உள்ளடக்கத்துக்குச் செல்

மிட்டிலீனியன் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிட்டிலீனியன் கிளர்ச்சி
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 428-7
இடம் லெஸ்போஸ்
ஏதெனியன் வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ்,
மிதிம்னா,
டெனெடோஸ்
மிட்டிலீனி மற்றும் லெஸ்போசில் உள்ள பிற நகரங்கள், எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணியை ஓரளவு ஆதரித்தரவகள்
தளபதிகள், தலைவர்கள்
பேச்ஸ் சலேத்தஸ்,
[Alcidas],
பிறர்
கிமு 427 இல் கிளர்ச்சி அடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏதென்சு அரசில் பிரபலமான விவாதம் நடந்தது, அதில் மிட்டிலினின் வயதுவந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை அளிக்க சட்டசபை உத்தரவிட்டது, ஆனால் ஒரு நாள் கழித்து அந்த உத்தரவை மாற்றப்பட்டது.

மிட்டிலீனியன் கிளர்ச்சி (Mytilenean revolt) என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு நிகழ்வாகும். அப்போது லெஸ்போஸ் தீவையும் அதில் உள்ள மிட்டிலீனி நகரத்தையும் ஏதெனியன் பேரரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஏதென்சின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிட்டிலீனி கிளர்ச்சி செய்ய எண்ணம் கொண்டது. கிமு 428 இல், மிட்டிலீனியன் அரசாங்கம் எசுபார்த்தா, போயோட்டியா மற்றும் தீவில் உள்ள சில நகர அரசுகளுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபடத் திட்டமிட்டது. அதற்கேற்ப நகரத்தை பலப்படுத்துவதன் மூலம் கிளர்ச்சிக்குத் தயாராகி, நெடிய போருக்கான தளவாடங்களை சேகரித்தது. கிளர்ச்சி சதி பற்றி அறிந்த ஏதென்சு தன் கடற்படையைக் கொண்டு இந்த ஏற்பாடுகளில் குறுக்கிட்டது. அதன்பிறகு மிட்டிலினியர்கள் ஏதென்சிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதிகளை அனுப்பினர். ஆனால் அதே நேரத்தில் எசுபார்த்தாவிற்கும் இரகசியமாக தூதர்களை அனுப்பி ஆதரவைக் கோரினர்.

லெஸ்போஸ் தீவில் அனைத்து நகர அரசுகளும் ஏதென்சுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்ட நிலையில் மிதிம்னா நகரம் மட்டும் அதில் இருந்து ஒதுங்கி ஏதென்சுக்கு ஆதரவாகவே இருந்தது. இதனால் மிதிம்னாவை பிற நகரங்கள் நெருக்கத் துவங்கின. தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் கூட்டாளியான மிதினாவை மிட்டிலினியர்கள் அடிபணியவைக்க விரும்புவதை ஏதெனியர்கள் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக ஏதெனியன் கடற்படை மிட்டிலீனியை கடல் வழியாக முற்றுகையிட்டது. மிட்டிலீனிக்கு ஆதரவக ஒரு கடற்படையை தயார் செய்த ஸ்பார்டா பின்னர் ஏதெனியன் படையெடுப்பால் பயந்து, அந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது. இதற்கிடையில், லெஸ்போசில், 1,000 ஏதெனியன் ஹாப்லைட்டுகள் வருகைதந்து தரையிலும் தலைநகர் மிட்டிலீயை முற்றுகையிட்டனர். சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த முற்றுகை நீடித்தது. இறுதியாக ஸ்பார்டா கிமு 427 கோடையில் ஒரு கடற்படையை அனுப்பிய போதிலும், அது மிகவும் தாமதமாகவே வந்தது ஆனால் அது வந்து சேர்வதற்கு முன்பே மிட்டிலீயா சரணடைந்த செய்தி கேட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

மிலிட்டிலீனியர்கள் சரணடைந்ததை அடுத்து, அவர்களுக்கு என்ன தண்டனை விதிப்பது என்பது குறித்து ஏதென்சில் சூடான விவாதம் நடைபெற்றது. கிளியன் தலைமையிலான ஒரு பிரிவினர், மிலிட்டினி நகரத்தில் உள்ள அனைத்து ஆடவர்களையும் தூக்கிலிட்டு, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்க வேண்டும் என்று வாதிட்டனர். டியோடோடஸ் தலைமையிலான மற்றொரு பிரிவினர் மிதமான தண்டனையை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். முடிவில் கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆடவர்களுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. விவாதத்தின் முதல் நாளில் நகரத்தில் அனைத்து ஆண்களுக்கும் மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் நடந்த விவாதத்தில் ஒரு சேர அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில், முந்தைய தீர்ப்பு மாற்றப்பட்டு நகர ஆடவர்கள் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் 1,000 "தலைவர்கள்" (இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்பட்டாலும், ஒரு எழுத்தாளரின் தவறான வாசிப்பின் காரணமாக, அந்த எண்ணிக்கை உண்மையில் 30 ஐ நெருங்கியதாக நம்பப்படுகிறது) விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர்.

