உள்ளடக்கத்துக்குச் செல்

மெட்டிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய கிரேக்கத்தில், மெட்டிக் (Metic) என்பவர்கள் ஏதென்சில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு மக்களாவர். இவர்கள் கிரேக்க நகர அரசில் வசிக்கும் குடிமக்களுக்கான உரிமைகளைப் பெறாதவர்களாவர்.

தோற்றம்

[தொகு]

ஏதென்சில் வெளிநாட்டவரின் குடியேற்றத்தின் வரலாறு தொன்மையான காலத்திற்கு முந்தையது. சோலோன் தனது நகரத்திற்கு கைவினை பணிக்காக இடம்பெயர்ந்துவந்த வெளிநாட்டவர்களுக்கு ஏதெனியன் குடியுரிமையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. [1] [2] இருப்பினும், சோலோனின் காலத்தில் மெட்டிக் என்ற நிலை இல்லை. [3]

செவ்வியல் ஏதென்சில் மெட்டிக்குகள்

[தொகு]

கிமு 431 இல் பெலோபொன்னேசியன் போரின் தொடக்கத்தில் அட்டிகாவின் மக்கள்தொகையில் ஒரு மதிப்பீட்டின்படி, மெட்டிக் ஆண்களின் தொகை ~25,000 ஆக இருந்தது. இது மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்காகும். திரேசு மற்றும் லிடியா போன்ற கிரேக்கம் அல்லாத இடங்களிலிருந்து குடியேறியவர்கள் குறித்த பதிவுகள் இருந்தாலும், பெரும்பான்மையான மெட்டிக்குகள் அருகிலுள்ள நகரங்களில் இருந்து பொருளாதார வாய்ப்புகளைத் தேடியோ அல்லது துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடியோ ஏதென்சுக்கு வந்திருக்கலாம். [4]

மற்ற கிரேக்க நகர அரசுகளில் கொரிந்தைத் தவிர, வெளிநாட்டினர் குறைவாகவே இருந்தனர். இருப்பினும் அவர்களின் சட்ட ரீதியான நிலை சரியாகத் தெரியாது. எசுபார்த்தா மற்றும் கிரீட்டில், சில விதிவிலக்குகளுடன் ஒரு பொது விதியாக, வெளிநாட்டவர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. தெசலி, சிராக்கூசா, மாக்கெடோனியா போன்ற நகரங்களில் உள்ள சர்வாதிகாரிகள் மற்றும் அரசர்களின் அரசவையில் குடியேறியவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் நிலை ஆட்சியாளரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கல்கள் காரணமாக, மெடிக் என்ற சட்டச் சொல் செவ்வியல் ஏதென்சுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. அந்த நேரத்தில் கிரேக்கத்தின் மிகப்பெரிய நகரமான ஏதென்சில், அவர்கள் குடிமக்களின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியாக இருந்தனர். குடியேற்றவாசிகள் மற்றும் முன்னாள் அடிமைகள் என இரண்டு முக்கிய குழுக்களுக்கு இந்த நிலை பொருந்தும். அடிமைகள் எப்பொழுதும் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் விருப்பமில்லாமல் குடியேறியவர்கள் என்று கருதலாம். அடிமைகள் கிட்டத்தட்ட கிரேக்கம் அல்லாத மொழி பேசும் பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். சுதந்திர மெடிக்குகள் பொதுவாக கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் அவர்கள் கிரேக்கத்தின் தொலைதூரப் பகுதிகளை விட கிரேக்க முதன்மை நிலப்பரப்பில் இருந்து வந்தவர்களாவர்.

