பூ நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூ நகர்
பெயர்
பெயர்:பூ நகர்
அமைவிடம்
நாடு:வியட்நாம்
மாகாணம்:கங்க் கோவா மாகாணம்
அமைவு:கா திராங்
கோயில் தகவல்கள்
மூலவர்:பூநகர் அன்னை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சம்பா கலைமரபு
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.பி 10-13ஆம் நூற்.[1]

பூ நகர் வியட்நாமின் கா திராங் எனுமிடம் அருகே உள்ள பழைமை வாய்ந்த கோயில் ஆகும். சம்பாக் கலைமரபில் பொ.பி 781இற்கு முன் அமைக்கப்பட்ட இக்கோயில், இடைக்காலத்தில் காணப்பட்ட "கௌத்தர" நகரில் அமைந்திருந்தது. வியட்நாமியரால் "தியென் வையநா" என அழைக்கப்படும் பூநகர் அன்னையே இக்கோயிலின் தலைமைத் தெய்வம் ஆவாள். சாம் மன்னர் காலத்தில் மாதொருபாகன் வடிவில் இருந்த அன்னையின் திருக்கோலம் "பகவதி கௌத்தரேசுவரி" என்ற பெயரில் நகர்க் காவல் தெய்வமாக வழிபடப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.[2]

வரலாறு[தொகு]

இக்கோயில் வளாகத்தில் 781 இல் அமைக்கப்பட்ட நடுகல்லொன்று, "கர பாலம்" அருகே சம்பா மன்னன் சத்தியவர்மன் தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதையும், அழிந்த ஆலயத்தை மீளக் கட்டியமைத்ததையும் குறிப்பிடுகின்றது. இன்னும் சில சாசனங்கள் அணங்கொன்றின் முகத்தாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட முகலிங்கமொன்று இங்கு அமைந்திருந்ததைக் குறிப்பிடுகின்றன. குரூரமான கருநிறம் கொண்ட, சாவிலும் கொடிய கொள்ளையர்கள் (சாவகத்திலிருந்து வந்திருக்கலாம்) அந்நகைகளைக் கொள்ளையடித்து இலிங்கத்தையும் உடைத்துச் சென்ற செய்தி இன்னொரு சாசனத்தில் சொல்லப்படுகின்றது. கோயிலும் இவ்விலிங்கமும் முறையே 781இலும் 784இலும் சத்தியவர்மனால் மீளத்திருத்தியமைக்கப்பட்டமைக்கு மேற்கூறிய சாசனங்களே சான்றாகின்றன.[3][4]:48

பூ நகர் - இன்னொரு காட்சி

பொ.பி 817இல் சம்பாவை ஆண்ட முதலாம் அரிவன்மனின் சேனாதிபதி "பார்" என்பவனும், அரிவன்மன் மகன் மூன்றாம் விக்கிராந்தவன்மனும் இக்கோயிலுக்கு நன்கொடை வழங்கியிருக்கின்றார்கள்.[5]:104 918இல் சம்பாவை ஆண்ட மூன்றாம் இந்திரவன்மன், தேவி பகவதியின் பொற்சிலையொன்றை அமைக்க ஆணையிட்டதை இன்னொரு சாசனம் சொல்கின்றது. இன்னும், 918இல் அச்சிலையை, கெமர் அரசன் இரண்டாம் இராசேந்திரவன்மன் கவர்ந்துசென்றதும், 965இல் முதலாம் செயேந்திரவன்மன் மீண்டுமோர் சிலை வடித்ததையும்[5]:124[4]:56 1050இல் அக்கோயிலுக்கு நிலமும் பணியாளரும் அரச கருவூலமூம் முதலாம் செயபரமேசுவரனால் வழங்கப்பட்டமையும் கல்வெட்டுகளில் மேலும் காணப்படுகின்றது.[4]:61