திட்டமும் ஏற்பாடுகளும்

[தொகு]

பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு முன்பே ஏதென்சின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கான கிளர்ச்சியை மேற்கொள்ள மிட்டிலீனிய அரசாங்கம் (இது சிலவர் ஆட்சிக்குழு ) கருதியது. ஆனால் அவர்கள் கிமு 430 களில் துவக்கத்தில் எசுபார்த்தாவை அணுகியபோது, எசுபார்த்தன்கள் அவர்களை பெலோபொன்னேசியன் கூட்டணியில் ஏற்பதற்கான இசைவை அளிக்கவில்லை. கிளர்ச்சியில் வெற்றிபெறுவதற்கு தேவையான எசுபார்த்தன் ஆதரவு இல்லாமையால், மிட்டிலினியர்களின் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.[1] இருப்பினும், 428 இல், மிட்டிலீனியன் தலைவர்கள் கிளர்ச்சிக்கான காலம் கனிந்துள்ளதாக கருதினர். மேலும் போயோட்டியா மற்றும் எசுபார்த்தா ஆகிய இரு அரசுகளும் கிளர்ச்சிக்கான திட்டமிடலில் உதவினர். கிளர்ச்சிக்கான முதன்மையான உந்துதலுக்கு ஒரு காரணம், லெஸ்போஸ் தீவு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மிட்டிலினியனின் விருப்பியதும் ஒன்றாகும்; ஏதென்ஸ் பொதுவாக தன் பேரரசின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுள்ள நகர அரசுகளை பிரித்து பல துணைப்பிரிவு நகரங்களாக உருவாக்குவதை ஆதரித்தது. அதனால் லெஸ்போஸ் தீவை ஒரே ஆட்சியின்கீழ் ஒருங்கிணைக்க மிட்டிலினியனை நிச்சயமாக அனுமதித்திருக்காது.[2] மேலும், ஏதெனியப் பேரரசிற்குள் தான் சொந்தமாக கடற்படை கொண்ட ஒரு சுதந்திர நாடுக்குரிய அந்தஸ்தை கொண்டதாக மிட்டிலீனின் விரும்பியது. ஏதெனியன் பேரரசுக்குள், இவர்கள் கிளர்ச்சி செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் ஏதென்சின் பெரும்பான்மையான கூட்டாளிகள் போல கப்பம் கட்டிவரும் சிற்றரசின் நிலைக்குத் தள்ளப்படலாம் என்ற கவலையையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.[3] எனவே, மிட்டிலினியர்கள் தங்கள் கோட்டைகளை வலுப்படுத்தத் தொடங்கினர் மற்றும் கருங்கடல் பகுதியிலிருந்து கூலிப்படைகள் மற்றும் பொருட்களை கொண்டுவரத் தொடங்கினர். இருப்பினும், அவர்கள் தங்கள் தயாரிப்பு ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்கு முன்பே, அவர்களின் திட்டங்களை ஏதெனியர்களுக்கு அந்த பிராந்தியத்தில் உள்ள அவர்களின் எதிரிகளான மிதிம்னியர்கள் மற்றும் டெனெடியன்கள் மற்றும் அந்த நகரத்தில் ஏதென்சின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிட்டிலீனியன் குடிமக்கள் குழுவால் காட்டிக் கொடுக்கப்பட்டன (அநேகமாக அவர்கள் அங்குள்ள சனநாயக ஆதரவாளர்கள்).[4]

கிளர்ச்சி

[தொகு]

துவக்க நகர்வுகள்

[தொகு]

