உள்ளடக்கத்துக்குச் செல்

இசுருமுனிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுருமுணிய புத்த கோயில்
இசுருமுணிய கோயிலின் முன்புறத் தோற்றம்

இசுருமுணிய (Isurumuniya, சிங்களம்: ඉසුරුමුණිය) என்பது இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள திசவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.[1][2][3]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பண்டைக்காலத்தில் இலங்கையை ஆண்ட தேவநம்பிய தீசன் என்னும் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. 500 உயர்சாதிப் பிள்ளைகளை பிக்குகளாக நிலைப்படுத்திய பின்னர், அவர்கள் வசிப்பதற்காக இது கட்டப்பட்டது. மன்னன் முதலாம் கசியபன் (கிபி 473-491) இதைத் திருத்திய பின்னர், இதற்குப் "போபுல்வன் கசுப்கிரி ரத்மகா விகாரை" எனப் பெயர் இட்டான். மன்னனுடைய பெயரையும் அவனது இரு பெண் மக்களுடைய பெயரையும் இணைத்து இப்பெயர் உருவானது. அங்கிருந்த குகையுடன் தொடர்புடையதாக விகாரையும், மேலே மலை உச்சியில் ஒரு சிறிய தாதுகோபுரமும் உள்ளன. இத் தாதுகோபுரம் தற்காலக் கட்டுமான அமைப்புடையது. இங்கு குளம் ஒன்றில் இருந்து வெளிவருவது போல் அமைந்துள்ள ஒர் பாறையில் யானைகள், குதிரை ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன. இவ்விடத்திலேயே புகழ் பெற்ற இசுருமுனிய காதலர்கள் எனப் பெயருடைய சிற்பமும் உள்ளது. இச் சிற்பத்தைக் கொண்ட கற்பலகை வேறொரு இடத்திலிருந்து இவ்விடத்துக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விகாரைக்கு அண்மையிலேயே ரன்முசு உயன எனப்படும் பூங்காவனம் உள்ளது.

தொல்லியற் பொருட்கள்

[தொகு]
இசுருமுனிய காதலர்

இசுருமுனிய காதலர்கள்

[தொகு]

6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்தியக் குப்தர் பாணியில் இச் சிற்பம் அமைந்ததுள்ளது. காதலனின் மடியில் அமர்ந்திருக்கும் காதலி எச்சரிக்கை செய்யயும் பாங்கில் ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறாள். நாணத்தினால் காதலனைத் தடுப்பதற்கான ஒரு சைகையாக சிற்பி இதனைச் செதுக்கி இருக்கலாம். இதில் உள்ளவர்கள் துட்டகைமுனுவின் மகனான சாலிய என்பவனும், அவனது தாழ்ந்த சாதிக் காதலியான அசோகமாலா என்பவளும்ஆவர் எனக் கருதப்படுகிறது. தனது காதலி அசோகமாலாவுக்காக சாலிய இளவரசன் தனது அரசுரிமையைத் துறந்தான்.

இச்சிற்பம் முன்னர் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் ஒரு பாளி மொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இதில் "சித்த மஹாயஹ குனி - மஹா (லா) க அசல யஹ (டி) னி" என்னும் வரி உள்ளது. "மஹாயா எனப்படும் இந்தக் குகை வணக்கத்துக்குரிய அசலயவுக்கு வழங்கப்பட்டது" என்பது இதன் பொருள். இதன்படி இந்த இடம் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்ட பின்னர் காதலர் சிற்பம் தற்போது இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. சிற்பத்தில் உள்ளவர்கள் இராமாயணத்தில் வரும் மன்னன் குவேரா வைசுராவணனும், அவனது அரசி குனியும் என்ற கருத்தும் நிலவுகிறது. இம்மன்னன் இராவணனுக்கு முன்னர் இலங்காபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்டதாக இராமாயணம் கூறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seneviratna, A (1994). Ancient Anuradhapura: The Monastic City. Archaeological Survey Department. p. 198.
  2. Sri Lanka Pilgrim's Guide. Buddhist Cultural Centre. 2000. p. 16.
  3. Isurumuni Viharaya. Lanka Pradeepa. 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுருமுனிய&oldid=3919596" இலிருந்து மீள்விக்கப்பட்டது