பொருளாதாரத்தைக் காட்டிலும் முதன்மையாக கலாச்சாரத்தின் காரணமாக மெட்டிக்குகள் குறைந்த சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். இவர்களில் சிலர் ஏழை கைவினைஞர்களாகவும் முன்னாள் அடிமைகளாகவும் இருந்தனர், மற்றவர்கள் நகரத்தின் பணக்காரர்களில் சிலராகவும் இருந்தனர். குடியுரிமை என்பது பரம்பரை சார்ந்த விஷயமே பிறந்த இடம் பொருட்டு அல்ல என்பதால், மெட்டிக் என்பவர் குடியேறியவராகவோ அல்லது அவரின் வழித்தோன்றலாகவோ இருக்கலாம். குடும்பமானது பல தலைமுறைகளாக நகரத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்களுக்கு குடியுரிமையை நகரம் வழங்க தேர்ந்தெடுக்கும் வரை, மெட்டிக்குகள் குடிமக்களாக கருதப்படவில்லை. இவர்களுக்கு குடியுரிமை அரிதாகவே அளிக்கப்பட்டது. கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அத்தகைய குடியிருப்பாளர்கள் முற்றிலும் "உள்ளூர்" குடிமக்களிடமிருந்து பிரித்தறிய முடியாதவராக இருக்கலாம். என்றாலும் இவர்களுக்கு அரசியலிலும் சமூகத்திலும் எந்தப் பங்கும் அளிக்கப்படவில்லை. ஆனால் நகரத்தின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றனர்.

மெட்டிக்குகள் பொதுவாக குடியுரிமையின் கடமைகளை அதற்கான சலுகைகள் எதுவும் இல்லாமல் மேற்கொள்ள கொள்ளவேண்டி இருந்தது. குடிமக்களைப் போலவே, இவர்களும் இராணுவ சேவையைச் செய்ய வேண்டியிருந்தது. வரிகளை செலுத்த வேண்டிர்ருந்தது. போர் காலங்களில் இவர்களிடம் சொத்துவரி என்று கூடுதலாக வசூலிக்கப்பட்டது. அந்நியர்களான இவர்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதால் பாதுகாப்பு வரி என்று ஒரு வரியும் இவர்களுக்கு விதிக்கப்பட்டது. ஓரளவு செல்வந்தர்களாக இருக்கும் மெட்டிக்குகளுக்கு, சிறப்பு வரி விதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, போர்க்கப்பலுக்கு பணம் செலுத்துதல் போன்றவை ஆகும். ஏதென்சில் குடியுரிமை பெற்றவர்களுக்கு நீதிபதியாதல் சட்டசபை உறுப்பினராதல் போன்ற அரசு பதவிகளை ஏற்கும் தகுதியை அளித்தது. இது உழைக்கும் மக்களுக்குமானதாக இருந்தது. அவசர காலங்களில் நகர அரசு குடிமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும். இந்த உரிமைகள் எதுவும் மெடிக்குகளுக்கு இல்லை. சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டாலன்றி, இவர்கள் பண்ணை அல்லது வீடாக இருந்தாலும், அட்டிகாவில் சொந்த இடம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. பூமிக்கு அடியில் உள்ள செல்வம் அரசியல் உரிமை சமூகத்திற்கு சொந்தமானது என்றதால், வெள்ளி சுரங்கங்களில் வேலை செய்வதற்கான ஒப்பந்தத்தில் அவர்களால் கையெழுத்திட முடியாது. மெட்டிக்குகள் மெட்டோகியோன் எனப்படும் வரிக்கு உட்பட்டவர்களாவர். மெட்டிக் ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆண்டுக்கு பன்னிரண்டு டிராக்மாக்கள் மற்றும் சுதந்திரமான மெட்டிக் பெண்களுக்கு ஆறு டிராக்மாக்கள் என வரி என விதிக்கப்பட்டது. [5] மெட்டோகியோன் வரியைத் தவிர, அகோராவில்அகோராவில் பொருட்களை விற்க விரும்பும் ஏதெனியர் அல்லாதவர்களான, மெட்டிக்குகள் உட்படவர்கள், செனிகா எனப்படும் மற்றொரு வரி செலுத்தவேண்டியவர்களாக இருந்தனர் எனத் தெரிகிறது. [6]