அந்த நேரத்தில் பிளேக் நோயால் பாதிப்புகளை அடைந்திருந்த ஏதெனியர்கள், எதிர்பாராத நீண்ட போர்களினாலும் பெரும் நிதி நெருக்கடியில் இருந்தனர். அதனால் துவக்கத்தில் லெஸ்போசில் இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.[5] லெஸ்போசை ஒன்றிணைக்கும் திட்டங்களையோ அல்லது போருக்கான அவர்களின் தயாரிப்பு முயற்சிகளையோ கைவிட மிட்டிலினியர்கள் மறுத்தனர். இதனால் வேறுவழியின்றி ஏதெனியர்கள் இராணுவ பதிலடி கொடுப்பதற்காக மிட்டிலீனிக்கு கடற்படை ஒன்றை அனுப்பினர்; ஏதென்சு கூட்டணியின் கப்பற்படையில் பணியாற்றிய மிட்டிலீனியன் கப்பல்கள் அதன் குழுவினருடன் தடுத்து வைக்கப்பட்டன. மிட்டிலினியர்கள் அனைவரும் நகரத்திற்கு வெளியே நடக்கும் ஒரு சமயத் திருவிழாவில் கலந்து கொள்ளும் போது கடற்படை வர வேண்டும் என்பது துவக்கத்தில் தீட்டப்பட்ட திட்டமாகும். அப்படி வந்தால் ஏதெனியர்கள் நகரத்தின் கோட்டைகளைக் கைப்பற்றுவது எளிதாக இருக்கும் என்று கருதினர். இந்த திட்டம் பொதுவெளியில் நடத்தப்பட்ட ஏதெனியன் சட்டசபையில் வடிவமைக்கப்பட்டதால், அதை இரகசியமாக வைத்திருப்பது சாத்தியமாக இருக்கவில்லை. மேலும் மிட்டிலினியர்கள் ஏதெனிய கடற்படையின் அணுகுமுறை குறித்து போதுமான எச்சரிக்கை உணர்வைக் கொண்டிருந்தனர்.[4] திருவிழா நாளில், அவர்கள் நகரத்திலேயே தங்கியிருந்தனர். மதில் சுவர்களில் பலவீனமான பகுதிகள் என்று கருதும் இடங்களில் இரட்டைக் காவலர்களை காவலுக்கு இட்டனர். படைகளுடன் வந்த ஏதெனியர்கள், நகரம் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டனர். இதனால் மிட்டிலினியர்களின் கடற்படை சரணடைய வேண்டும் என்றும், நகரின் மதில் சுவர்களை இடிக்குமாறும் உத்தரவிட்டனர். மிட்டிலினியர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் துறைமுகத்திற்கு வெளியே ஏதெனியர்களுடன் போரிட தங்கள் கடற்படையை அனுப்பும் அளவுக்குச் சென்றனர். ஏதெனியர்கள் இந்த கடற்படையை விரைந்து தோற்கடித்து துறைமுகத்திற்கு விரட்டி அனுப்பியபிறகு, மிட்டிலினியர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர். போர்நிறுத்தத்துக்கும் ஏற்பாடு செய்தனர். மேலும் ஏதென்சுக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினர். எவ்வாறாயினும், இதை செய்வதன் மூலம், மிட்டிலீன் அரசாங்கம் ஏதென்சுடன் இணக்கமாக போவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக எசுபார்த்தா மற்றும் போயோட்டியாவுடனான அவர்களின் பேச்சுவார்த்தைகளானது நாட்களைத் தள்ளிப்போடுவதற்கான உத்தியாகும்.[4] பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு ஏதென்சுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கிளர்ச்சிக்கான ஆதரவைப் பெறுவதற்காக இரண்டாவது குழுவானது கமுக்கமாக எசுபார்த்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை தோல்வியும் மீண்டும் சண்டையும்

[தொகு]

ஏதென்சில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. ஏதெனியர்கள் லெஸ்போசில் இருந்து தங்கள் கடற்படையை திரும்பப் பெற்றால், மிட்டிலினியர்கள் விசுவாசமாக இருப்பதாக கூறினர்.[6] இந்த முன்மொழிவின் மறைமுக கோரிக்கையானது, ஏதெனியர்கள் மெதிம்னா தீவைக் கைவிடுவது என்பதாகும். ஏதெனியர்களால் இதைச் செய்ய முடியாது, ஏனெனில் தங்களின் பேரரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியின் சட்டப்பூர்வ உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு இது சமமாகும்.[7] அதன்படி, ஏதெனியர்கள், மிட்டிலினியாவின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் லெஸ்போசுக்குத் தூதர்கள் திரும்பிய பிறகு, லெஸ்போஸ் தீவின் அனைத்து நகரங்களும் மெதிம்னாவுக்கு ஆதரவாக உள்ள ஏதென்ஸ் மீது வெளிப்படையாகப் போரை அறிவித்தன.[8] மிட்டிலினியர்கள் ஒரு படையைத் திரட்டி ஏதெனியன் முகாமைத் தாக்க புறப்பட்டனர்; தொடர்ந்து நடந்த போரில் அவர்கள் சற்று சிறப்பான நிலையை அடைந்தாலும், அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்த விரும்பவில்லை. மேலும் இரவுக்கு முன் தங்கள் கோட்டைகளுக்கு பின்வாங்கினர். இந்த கட்டத்தில், தங்கள் எதிரிகளிடம் புது முயற்சி இல்லாமையால் ஊக்கமடைந்த ஏதெனியர்கள், தங்கள் கூட்டாளிகளிடமிருந்து துருப்புக்களை வரவழைத்து, அவர்கள் வந்தவுடன், மிட்டிலீன் துறைமுகத்தின் இருபுறமும் இரண்டு வலுவான முகாம்களை அமைத்தனர். இவற்றிலிருந்து அவர்கள் நகரத்தை கடல் வழியாக முற்றுகையிட்டனர் (மிட்டிலினியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஏதெனியன் கோட்டைகளுக்கு வெளியே உள்ள நிலப்பகுதிகள் அனைத்தையும் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்).

