ராமாபுரம் ராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமாபுரம் ராமர் கோயில்

ராமாபுரம் ராமசுவாமி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் மீனச்சில் வட்டத்தில் ராமாபுரம் கிராமத்திலும் பாலாவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . இக்கோயில் வைஷ்ணவத்தின் 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் ராமர் மூலவராக உள்ளார். மூலவர் நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளார்.[1] இக்கோயில் அமனகர மனை, குன்னூர் மனை, காரநாட்டு மனை ஆகிய மூன்று நம்பூதிரி குடும்பங்களைக் கொண்ட ராமாபுரம் தேவஸ்வம் என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. [2]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பாலா - கூத்தாட்டுக்குளம் நெடுஞ்சாலையில் ராமாபுரம் சந்திப்பில் இருந்து 1.5 கி.மீ., கோட்டயத்திலிருந்து 35 கி.மீ., தொடுபுழாவில் இருந்து 17 கி.மீ. பாலாவிலிருந்து 12 கி.மீ., கூத்தாட்டுக்குளத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோயில்[தொகு]

இந்தக் கோயில் கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கருவறை வட்ட வடிவில் உள்ளது, அதன் மேல் தங்க மூலம் பூசப்பட்ட செப்புத்தகட்டுடன் உள்ளது. கோண்டாடு தர்மசாஸ்தா கோயிலின் ஆராட்டு விழா நடைபெறும் இடத்தின் வடக்கில் கோயில் குளம் அமைந்துள்ளது. [2] இக்கோயிலின் அருகில் லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோருக்கான சன்னதிகள், சுமார் 3 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன. [3] கர்கிடகா அல்லது ராமாயண மாதத்தில் இந்த நான்கு கோயில்களுக்குச் செல்வது நாலம்பல தரிசனம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இவ்வாறான தரிசனம் பக்தர்களுக்கு சாதனைகளையும் ஆசீர்வாதங்களையும் தருகிறது. [4][5]

புராணம்[தொகு]

விஷ்ணுவின் அவதாரமான ராமர், அயோத்தியை விட்டு வெளியேறினார். இந்தபதினான்கு ஆண்டுகால வனவாசத்தின் போது தனது மனைவி சீதையைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய பாதை தற்போதைய ராமாபுரம் வழியாக உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த இடத்தை தியானம் செய்வதற்கான இடமாகக் கண்டார். அவரது சகோதரர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர். தெற்கு நோக்கி சென்றனர். அவர் ஒரு அமைதியான இடத்தில் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டதும், அவர்களும் அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்தனர். கூடப்புலத்தில் லக்ஷ்மணரும், அமனகரத்தில் பரதனும், மேத்திரியில் சத்ருக்னனும் இருந்தனர். நாளடைவில் அவர்கள் தியானம் செய்த தலங்களில் அவர்களுக்கென்று தனித்தனி சன்னதிகள் தோன்றி அது நாலம்பலம் எனப் புகழ் பெற்றது. <[3]

மூலவர்[தொகு]

ராமர் தவிர, இக்கோயிலில் பிற துணைத்தெய்வங்கள் உள்ளன. மூலவர் சன்னதிக்குத் தெற்கில் சாஸ்தா, தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இந்த வளாகத்தில் பத்திரகாளி தேவி, கணபதி, அனுமன், பிரம்மராட்சஸ், யக்சியம்மா ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன.[2] இங்கு தினமும் பூசைகள் மேற்கொள்ளப்படுகின்றன. [2]

திருவிழா[தொகு]

இக்கோயிலில் எட்டு நாள் ஆண்டு விழா மலையாள மாதமான மீனத்தில் (மார்ச்/ஏப்ரல்) சோதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா அமனகர பரத கோவில் குளத்தில் நடத்தப்படும் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறுகின்ற ஆறாட்டு விழாவுடன் நிறைவு பெறுகிறது. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ramapuram Sree Rama Temple". www.vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Biju Mathew, தொகுப்பாசிரியர் (2013). Pilgrimage to Temple Heritage, Volume 1. Kerala, India: Biju Mathew, Info Kerala Communications Pvt Ltd.. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8192128443. https://books.google.com/books?id=nAt8AgAAQBAJ&q=Ramapuram. 
  3. 3.0 3.1 "Welcome to www.nalambalam.org". www.nalambalam.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.
  4. "Kottayam-Rama Temple-Oldest Temple in India-Nalambalam Darshanam". www.templeadvisor.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.
  5. Correspondent, Special. "Nalambala Darshan at Ramapuram". The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/nalambala-darshan-at-ramapuram/article7436738.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாபுரம்_ராமர்_கோயில்&oldid=3827111" இலிருந்து மீள்விக்கப்பட்டது