மெடிக்குகள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நீதிபதிகளாக பணியாற்ற தடைசெய்யப்பட்டிருந்தாலும், இதர குடிமக்களைப் போலவே நீதிமன்றங்களுக்குச் செல்லும் அணுகலை இவர்கள் பெற்றனர். இவர்கள் மற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். ஏராளமான புலம்பெயர்ந்தோர் ஏதென்சுக்கு வணிகம் செய்வதற்காக வந்தனர். மேலும் உண்மையில் ஏதெனியன் பொருளாதாரத்திற்கு அவசியமானவர்களாகவும் இருந்தனர். சட்டத்தின் படி வணிக ரீதியான தகராறுகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் அது கடுமையான இழப்பாக இருந்திருக்கும். அதே சமயம் குடிமக்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் இவர்களுக்கு இல்லை. மெட்டிக்குகள் பல்வேறு குற்றங்களுக்காக அடிமைப்படுத்துதலுக்கு ஆளாயினர். இவர்களுக்குரிய குற்றங்களில் மெட்டோய்கான் வரி செலுத்தாதது போன்ற கடமை தவறியவர்களாக இருக்கலாம் அல்லது ஏதென்சின் குடிமகனை திருமணம் செய்துகொள்வது அல்லது தங்களைக் குடிமக்கள் என்று பொய்யாக கூறிக்கொள்வது போன்றவையாக இருக்கலாம்.

கிரேக்க நகர அரசில் வாழவரும் மெட்டிக்குகள் அவர்கள் வசிக்கும் டெம் (உள்ளூர் சமூகம்) இல் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் நகரில் உள்ள தங்கள் புரவலர் அல்லது பாதுகாவலராக ஒரு குடிமகனைக் குறிப்பிடவேண்டும். ஏதெனியர்கள் இந்த கடைசி விசயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டனர். புரவலர் இல்லாத ஒரு மெடிக், சிறப்பு வழக்குக்கு உள்ளாக நேரிடும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவனரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரே அடிமையாக விற்கப்படுவார். குடியுரிமை மிகவும் அரிதாகவே மெட்டிக்குகளுக்கு வழங்கப்பட்டது. நகர வாழ்க்கையின் மையமான திருவிழாக்களில் அனைத்து மெட்டிக்களும் பங்கேற்க முடிந்தது.

மெட்டிக் மற்றும் குடிமகன் இடையேயான வேறுபாடு எப்போதும் தெளிவாக இல்லை. தெருவில் குடிமகனை மெட்டிக்ககை அல்லது அடிமையை வேறுபடுத்திக்காட்ட எந்த உடல் அடையாளங்களும் இருக்கவில்லை.

கிமு 4 ஆம் நூற்றாண்டில் மெட்டிக் என்ற சொல் அதன் தனித்துவமான சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கத் தொடங்கியது.

குறிப்பிடத்தக்க மெட்டிக்குகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. The poetics of appearance in the Attic korai, Mary Clorinda Stieber Page 134 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-70180-2
  2. Athenian democracy, Peter John Rhodes Page 31 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7156-3220-5 (2004)
  3. Watson, James (2010). "The Origin of Metic Status at Athens". The Cambridge Classical Journal 56: 265. doi:10.1017/S1750270500000348. 
  4. Renshaw, James (2008). In Search of the Greeks. London: Bristol Classical Press. pp. 201, 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-8539-9699-3.
  5. Kennedy, Rebecca Futo (2014). Immigrant Women in Athens: Gender, Ethnicity and Citizenship in the Classical City. Page 2.
  6. Kennedy, Rebecca Futo (2014). Immigrant Women in Athens: Gender, Ethnicity and Citizenship in the Classical City. Page 9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டிக்&oldid=3419464" இலிருந்து மீள்விக்கப்பட்டது