எசுபார்த்தாவின் திட்டங்கள்

[தொகு]

ஏதெனியன் முகாமின் மீதான மிட்டிலினியன் தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக, எசுபார்த்தா மற்றும் போயோட்டியாவைச் சேர்ந்த கப்பல்களில் அவர்களின் தூதர்கள் ஏதெனியர்களைக் கடந்து மிட்டிலினுக்குள் வந்தனர். எசுபார்த்தன் தலையீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டாவது குழு தூதுக்குழவை அனுப்புமாறு மிட்டிலீனியர்களை வற்புறுத்தினர் (எசுபார்த்தன்கள் மற்றும் போயேட்டியர்கள் கிளர்ச்சிக்கு முன்பே அனுப்பபட்டனர். ஆனால் அவர்கள் சில காலம் நகரத்திற்குள் நுழைய தடுக்கப்பட்டிருந்தனர்).[9] இந்த இரண்டாவது மிட்டிலீயனி தூதுக் குழுவினர் சூலை மாதம் முதல் ஒரு வாரத்திற்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் எந்த உடனடி உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை; எசுபார்த்தான்கள் மிட்டிலீன் தொடர்பான முடிவை ஒட்டுமொத்தமாக பெலோபொன்னேசியன் கூட்டணியின் முடிவுக்கு ஒத்திவைத்தனர். அக்கூட்டணியின் உறுப்பினர்கள் அந்த கோடையில் ஒலிம்பியாவில் கூடியது.[10] அந்தக் கூட்டத்தில், மிட்டிலீனிய தூதர்கள் ஒரு உரையை நிகழ்த்தினர். அதில் அவர்கள் தங்கள் கிளர்ச்சியின் பக்கம் உள்ள நியாயத்தை உரைத்தனர். மேலும் தற்போது ஏதென்சு பலவீனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டனர். மேலும் ஏதெனிய பேரரசை தாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.[11] இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு, எசுபார்த்தன்களும் அவர்களது கூட்டாளிகளும் லிஸ்பியன்களை தங்கள் கூட்டணியில் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தனர். மேலும் கிளர்ச்சிக்கு ஆதரவாக உடனடியாக ஏதென்சைத் தாக்குவதாக தெரிவித்தனர்.[12]

ஒலிம்பியாவில் தீட்டப்பட்ட திட்டங்களின் படி அனைத்து நேச நாடுகளும் தங்கள் படைகளை கொரிந்தின் பூசந்திக்கு அனுப்பி ஏதென்சில் நுழையத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டன.[13] அதன்படி எசுபார்த்தன் குழு முதலில் வந்து சேர்ந்தது. கொரிந்து வளைகுடாவில் இருந்து தரையிலும் கடலிலும் என ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் கப்பல்களை பூசந்தி முழுவதும் செலுத்தத் தொடங்கியது. எசுபார்த்தன்கள் இந்த பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டாலும், அதன் மற்ற கூட்டாளிகள் தங்கள் படைகளை மெதுவாகத்தான் அனுப்பினர்; அறுவடைப் பணிகள் நடந்து கொண்டிருந்தது, மற்றும் கூட்டாளிகள் தொடர் இராணுவப் பணிகளால் சோர்வடைந்திருந்தனர் (மே மாதத்தில் தொடங்கி அட்டிகா மீதான ஒரு மாத காலப் படையெடுப்பிற்காக ஏற்கனவே கோடையில் அழைக்கப்பட்டனர்).[14] இதற்கிடையில், ஏதென்சின் மீதான தாக்குதலுக்கு பெலோபொன்னேசியனின் கூட்டணியினர் தயாராவது, ஏதென்சு மிகவும் பலவீனமடைந்ததுள்ளது என்ற மிட்டிலினியர்களின் கூற்று போன்றவற்றை அறிந்த ஏதெனியர்கள், பெலோபொன்னீசியாவின் கரையோரத்தை கண்காணிக்க 100 கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையைத் தயார் செய்தனர். அரசின் வளங்கள் ஏற்கனவே தேய்ந்திருந்ததால், கடற்படையைத் தயார்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் தேவைப்பட்டன; கப்பற்படையை முழுமையாகத் தாயார்படுத்த போதுமான தீட்சுகள் (ஏழைக் குடிமக்கள்) கிடைக்காததால், சூகிடே (பொதுவாக ஹாப்லைட்டுகளாகப் போராடும் நில உரிமையாளர்கள்) மற்றும் மெட்டிக்குகள் (குடியியுரிமை அற்ற வெளிநாட்டினர்) ஆகிய இரு தரப்பினரும் துடுப்புத் துழாவுவர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.[15] பெலோபொன்னேசியன் கடற்கரையில் எசுபார்த்தன் கடற்படையினர். கண்கானித்தனர். மேலும் மிட்டிலீனில் உள்ள நாற்பது கப்பல்களும், கோடையில் பெலோபொன்னீசியாவை சுற்றி வந்த நாற்பது கப்பல்களையும் ஏதெனியர்களால் ஒன்று திரட்ட முடியும் என்று அறிந்தனர்.[16] ஏதெனியர்களின் பலத்தை பார்த்து ஏமாற்றமடைந்த எசுபார்த்தன் அணியினர், கோடையில் தாக்குதலை நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்தனர்.

