உள்ளடக்கத்துக்குச் செல்

போர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு என்பது, 1619ம் ஆண்டில், இரண்டாம் சங்கிலி, அல்லது சங்கிலி குமாரன் பகர ஆளுனனாக யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த காலத்தில், போர்த்துக்கேயர், தளபதி பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் யாழ்ப்பாணத்தின் மீது நடத்திய படையெடுப்பைக் குறிக்கும். இப்போரில் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதுடன், சங்கிலியும் கைது செய்யப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்பட்டான். யாழ்ப்பாண இராச்சியமும், போர்த்துக்கேய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் போர்த்துக்கேயப் பேரரசின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. இதன் மூலம் பல நூற்றாண்டுகள் முழு இறைமையுள்ள அரசாகவும், சிற்றரசாகவும் விளங்கிய தமிழ் அரசு, அந்நியர் வசமானது. இது ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் முடிவாகவும் அமைந்தது.

பின்னணி

[தொகு]

போர்த்துக்கேயரின் இரண்டாம் யாழ்ப்பாணப் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எதிர்மன்னசிங்கம் 1614 வரை ஆட்சியில் இருந்தான். இக்காலப் பகுதியில், போர்த்துக்கேய மதகுருமாரினதும், அதிகாரிகளினதும் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு நடுவிலேயே ஆட்சிசெய்யவேண்டி இருந்தது. இந்த அழுத்தங்களுக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் நலன்களுக்கும் இடையே அரசன் ஒரு சமநிலையைப் பேண முயற்சி செய்ததாகத் தெரிகிறது. முன்னைய ஒப்பந்தப்படி அரசன் கத்தோலிக்க மதத்துக்கு மாறவில்லை என்றும், தனது குடிமக்கள் கத்தோலிக்கர் ஆவதற்குப் போதிய அளவு உதவவில்லை என்றும் மதகுருமார்கள் குற்றம் சாட்டினர். போர்த்துக்கேயரின் எதிரி நாடான கண்டிக்குத் தேவையான போர்வீரர்களும், ஆயுதங்களும் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண இராச்சியத்தினூடாகச் செல்வதற்கு யாழ்ப்பாண அரசன் அனுமதிப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. யாழ்ப்பாண அரசனை நீக்கிவிட்டு அவனுடைய இடத்தில் போர்த்துக்கேயருக்கு முழுமையாகக் கீழ்ப்படியக் கூடிய ஒருவனை அரசனாக்கும்படி, கோவாவிலிருந்த போர்த்துக்கேய அரசப் பிரதிநிதிக்கு, போர்த்துக்கேயப் பேரரசனும் உத்தரவிட்டிருந்தான். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய ஆட்சிப் பகுதிகள் தொடர்பில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்ததால், கோவா அதிகாரிகள் யாழ்ப்பாணப் பிரச்சினையில் தீவிர கவனம் எடுக்கவில்லை. 1614ல் எதிர்மன்னசிங்கம் நோயுற்று இறந்தான்.

யாழ்ப்பாணத்தின் முடிக்குரிய வாரிசான எதிர்மன்னசிங்கனின் மகன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் அரசை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இறுதியில் சங்கிலி குமாரன் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இது போர்த்துக்கேயரின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது. சங்கிலியைப் பகர ஆளுனனாகப் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் விரைவிலேயே சங்கிலி ஒழுங்காகத் திறை செலுத்தவில்லை என்றும் 3 ஆண்டுகளுக்கான திறை நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர். அதே வேளை ஒப்பந்தங்களுக்கு எதிராக சங்கிலி தமிழ்நாட்டில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் பெற்று வருவதாகவும் ஐயங்கள் எழுந்தன.[1]

இலங்கையில் போர்த்துக்கேயரின் கட்டளைத் தளபதியாக இருந்த கான்சுட்டன்டினோ டி சா டி நோரஞ்ஞா யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிலிப்பே டி ஒலிவேராவை தலைமைத் தளபதியாக இப்பணியில் ஈடுபடுத்தினான்.

படையெடுப்பு

[தொகு]

கொடுக்கவேண்டியிருந்த திறையை அறவிடுவது என்ற போர்வையில், 1619ம் ஆண்டில் தளபதி ஒலிவேரா தலைமையிலான படைகள் மன்னாரில் இருந்து தரைப்பாதை ஊடாக பூநகரிக்கு வந்தன. இப்படையில் மூன்று கப்பித்தான்களின் தலைமையில் மூன்று கம்பனி போர்த்துக்கேயப் போர்வீரர்களும், இன்னொரு கப்பித்தானின் தலைமையில் 500 சிங்கள வீரர்களும் உட்பட 5,000 படை வீரர்கள் வரை இருந்தனர். இப்படைகள் சிறிய தோணிகளில் நீரேரியைக் கடந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. அங்கிருந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதிக்கு வந்த ஒலிவேராவின் படைகள் அங்கே முகாமிட்டன. உண்மையில், போர்த்துக்கேயர் கோரும் பணம் முழுவதையும் யாழ்ப்பாண அரசன் செலுத்தாவிடின் அவனைக் கைது செய்வதற்கும், எதிர்த்தால் கொல்வதற்குமான இரகசிய ஆணையுடனேயே ஒலிவேரா யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தான்.[2] ஒலிவேரா தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் அந்தோனியோ டி எஸ். பேர்னாடினோ என்பவரைச் சங்கிலியிடம் தூது அனுப்பினான்.

