ரிதி விகாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிதி விகாரை
රිදී විහාරය
Ridi Viharaya 3.JPG
ரிதி விகாரைத் தொகுதியில் உள்ள மகா விகாரை. பின்னணியில் ரஜத லேனாவைப் பார்க்கலாம்.
தகவல்கள்
நிறுவல் கி.மு 2ம்-நூற்றாண்டு
நிறுவனர்(கள்) துட்டகைமுணு
வணக்கத்துக்குரியவர்கள் திப்பாத்துவவே சிறீ சித்தார்த்த சுமங்கல தேரோ
நாடு இலங்கை
ஆள்கூறுகள் 7°33′N 80°29′E / 7.550°N 80.483°E / 7.550; 80.483ஆள்கூறுகள்: 7°33′N 80°29′E / 7.550°N 80.483°E / 7.550; 80.483

Dharma Wheel.svg வலைவாசல்:பௌத்தம்

ரிதி விகாரை (சிங்களம்: රිදී විහාරය) இலங்கையின் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ள, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும்.[1][2] ரிதி என்பது சிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரை, வெள்ளிக் கோயில் எனப் பொருள்படும். அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினியின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டபோது, இவ்விடத்திலேயே இலங்கையின் மிகப்பெரிய தாதுகோபமான ருவான்வெலிசாயவைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான வெள்ளித் தாது பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3] இலங்கையின் பழைய வரலாற்று நூல்களான மகாவம்சம், தூபவம்சம் என்பன, ருவான்வெலிசாயவைக் கட்டி முடிப்பது என்னும் தனது கனவை நனவாக்க உதவியதற்கான நன்றியாக இந்த ரிதி விகாரைத் தொகுதியை மன்னன் கட்டியதாகத் தெரிகிறது.[4]

அமைவிடம்[தொகு]

ரிதிகம என்னும் ஊரில் உள்ள இந்த விகாரை கொழும்புக்கு வடகிழக்கில் 94 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருநாகல் நகருக்கு வடகிழக்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குருநாகலையும், தம்புல்லையையும் இணைக்கும் A6 நெடுஞ்சாலையில் இப்பாகமுவை என்னும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்விகாரை உள்ளது.

தோற்றக் கதை[தொகு]

உடவிகாரையும் அருகில் அமைந்த தாதுகோபமும்.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய சிங்கள மன்னன் துட்டகைமுணு கிமு 161 முதல் கிமு 137 வரை அனுராதபுரத்தை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில், 20 ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் உலகிலேயே உயரமான சிலவற்றுள் ஒன்றும், பெரிய தாது கோபுரம் என அறியப்படுவதுமான ருவான்வெலிசாயவைக் கட்டுவிக்கத் தொடங்கினான். அடித்தள அமைப்புக்கு வெள்ளியும் தேவையான ஒரு பொருளாக இருந்தது.[5][6]

இக்காலத்தில், சில வணிகர்கள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் இருந்து தலைநகர் நோக்கி வந்தனர். பண்டைய வரலாற்று நூல்களின்படி, வரும் வழியில் ரிதிகமப் பகுதியில் இவர்களுக்குப் பழுத்த பலாப்பழம் கிடைத்தது. அதை வெட்டிய அவர்கள் அதில் முதல் பாதியை புத்த துறவிகளுக்குத் தானமாகக் கொடுக்க எண்ணினர். அவர்கள் வேண்டுகோளின்படி முதலில் நான்கு அருகத் துறவிகள் தானம் பெற்றுச் சென்றனர். பின்னர் மேலும் நான்கு துறவிகள் தானம் பெற்றனர். இறுதியாக வந்த அருகர் இந்திரகுப்தர்[7] என்னும் பெயர் கொண்ட துறவி வணிகர்களை வெள்ளித்தாது இருந்த குகையொன்றுக்கு வழிகாட்டினார். அனுராதபுரம் வந்ததும் தாம் கண்டது குறித்து வணிகர்கள் அரசனுக்கு அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற மன்னன் மிகவும் பகிழ்ச்சியுற்றான். இது ருவான்வெலிசாயக் கட்டுமானத்துக்குத் தேவையான வெள்ளியை வழங்கியது. இதற்கு நன்றியாக இந்த வெள்ளித்தாது இருந்த இடத்தில், மன்னன் ஒரு விகாரைத் தொகுதியைக் கட்டினான். இக்கட்டிடவேலையில் விசுவகர்மா பிரதிராஜா உள்ளிட்ட 300 கொத்தனார்களும், 700 பிற வேலையாட்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.[8]

இக்கோயிலைச் சுற்றி ஏறத்தாழ 25 குகைகள் உள்ளன. கிமு 3ம் நூற்றாண்டில் அருகர் மகிந்தன் இலங்கைக்கு வந்த காலத்தில் இருந்தே இக்குகைகளில் அருகத் துறவிகள் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.[9] இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டில் கண்டியின் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் காலத்தில் திருத்தப்பட்டது. இக்காலத்தில் ரிதி விகாரைக் கோயில் தொகுதியில் உட விகாரை அமைக்கப்பட்டது. குமார பண்டார தேவாலயம், பத்தினி தேவாலயம் போன்றனவும் இக்காலத்தில் சேர்க்கப்பட்டன.[4] ரிதி விகாரை இப்போது புத்த கோயில்களுக்கான மல்வத்தைப் பீடத்தின் கீழ் வருகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Powell, Mike (11 March 2012). "The Stony Temples Ridi Vihara And Aluvihara". The Sunday Leader. பார்த்த நாள் 20 July 2012.
  2. Dole, Nilma (13 February 2011). "The cave monastery: Ridi Vihara, an explorer’s dream come true". Sunday Observer. பார்த்த நாள் 20 July 2012.
  3. "Lonely Planet review for Ridi Vihara". Lonely Planet. பார்த்த நாள் 16 July 2012.
  4. 4.0 4.1 "Ridi Vihara - Esala pageant in Kurunegala". Daily News (14 August 2003). பார்த்த நாள் 16 July 2012.
  5. Amarasekera, Janani (26 June 2011). "Ruwanweliseya : Great stupa named after goddess Swarnamali". Sunday Observer. பார்த்த நாள் 20 July 2012.
  6. Nāuyana Ariyadhamma Maha Thera (August 2002). "Ruwanveliseya - The Wonderous Stupa Built by Gods and Men". பார்த்த நாள் 20 July 2012.
  7. "Ridi Viharaya". sinhalaheritage.org. பார்த்த நாள் 20 July 2012.
  8. "Ridi Viharaya ( Silver Temple)". srilankatravelnotes.com. பார்த்த நாள் 16 July 2012.
  9. "Architecture, history and travel of Sri Lanka - Ridi Vihara" (srilankaview.com). பார்த்த நாள் 17 July 2012.
  10. Seneviratne, Vidushi (7 May 2006). "Ridi Viharaya - Lanterns and Bhakthi Geetha to light up Ridhi Viharaya celebrations". The Sunday Times. angelfire.com. பார்த்த நாள் 20 July 2012.

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிதி_விகாரை&oldid=2456002" இருந்து மீள்விக்கப்பட்டது