லெஸ்போசில் சண்டை

[தொகு]

எசுபார்த்தன் படை போருக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்த போது, மிட்டிலினியன்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மிதிம்னா மீது தாக்குதலை நடத்தினர், அந்த நகரம் தீவிலிருந்தே தங்களைக் காட்டிக் கொடுக்கப்பதாக எண்ணினர்.[17] எவ்வாறாயினும், இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. மிட்டிலினியர்கள் நகரம் செல்லத் திரும்பினர், மெதிம்னாவுக்கு அருகிலுள்ள பல கூட்டாளிகளின் கோட்டைகளை வலுப்படுத்த உதவுவதற்காக வழியில் நின்றனர். மைட்டிலினியர்கள் சென்றவுடன், தீவில் இருந்த நகரங்களில் ஒன்றான ஆன்டிசாவுக்கு எதிராக மிதிம்னியர்கள் அணிவகுத்துச் சென்றனர், மேலும் அந்த நகரத்தின் சுவர்களுக்கு வெளியே சண்டையிட்டு ஆன்டிசான்கள் மற்றும் அவர்களது கூலிப்படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

இந்த கட்டத்தில், ஏதெனியர்கள், லெஸ்போசில் மைட்டிலினியர்களை சமாளிக்க தங்கள் படை போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து, கூடுதலாக 1,000 ஹாப்லைட்டுகளை வரவழைத்தனர். லெஸ்போசில் உள்ள ஏதெனியர்கள் இப்போது மைட்டிலீனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். மேலும் நகரத்தைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டி, நகரத்தை முழுமையாக முற்றுகையிட்டனர்.

முற்றுகையும் சரணடைதலும்

[தொகு]

தற்போதைய நிதி நெருக்கடி நிலையிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் முற்றுகைக்கான செலவுகளை சமாளிக்க, ஏதெனியர்கள் இரண்டு அசாதாரண நடவடிக்கைகளை செய்யவேண்டிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். முதலில், அவர்கள் தங்கள் சொந்த குடிகள் மீது ஈஸ்போரா அல்லது நேரடி வரி விதித்தனர்.[18] பண்டைய கிரேக்கர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மிகவும் தயக்கம் காட்டினர். இது தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்பட்டது, உண்மையில் ஏதென்சில் இதுபோன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.[19] அதே நேரத்தில், ஏதென்ஸ் தனது பேரசுக்கு உட்பட்ட அரசுகள் செலுத்தவேண்டிய திரைத் தொகையை அதிகரிப்பதாக அறிவித்தது. மேலும் வழக்கமாக திரை செலுத்தும் காலத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே புதிய தொகையை வசூலிக்க பன்னிரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன; இந்த நடவடிக்கை பவலாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில் இந்த கப்பல்களுக்கு கட்டளையிடும் தலைவர் ஒருவர் காரியாவில் வசூல் செய்ய முயன்றபோது கொல்லப்பட்டார்.[20]

கிமு 427 கோடையில், எசுபார்த்தன்களும் அவர்களது கூட்டாளிகளும் ஏதென்சின் செல்வ வளத்தைக் கெடுக்கவும், மிட்டிலீனில் முற்றுகையிலிருந்து அவர்களை விலக்கவும் தரையிலும் கடலிலும் என ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். அந்த ஆண்டு அட்டிகாவின் மீதான வருடாந்திர படையெடுப்பு ஆர்க்கிடாமியன் போரில் இரண்டாவது பெரிய படையெடுப்பாக இருந்தது.[21] இந்தப் படையெடுப்பு நடந்து கொண்டிருந்தபோது, எசுபார்த்தா நவார்ச் அல்சிடாசின் தலைமையில் 42 கப்பல்கள் மிட்டிலீனுக்கு அனுப்பப்பியது. ஏதெனியர்கள் தரைப் படையெடுப்பை எதிர்த்து அதிலேயே மூழ்கிவிடுவார்கள். அதனால் அல்சிடாஸ் மற்றும் அவனது கடற்படைமீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.[21]