பொ.பி 1141இல் மூன்றாம் செயேந்திரவன்மனால் சிவலிங்கம், திருமால் சிலை என்பன இங்கு நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கோயிலிலிருந்த அனைத்து திருவுருவச் சிலைகளும் கெமர் மன்னன் ஏழாம் செயவன்மனால் 1200களில் சம்பா அரசு சீரழிக்கப்பட்டபோது கவர்ந்துசெல்லப்பட்டன.[5]:170 பிற்காலச் சாசனங்கள், இங்கு பூநகர் அன்னை வழிபடப்பட்டதைச் சொல்கின்றன.[6] இறுதியில் பதினேழாம் நூற்றாண்டில், வியட் குல மக்களால் சம்பா அரசு சிதைக்கப்பட்டபோது, இங்கு வீற்றிருந்த சம்பர்களின் குலதேவதை, "தியென் வையநா" என்ற பெயரில் வியட்டினரின் குலதெய்வமானாள்.[7]

ஆலயச்சூழல்[தொகு]

ஆலய நுழைவாயில் தோரணத்தில் துர்க்கை, முன்பொருமுறை இது என்றன் ஆலயம் எனச்சொல்லாமல் சொல்கிறாள்.

கூலவோ (Cù Lao) எனப்படும் மலையின் உச்சியில் பூநகர் அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. மூன்று மட்டங்களாக அமைந்துள்ள இவ்வாலயத்தின் உச்சிப்பகுதி, இருவரிசைகளில் கோபுரங்களைக் கொண்டது. மையக் கோபுரம் அண்ணளவாக 25 மீ உயரமானது.[8]

ஆலய நுழைவாயிலில் மழு, கதை, தாமரை என்பன தாங்கி, மகிடனாம் மேதியவுணனைக் கொல்லும் பாவனையில் துர்க்கையின் சிறுசிற்பமொன்று, தோரணவாயிலை அலங்கரிக்கின்றது.[9] கருவறையில் உள்ள சிற்பமும் பத்துக் கரங்களுடன், அவற்றில் வெவ்வேறு ஆயுதங்கள் தாங்கி அமர்ந்திருந்தாலும், அன்னையின் திருவுடல் துணியால் மறைக்கப்பட்டே விளங்குகின்றது. இச்சான்றுகளையும் பகவதி மற்றும் சிவலிங்கம் பற்றிய சாசனக்குறிப்புகளையும் ஆய்ந்த ஆய்வாளர்கள், இன்று பூநகர் என்று வீற்றிருப்பவள், ஈசனின் துணையாக இந்து சமயம் கூறும் உமையவளே என்று உறுதிகூறுகின்றனர்.[3]

மேலும் காண[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 1. estimates by Trần Kỳ Phương (Tran 2009, 182)
 2. Arthur Cotterell (2014). A History of South East Asi. Marshall Cavendish International Asia Pte Ltd. பக். 449 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789814634700. 
 3. 3.0 3.1 Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers, p.192.
 4. 4.0 4.1 4.2 Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., ISBN 9789747534993
 5. 5.0 5.1 5.2 Coedès, George (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
 6. Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers, p.192 f.
 7. Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers, p.198.
 8. Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers, p.209 ff.
 9. Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers, p.194 f., 212 f.

மேலதிக வாசிப்புக்கு[தொகு]

 • Coedès, George, The Indianized States of Southeast Asia. Honolulu: East-West Center Press, 1968.
 • Ngô Vǎn Doanh, Champa: Ancient Towers. Hanoi: The Gioi Publishers, 2006. Chapter 14: "Po Nagar Tower: The Temple of the Goddess of the Country," pp. 187 ff.
 • Trần Kỳ Phương (2009): The Architecture of the Temple-Towers of Ancient Champa. in Hardy, Andrew et al. (ed): Champa and the Archaeology of Mỹ Sơn (Vietnam). NUS Press, Singapore
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_நகர்&oldid=3700269" இருந்து மீள்விக்கப்பட்டது