மலபார் சிறிய காட்டு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்தில் மலபார் சிறிய காட்டு ஆந்தை

மலபார் சிறிய காட்டு ஆந்தை (Malabar Jungle owlet, அறிவியல் பெயர்: Glaucidium radiatum malabaricum) என்பது தென்னிந்தியா குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட ஒரு ஆந்தை ஆகும். இது சிறிய காட்டு ஆந்தையின் கிளை இனமாக கருதப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மைனா அளவுள்ள இது சுமார் 20 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு மஞ்சள் தோய்ந்த கொம்பு நிறத்திலும், விழிப்படலம் நல்ல மஞ்சள் நிறத்திலும், கால்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது சிறிய, குறுகிய, வட்டமான தலை உடையது. உடலின் மேற்பகுதி ஆழ்ந்த பழுப்பு நிறமாகத் தெளிவான இளங் கருஞ்சிவப்புப் பட்டைகளுடன் காணப்படும். மோவாய், நடுமார்பு, வயிறு ஆகியன வெண்மை நிறத்தில் இருக்கும். உடலின் பிற கீழ்ப்பகுதிகள் ஆலிவ் பழுப்பு நிறப் பட்டைகளோடு கூடிய வெண்மை நிறத்தில் இருக்கும். இறக்கை அடியில் காணப்படும் கருஞ்சிவப்புப் பகுதி பறக்கும்போது தெளிவாகத் தெரியும். இவற்றில் பாலின வேறுபாடு பெரிதாக இல்லை.[1] இப்பறவையை முழு இனம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.[2]

வாழ்விடமும் பரவலும்[தொகு]

மலபார் சிறிய காட்டு ஆந்தையானது தென்னிந்தியாவின் கேரள, கருநாடக மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் தேக்கு, மூங்கில் மரக் காடுகளை சார்ந்து திரிகின்றது.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

இவை தனித்தோ, இணையாகவோ காலை மாலை நேரங்களில் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு இரை தேடும். மேக மூட்டமான நாட்களில் பகல் முழுதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். பகலில் பிற பறவைகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க மரக் கிளைகளில் இலைகளின் மறைவில், மரப் பொந்துகளில் மறைந்து இருக்கும். யாரேனும் நெருங்கினால் இறக்கையை அடித்து பறந்து வேறொரு மரத்தில் அமர்ந்து தலையை திருப்பி வந்தவரின் நடவடிக்கையை ஆராயும். இவை வால்காக்கை, நீண்டவால் கரிச்சான் ஆகியவற்றுடன் சேர்ந்தும் இரை தேடக் காணலாம். வெட்டுக்கிளி சிள் வண்டு, பெரிய பூச்சிகள், நத்தைகள், சிறு பறவைகள் ஆகியவற்றை இரையாகத்தேடித் தின்னும்.[1] கோ குக் கோ ஓகுக் என ஐந்து வினாடிகள் தொடர்ந்து கத்தும்.

இதன் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் மே வரை. தரையில் இருந்து மூன்று மூதல் ஐந்து மீட்டர் உயரத்தில் கூடமைக்கும். குக்குறுவான் மரங்கொத்தி ஆகியவை முன்பே குடைந்த பொந்துகளை கூட்டுக்குப் பயன்படுத்தும்.[3] மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 266-267. 
  2. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 245. 
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம், பக்கம் எண்:78