இருப்பினும், மிட்டிலீனியை முற்றுகையில் இருந்து மீட்க எசுபார்த்தன்களின் கடற்படை வருவதற்கான காலம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. எசுபார்த்தன் பிரதிநிதியான சலீத்தஸ் என்பவர் மிலிட்டிலீனி நகருக்கு குளிர்காலத்தின் முடிவில் இரகசியமாக வந்து எசுபார்த்தன் கடற்படை ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும் முற்றுகையினால் மனம் தளரவேண்டாம் என்றும் உற்சாமூட்டினார். மேலும் கடற்படையின் வருகையை எதிர்பார்த்து அங்குள்ள பாதுகாப்புக்கு தலைமை தாங்கினார்.[22] இருப்பினும், கோடையின் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் நகரத்தில் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. மேலும் கடற்படை இன்னும் வந்துசேராததால், வேறு வழியின்றி ஒரு தாக்குதல் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.[23] அதன்படி ஹாப்லைட் கவசம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் இதற்கு முன்பு இந்தப் போருக்கான தயாரிப்புகளின்போது இலகுரக துருப்புக்களாக மட்டுமே பணியாற்றியிருந்தனர். இருப்பினும், மக்கள் ஆயுதம் ஏந்தியவுடன், தங்கள் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிய மறுத்து, அதிகாரிகள் எஞ்சிய உணவுப் பொருட்களை விநியோகிக்குமாறு கோரினர், இவ்வாறு செய்யப்படாவிட்டால், ஏதெனியர்களுடன் தாங்களாகவே பேச்சுவார்த்தைக்கு வருவதாக அச்சுறுத்தினர். தங்கள் தலையீடு இல்லாமல் சமாதான முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அது அவர்களுக்கு ஆபத்தானது என்பதையும் உணர்ந்த நகர அரசாங்கத்தினர், ஏதென்ஸ் தளபதியைத் தொடர்புகொண்டு, ஏதென்சில் தங்கள் மீதான வழக்கை விசாரித்து முடிவு எடுக்கும்வரை மிட்டிலீனியர்கள் யாரையும் சிறையில் அடைக்கப்படக்கூடாது, அடிமைப்படுத்தப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் சரணடைந்தனர்.

இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அல்சிடாஸ் மெதுவாகவும் கவனமாகவும் தனது கடற்படையுடன் முன்னேறி, பெலோபொன்னீசை சுற்றி வளைப்பதில் அதிக நேரத்தை வீணடித்தார். ஆனால் மிட்டிலீனி நகரம் வீழ்ந்துவிட்டதை அறிந்த சில நாட்களுக்குப் பிறகு ஐயோனியா கடற்கரையில் உள்ள எரித்ரேயைவுக்குத் திரும்பின் சென்றனர்.[24] இந்த கட்டத்தில், எசுபார்த்தாவின் எலிஸ் குழுவின் தளபதி, மிட்டிலீனில் ஏதெனியர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று வாதிட்டார், அவர்கள் அண்மையில்தான் நகரத்தை கைப்பற்றியதால், நகரவாசிகள் அவர்களின் பாதுகாப்பில் இருந்து விலகி, திடீர் தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளது என வாதிட்டார்.[25] எவ்வாறாயினும், அல்சிடாஸ் அத்தகைய ஆபத்தான செயலை செய்ய விரும்பவில்லை. மேலும் பேரரசில் கிளர்ச்சியைத் தூண்டும் தளமாக உள்ள சில ஐயோனியன் நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்தையும் நிராகரித்தார். உண்மையில், மைட்டிலீனி சரணடைந்ததை அறிந்தவுடன், அல்சிடாசின் முதன்மை இலக்கு ஏதெனியன் கடற்படையை எதிர்கொள்ளாமல் நாடு திரும்புவதாகும், அதன்படி அவர் அயோனியன் கடற்கரையில் தெற்கு நோக்கி பயணம் செய்யத் தொடங்கினார். கிளாரசுக்கு வெளியே அவர் ஏதெனியன் செய்திக் கப்பல்களான பரலஸ் மற்றும் சலாமினியாவில் காணப்பட்டன. அவையும் ஏதெனியன் கடற்படையின் பின்னால் பின்தொடர்ந்து மிட்டிலினிலிருந்து புறப்பட்டது. இதற்குப் பிறகு, ஏதெனியர்கள் லெஸ்போசில், மீதமுள்ள கிளர்ச்சி நகரங்களை மீட்டனர்.[26]

ஏதென்சில் விவாதம்

[தொகு]

