி, நீதி மற்றும் இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை ஆகியவற்றுடன் கலாச்சார ரீதியாகப் பின்னிப் பிணைந்த ஒரு புனித அடையாளமாகத் திகழ்ந்தது.[5.1]

தொல்லியல் சான்றுகள்

[தொகு]

சிந்து சமவெளி தொல்லியல் சான்றுகள்

[தொகு]

சிந்து சமவெளி நாகரித்தில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற மட்பாண்டம், சுடுமண் பலகை (Terracotta Panels / Terracotta Slabs), முத்திரைகளில்(seals) வன்னி மரத்தின் உருவம் இருக்கிறது.[5]

சிவப்பு நிற மட்பாண்டம்

சிந்து சமவெளி சிவப்பு நிற மட்பாண்டம்

[தொகு]

1988-ஆம் ஆண்டு நௌஷாரோ தொல்லியல் களத்தில் ஆரம்பகால அரப்பாவைச் (கி.மு. 2600-2550) சேர்ந்த சிவப்பு நிற மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டது.இதில் மூன்று செபு காளைகள் (Zebu bulls) மூன்று வெவ்வேறு மரங்களில் கட்டப்பட்டிருக்கும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்த மட்பாண்ட ஓவியத்தில் உள்ள மூன்று மரங்களை அடையாளப்படுத்துவதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.ஆனால் நிச்சயமாக இதில் ஒரு மரம் வன்னி மரம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆய்வாளர் ஜெயகுமார் ராமசாமி இம்மரங்களை அரச மரம், வில்வ மரம் மற்றும் வன்னி மரம் என்று அடையாளப்படுத்துகிறார்.[6] இதற்கு மாறாக, மட்பாண்ட ஓவியங்களை மரங்களின் உண்மையான தாவரவியல் பண்புகளுடன் (botanical features) ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், ஜெயகுமாரின் இந்த அடையாளப்படுத்துதலை மறுக்கிறார். பாலகிருஷ்ணனின் கூற்றுப்படி, ஜெயகுமார் 'வில்வ மரம்' என்று குறிப்பிட்டது உண்மையில் 'வன்னி மரம்' ஆகும்; அதேபோல் ஜெயகுமார் 'வன்னி மரம்' என்று குறிப்பிட்டது உண்மையில் 'வேப்ப மரம்' ஆகும்.[5.3]

சிந்து சமவெளி சுடுமண் பலகை

[தொகு]
சுடுமண் பலகை - வன்னி மரம்

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுடுமண் பலகையில் உள்ள மரத்தைப் பற்றி விவரித்த ஜொனாதன் மார்க் கெனோயர், அந்த மரத்தை ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு அடையாளப்படுத்தவில்லை.[7]

இருப்பினும், அந்த மரத்தை "சிறிய இலைகளைக் கொண்ட வளைந்து நெளிந்து செல்லும் மரம்" (sinuous tree with short leaves) என்று அவர் விவரித்துள்ளார். மேலும், இது ஒரு புனித மரமாகக் கருதப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[7] இந்த விளக்கத்தையே ஆதாரமாகக் கொண்டு, ஆர். பாலகிருஷ்ணன் அந்த மரம் 'வன்னி மரம்' தான் என்பதை உறுதிப்படுத்துகிறார்.[5.4]

சிந்து சமவெளி முத்திரை

[தொகு]
வன்னி மரத்தில் ஒரு பெண் உருவம்

மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில், வளைந்து நெளிந்து செல்லும் கிளைகளையும் சிறிய இலைகளையும் கொண்ட ஒரு வன்னி மரத்திற்குள் ஒரு பெண் உருவம் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.[5.4]



வன்னி மரத்திற்கான நினைவு அஞ்சல் தலை

[தொகு]

1988 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் அன்று இந்திய அரசாங்கம் வன்னி மரத்தின் (ராஜஸ்தானில் 'கேஜ்ரி' என்று அழைக்கப்படுகிறது) சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

ஜூன் 1988 நினைவு அஞ்சல் தலை -வன்னி மரம்

1730 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேஜர்லி (Khejarli) கிராமத்தில், புனிதமாக கருதப்படும் வன்னி மரங்களை வெட்டவிடாமல் காப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பிஷ்னோய் (Bishnoi) சமூக மக்களின் உணர்வுகளையும் தியாகத்தையும்[8] கௌரவிக்கும் வகையில் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.[5.5]

20- ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இந்த அஞ்சல் தலை, ஒரு மரம் எவ்வாறு ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளமாகவும், பிற்கால 'சிப்கோ'' (Chipko movement) போன்ற சுற்றுச்சூழல் இயக்கங்களுக்குத் தூண்டுகோலாகவும் இருந்தது என்பது தெரிகிறது.[5.6]

பொருநை அருங்காட்சியகம் மற்றும் வன்னி மரம்

[தொகு]

டிசம்பர் 20, 2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து வன்னி மரத்தை நட்டு வைத்தார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 "Prosopis cineraria (L.) Druce". Catalogue of Life. Integrated Taxonomic Information System and Species2000. 2012-03-15. Archived from the original on 2021-04-17. Retrieved 2012-03-21.
  2. 1 2 "Prosopis cineraria (L.) Druce". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-01-27. Archived from the original on 2012-10-10. Retrieved 2009-12-31.
  3. "Prosopis cineraria". AgroForestryTree Database. World Agroforestry Centre. Archived from the original on 2014-12-25. Retrieved 2012-03-21.
  4. பெ.சுப்ரமணியன் (2026-06-11). "கால்நடைகளின் 'நொறுக்குத்தீனி'". Hindu Tamil Thisai. Retrieved 2026-07-13.
  5. R, Balakrishnan (2019). "Roots of Vanni : Tree Of Life". ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை [Journey of a Civilization: Indus to Vaigai] (in ISO 639-1). சென்னை ,தமிழ்நாடு: Roja Muthiah Research Library (RMRL). ISBN 9788193924303. கணினி நூலகம் 1287995152.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
    1. 1 2 page 401 English Edition
    2. 1 2 page 402 English Edition
    3. Page 400 English Edition
    4. 1 2 page 401 English edition
    5. page 399 English Edition
    6. page 399
  6. Ramasami, Jeyakumar. Tree gods of Indus valley civilization.. https://www.academia.edu/25651400/Tree_gods_of_Indus_valley_civilization.
  7. 1 2 "Tree Tablet | Harappa". www.harappa.com. Retrieved 2026-08-11.
  8. "Khejarli massacre", Wikipedia (in ஆங்கிலம்), 2026-07-15, retrieved 2026-08-11
  9. Sun News (2025-12-20), Porunai Museum | Inaugurated | CM Stalin | TN Govt | Sun News, retrieved 2026-08-10

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வன்னி (மரம்)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னி_(மரம்)&oldid=4624474" இலிருந்து மீள்விக்கப்பட்டது