கல் விகாரை

ஆள்கூறுகள்: 7°57′57″N 81°00′18″E / 7.96588°N 81.00497°E / 7.96588; 81.00497
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் விகாரை (உத்தரராம)
கல் விகாரையில் பெரிய தனிப்பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்.
தகவல்கள்
நிறுவல் 12ம் நூற்றாண்டு
நிறுவனர்(கள்) பராக்கிரமபாகு I
நாடு இலங்கை
ஆள்கூறுகள் 7°57′57″N 81°00′18″E / 7.96588°N 81.00497°E / 7.96588; 81.00497

வலைவாசல்:பௌத்தம்

கல் விகாரை (சிங்களம்: ගල් විහාරය, ஆங்கிலம்: Gal Vihara), புத்தருக்கான ஒரு பாறைக் கோயில். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் பண்டைக்கால நகரமான பொலநறுவையில் அமைந்துள்ள இந்த விகாரை பழைய காலத்தில் உத்தரராம என அழைக்கப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகுவினால் கட்டுவிக்கப்பட்டது. பெரிய கருங்கற்பாறை முகப்புக்களில் செதுக்கப்பட்டுள்ள நான்கு புத்தர் சிற்பங்கள் இக்கோயிலின் முக்கிய அம்சம். இவற்றுள் ஒன்று பெரிய இருக்கும் சிலை, இன்னொன்று சிறிய இருக்கும் சிலை, மற்றொன்று நிற்கும் நிலையில் உள்ள சிலை, நான்காவது படுத்த நிலையில் உள்ளது. இவை, பழங்காலச் சிங்களச் சிற்பக் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டுக்களுள் சில வாகும். இதனால், பொலநறுவையில் உள்ள நினைவுச் சின்னங்களுள் அதிகம் மக்கள் வருகை தருகின்ற இடமாக கல் விகாரை விளங்குகிறது.[1][2][3]

இங்குள்ள சிற்பங்கள் இதற்கு முந்திய அனுராதபுரக் காலச் சிற்பங்களைவிட வேறு பாணியில் அமைந்திருப்பதுடன், சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையும் காட்டுகின்றன. நிற்கும் சிற்பத்தை அடையாளம் காண்பதில் தொல்லியலாளரிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. சிலர் அச்சிற்பம் புத்தருடையது அல்ல என்றும் அது பிக்கு ஆனந்தருடையது என்றும் கருதுகின்றனர். ஒவ்வொரு சிற்பமும் அது செதுக்கப்பட்ட பாறையைக் கூடிய அளவு பயன்படுத்தக்கூடிய விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றின் உயரமும் பாறைகளின் உயரத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவ்விடத்திலேயே முதலாம் பராக்கிரமபாகு பௌத்த குருத்துவத் தன்மையைத் தூய்மைப் படுத்துவதற்கு குருமார்களின் கூட்டத்தைக் கூட்டி அதற்கான நெறிமுறைகளை வகுத்தார். இந்த நெறிமுறைகள் இங்குள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kingston, Jeff (19 March 2002). "On the road in Sri Lanka". The Japan Times. http://search.japantimes.co.jp/cgi-bin/fv20020319a3.html. 
  2. Prematilleke and Karunaratne (2004), p. 20
  3. Sarachchandra (1977), p. 125
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_விகாரை&oldid=3889851" இலிருந்து மீள்விக்கப்பட்டது