பேச்ஸ் மிட்டிலீனை அடிபணியச் செய்த பிறகு, தனது படைகளின் பெரும்பகுதியை ஏதென்சுக்குத் திருப்பி அனுப்பினார். மேலும் கிளர்ச்சியில் குறிப்பிடதக்க குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மிட்டிலினியர்களையும் கைதுசெய்யப்பட்ட எசுபார்தாவின் ஜெனரல் சலேத்தசையும் ஏதென்சுக்கு அனுப்பினார். சலேத்தசுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது உயிருக்கு ஈடாக, பிளாட்டீயாவை முற்றுகையிட்டுள்ள எசுபார்த்தன் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார்.[27] ஏதென்சில் உள்ள கைதிகளையும், லெஸ்போசில் உள்ள பிற மிட்டிலினியர்களையும் என்ன செய்வது என்பது குறித்து சட்டசபை தன் கவனத்தைத் திருப்பியது. ஏதெனியன் சனநாயக வரலாற்றில் மிகவும் பிரபலமான விவாதங்களில் ஒன்றாக இது ஆனது. இது சட்டமன்றத்தின் வாத பிரதிவாதங்களின் உள்ளடக்கத்தையும், ஒருவேளை வாதத்தில் இடம்பெற்ற சில உண்மையான சொற்களையும் துசிடிடீஸ் பதிவு செய்த இரண்டு சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.[28] எனவே, விவாதம் மிகவும் அறிவார்ந்த பகுப்பாய்விற்கு உட்பட்டது. கிளர்ச்சியின் சூழ்நிலைகள், அந்த நேரத்தில் ஏதென்சின் உள் அரசியல் ஆகிய இரண்டையும் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

தண்டனை

[தொகு]

துசிடிடீஸ் பதிவு செய்த விவாதம் மன்றத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில், துசிடிடீஸ் சுருக்கமாகக் கூறும் விவாதங்களின்படி, ஏதெனியர்களுக்கு ஏற்பட்ட கோபத்தில் மிட்டிலின் வயதுவந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை அளித்தும், பெண்கள், குழந்தைகளை அடிமைகளாக்கவேண்டும் என்று கூறினர்.[29] இந்தக் கிளர்ச்சியானது எசுபார்த்தன் கடற்படையை ஐயோனியன் கடற்பரப்புக்குள் கொண்டு வந்ததாக குறிப்பாக குடிமக்கள் கோபமடைந்தனர். இந்த சாதாரண சூழ்நிலைக்கு இந்தக் கிளர்ச்சி காரணமாயிற்று. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த எதிரி கடற்படையும் இப்பகுதிக்குள் பயணிக்கவில்லை என்றனர். சட்டசபையின் முடிவுக்கு இணங்க, மிட்டிலீன் ஆட்களை தூக்கிலிட பேச்சசுக்கு உத்தரவுகளை எடுத்துக் கொண்டு மிட்டிலீனுக்கு ஒரு கப்பல் அனுப்பப்பட்டது.

இருப்பினும், அடுத்த நாள், ஏதெனியர்களின் தீவிரக் கோபம் சற்று தணிந்ததால், பல குடிமக்கள் இரண்டாவது தீர்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.[30] இந்தப் போக்கினால் மக்கள் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரிட்டோனியர்களைக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். அக்கூட்டத்தில், முந்தைய நாள் அரசாணையை ஆதரித்தவர்களுக்கும், இலேசான தண்டனை வழங்கவேண்டும் என்று கோரியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிளியோன் தான் சார்பை காராசாரமாக எடுத்துக் கூறினார். அவருக்கு எதிராக டியோடோட்டஸ் என்பவர் மிட்டிலீனியர்களுக்கு இந்தக் கொடிய தண்டனையை விதிப்பது ஏதென்சுக்கே கெடுதல் என்று வாதம் செய்தார். இவர் சொன்னதை சட்டசவை ஏற்றுக் கொண்டு முந்தையநாள் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து மறு உத்தரவைப் பிறப்பித்தது. புதிய உத்தரவுடன் மற்றொரு கப்பலை அனுப்பியது. முதல் உத்தரவு கிடைத்து அதன்படி தண்டனையை நிறைவேற்ற தயாராக இருந்தார் பாக்கெஸ். ஆனால் புதிய உத்தரவு தகுந்த நேரத்தில் வந்து சேர்ந்து மிட்டிலீனியர்களைக் காத்தது. ஆனால் சிறைப்படுத்தப்பட்டு ஏதென்சுக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்டிலீயக் கிளர்ச்சித் தலைவர்கள் சுமார் முப்பது பேர் எசுபார்த்தாவின் சானீத்தசும் மரணதண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

பின்விளைவுகள்

[தொகு]