திறை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், யாழ்ப்பாணத்தில் இருந்த வடக்கர் படைகளையும், கரையார் தலைவன் வருணகுலத்தானையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கர் படைகளையும், வருணகுலத்தானையும் போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பது துரோகம் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சங்கிலி, ஒலிவேரா யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற மூன்று நாட்களுக்குப் பின் அவர்களைத் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான்.[3] முதலில் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட சங்கிலி, சில நாட்களின் பின்னர், ஒலிவேரா படைகளுடன் பூநகரிக்குத் திரும்பிச் சென்றால் 5,000 பர்தாவ் பணம் அனுப்புவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதேயளவு பணம் தரப்படும் என்றும் அதற்கு மேல் இப்போது தரமுடியாது என்றும் தெரிவித்தான். சங்கிலியின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையாததால் ஒலிவேரா யாழ்ப்பாணத்தை தாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினான்.

அடுத்த நாள், ஒலிவேராவின் படைகள் நல்லூரை நோக்கி அணிவகுத்துச் சென்றன. படைகள் வண்ணார்பண்ணையை அடையும்போது, யாழ்ப்பாணப் படைகள் போர்த்துக்கேயப் படைகளைத் தாக்கின. இத்தாக்குதலின் போது யாழ்ப்பாணப் படைகள் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கின. தொடர்ந்து முன்னேறிச் சென்ற போர்த்துக்கேயப் படைகள் கரையார் தலைவனின் படையின் தாக்குதலுக்கு உள்ளாயின. இம்முயற்சியும் வீணாகியது. சங்கிலி குடும்பத்தினருடனும், பெரும் செல்வத்துடனும் பருத்தித்துறையூடாக இந்தியாவுக்குத் தப்பிச்செல்ல முயற்சித்தான். ஆனாலும், காலநிலை ஒத்துழைக்காததால், போர்த்துக்கேயரிடம் பிடிபட்டான். சங்கிலி நல்லூரில் சிறைவைக்கப்பட்டுப் பின்னர் கோவாவுக்கு அனுப்பப்பட்டான். அவனது மனைவிகளும், பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில் பாதிரிமாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். ஏனையோர் கொல்லப்பட்டனர்.[4]

இதன் பின்னரும் சில மாதங்களுக்கு, போர்த்துக்கேயரை அகற்றுவதற்காக அவ்வப்போது இடம்பெற்ற எதிர்ப்புக்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

விளைவுகள்

[தொகு]

இந்தப் போரின் மூலம் யாழ்ப்பாண இராச்சியம் தனது தன்னாட்சியை முற்றாக இழந்தது. இராச்சியத்தின் வாரிசு உரிமை கோரக்கூடிய அனைவரையும், மதமாற்றம் செய்து குருமாராக்கியும், வேறு வழிகளிலும் யாழ்ப்பாணத்தை விட்டுப் படிப்படியாக அகற்றிவிட்டனர். யாழ்ப்பாண இராச்சியம் நேரடியாகப் போர்த்துக்கேயர் அரசரின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது, போர்த்துக்கேயரின் 38 ஆண்டுக்கால ஆட்சியின் தொடக்கமாக மட்டுமன்றி, இப்பகுதி மக்களின் மேல் திணிக்கப்பட்ட 329 ஆண்டுக்கால ஐரோப்பியர் ஆட்சியின் தொடக்கமாகவும் அமைந்தது. நல்லூர் தலைநகரத் தகுதியை இழந்தது. புதிய யாழ்ப்பாண நகரம் உருவாக்கப்பட்டு இராச்சியத்தின் தலைநகரம் ஆனது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒலிவேராவே இராச்சியத்தின் கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டான். இவனது ஆட்சியின்கீழ் உள்ளூர் மதங்கள் ஒடுக்கப்பட்டதுடன், இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, எம். வி. வெளியீடு, 2008. பக். 171
  2. Queyroz, Fernao. De, The Temporal and Spritual Conquest of Ceylon (Translated by S. G. Perera), Asian Educational Services, Vol II, New Delhi, 1992 (First Edition 1930 Colombo), p. 631.
  3. da Silva Cosme, O. M., Fidalgose in the Kingdom of Jafanapatam, Harwoods Publishers, Colombo, 1994. p. 23
  4. Queyroz, Fernao. De, 1992, p. 631, 632.