மிட்டிலீனின் குடிமக்கள் மரணதண்டனையிலிருந்து தப்பித்தாலும், கலகக்கார லெஸ்பியன்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.[31] தீவில் உள்ள அனைத்து வேளாண் நிலங்களும், மிதிம்னேயன்களுக்கு சொந்தமானவை தவிர, மற்றவை பறிமுதல் செய்யப்பட்டு 3,000 இடங்களாக பிரிக்கப்பட்டன. அவை லெஸ்பியர்களுக்கு ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்பட்டன. இவற்றில் 300 இடங்கள் கடவுளுக்கு நிவந்தமாக அளிக்கப்பட்டன. மேலும் குத்தகை நிலத்தில் ஆண்டுதோறும் சேகரிக்கப்பட்ட 10 தாலந்துகள் ஏதெனியன் கருவூலத்திற்குச் சென்றன. மீதமுள்ளவை ஏதென்சால் இங்கு நிறுவப்பட்ட குடியேற்றத்துக்குச் சென்றது.[32] ஐயோனியன் நிலப்பரப்பில் உள்ள அனைத்து மைட்டிலீனின் உடைமைகளும் ஏதென்சால் பறிமுதல் செய்யப்பட்டன. மைட்டீலியன் நகரத்தின் மதில் சுவர்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அதன் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏதெனியர்களுக்கு, இந்த தீர்வு பல பிரச்சனைகளை தீர்த்தது; ஏதெனியக் குடியேற்றமான காரிசன் லெஸ்போசுக்கான பாதுகாப்பை வழங்கும். மேலும் ஏதென்சில் அங்கு குடியேற்றப்பட்டவர்கள் இல்லாததால், நகரத்தின் அதிக மக்கள்தொகை மற்றும் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உணவளிக்க கருவூலத்துக்கு ஏற்படும் சுமை குறைந்தது.[33] கி.மு. 420களின் நடுப்பகுதியில் காரிசன் குடியேறிகள் நாடு திரும்பினர்.[33] ஆனால் ஏதென்சு அத்தீவு பாதுகாப்பாக உள்ளது என்று தவறாகக் கருதியது; கிமு 412 இல், சைராக்யூசில் ஏதெனியப் படைகளுக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, பலவீனமடைந்த ஏதெனியர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்த தீவுகளில் முதலிடத்தில் லெஸ்போஸ் இருந்தது.[34]

குறிப்புகள்

[தொகு]
  1. Unless otherwise noted, all details regarding the events leading up to the revolt are drawn from Thucydides, The Peloponnesian War, 3.2.
  2. Kagan, The Peloponnesian War, 100-101
  3. Legon, Megara and Mytilene, 201
  4. 4.0 4.1 4.2 Kagan, The Peloponnesian War, 101
  5. Unless otherwise noted, all details regarding the Athenian reaction and the initial battle are drawn from Thucydides, The Peloponnesian War, 3.3-4.
  6. Thucydides, The Peloponnesian War, 3.4
  7. Kagan, The Peloponnesian War, 101-102
  8. Unless otherwise noted, all details regarding the early fighting on Lesbos are drawn from Thucydides, The Peloponnesian War, 3.5-6.
  9. Thucydides, The Peloponnesian War, 3.5
  10. Kagan, The Peloponnesian War, 102
  11. Thucydides, The Peloponnesian War, 3.9-14
  12. Thucydides, The Peloponnesian War, 3.15
  13. Unless otherwise noted, all details regarding the Peloponnesians' actions and the Athenian response are drawn from Thucydides, The Peloponnesian War, 3.15-16.
  14. Kagan, The Peloponnesian War, 100
  15. Kagan, The Peloponnesian War, 103
  16. Thucydides, The Peloponnesian War, 3.13
  17. Unless otherwise noted, all details regarding the fighting on Lesbos are drawn from Thucydides, The Peloponnesian War, 3.18.
  18. Thucydides, The Peloponnesian War, 3.19
  19. Kagan, The Peloponnesian War, 104-5
  20. Kagan, The Peloponnesian War, 104
  21. 21.0 21.1 Thucydides, The Peloponnesian War, 26.
  22. Thucydides, The Peloponnesian War, 3.25
  23. Unless otherwise noted, all details regarding the proposed breakout and the surrender are drawn from Thucydides, The Peloponnesian War, 3.27-28.
  24. Thucydides, The Peloponnesian War, 3.29
  25. Unless otherwise noted, all details regarding Alcidas' campaign in the Aegean are drawn from Thucydides, The Peloponnesian War, 3.30-33.
  26. Thucydides, The Peloponnesian War, 3.35
  27. Thucydides, The Peloponnesian War, 3.36
  28. Wasserman, Post-Periclean Democracy in Athens, 27
  29. Unless otherwise noted, all details regarding the first day's debate are drawn from Thucydides, The Peloponnesian War, 3.36.
  30. Unless otherwise noted, all details regarding events leading up to Cleon's speech are drawn from Thucydides, The Peloponnesian War, 3.36.
  31. Unless otherwise noted, all details regarding the sanctions imposed on Lesbos are drawn from Thucydides, The Peloponnesian War, 3.50.
  32. See Kagan, The Archidamian War, 166 for the sum and destination of the money raised from the land dedicated to the gods.
  33. 33.0 33.1 Kagan, The Archidamian War, 166
  34. Legon, Megara and Mytilene, 211