உள்ளடக்கத்துக்குச் செல்

பூநகர் அன்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூநகர் அன்னை

பூநகர் அன்னை (சாம் மொழி: போ நொகொர், வியட்நாமி: தியென் வை அ நா -Thiên Y A Na) வியட்நாமியர் மற்றும் சாம் மக்களின் தெய்வம் ஆவாள். வியட்நாம் நாட்டின் "காங்க் ஃகோவா மாநிலத்தில்" (Khánh Hòa Province) அமைந்துள்ள "கவுத்தரா" எனுமிடத்தில் இத்தேவதையின் புகழ்பெற்ற ஆலயமான "பூ நகர் பகவதி கவுதரேசுவரி ஆலயம்" அமைந்துள்ளது. இருகுல மக்களிடமும் இவ்வன்னை பற்றிய மாறுபட்ட தொன்மங்கள் விளங்குகின்றன.[1] பூநகர் என்ற தாய்த்தெய்வ வழிபாடு, பின் உமையவளின் வழிபாடாக மாறி, இறுதியில் இன்று வியட்நாமியரின் நாட்டார் வழிபாடாகத் தி்ரிந்து விளங்குகின்றது.[2]

சாம் மக்களின் தொன்மம்[தொகு]

காங்க் ஃகோவாவின் மலைப்பிராந்தியத்தில் வாழ்ந்த விவசாயக்] குடும்பமொன்றில் அவதரித்தாள் பூநகர் அன்னை. சந்தனமரத் துண்டொன்றில் அவள் கடலில் அலைக்கழிக்கப்பட்டபோது, தேவதைகளின் உதவியுடன் சீனாவைச் சென்றடைந்தாள். அந்நாட்டு மன்னனை மணந்து சம்பாவின் இளவரசியாக முடிசூடிக்கொண்ட பூநகர் அன்னை, இருகுழந்தைகளுக்கும் தாயானாள்.[1] அவள் மீண்டும் தன் பெற்றோரைக் காண மலைப்பிராந்தியத்துக்குச் செல்ல முயன்றபோது அவள் கணவன் தடுத்தான். எனினும் அவள் தன் இருகுழந்தைகளுடன் மீண்டும் சந்தன மரத்தில் மிதந்து தன் பெற்றோரைச் சென்றடைந்தாள். சீன மன்னன் அவளை விடாமல் பின் தொடர்ந்தபோது சீற்றமுற்ற அவள், தன் கணவனையும் அவனது கப்பற்படையையும் கல்லாக மாறுமாறு தீச்சொல்லிட்டாள்.[3] பூநகர் அன்னையின் தொன்மம், ஓரளவு புராணக்கதையுடன் ஒத்துச் செல்வது இங்கு நோக்கத்தக்கது.

இன்னொரு மரபுரை தொண்ணூற்றேழு கணவரும் முப்பத்து நான்கு குழந்தைகளும் கொண்டவளாக அவளைச் சித்தரிப்பதன் மூலம், தாய்வழிச் சமூகத்தின் பெரும் குடும்பமொன்றின் தலைவியாக அவள் விளங்கியதைக் குறிக்கின்றது.[4] கடல்நுரைகளுக்கும் மேகங்களுக்கும் மகளாக அவதரித்த பூநகர் அன்னையே அரிசியைத் தம்மண்ணுக்குக் கொணர்ந்தவள் என்றும், சோற்றுமணம் கமழும் இடங்களெல்லாம், அவள் குடிகொண்டிருக்கின்றாள் என்றும் சாம் மக்களின் மூதிகம் சொல்லும்.

வியட்நாமியத் தொன்மம்[தொகு]

பூநகர்க் கோயில்,வியட்நாம்

சாம் மக்கள் வியட்நாமியரால் வீழ்த்தப்பட்டு, வியட்நாம் தோற்றம் பெற்றதுடன், சாம்களின் பூநகர் அன்னையும் வியட்நாமியரின் தெய்வமாக மாறினாள். வியட்நாமியரால் தியென் வையனா என அழைக்கப்பட்ட பூநகரன்னைக்கென்று, புதிய தொன்மங்களும் உருவாக்கப்பட்டன. கன்பூசிய நெறியரான வியட்நாமியர், சாமர் பூநகருக்குக் கொடுத்திருந்த பழங்குடி இயல்புகளை நீக்கி, என்றென்றும் வாழும் தெய்வீகப் பிறப்பாக - பௌத்த துறவினியாகச் சித்தரித்தனர்.

ஆலயங்கள்[தொகு]

பூநகர் அன்னையின் முதன்மையான ஆலயம், "பூ நகர்" என்றே அழைக்கப்படுகின்றது. அங்கு வீற்றிருக்கும் அன்னை, சிவ-சக்தி இணைவைச் சுட்டுவதாகச் சொல்லப்படுகின்றது.' எனினும் இளங்கன்னியாக இல்லாமல், சுருக்கம் விழுந்த தோற்றத்துடன், மூ்தாட்டியொருத்தி போல் காட்சிதரும் பூநகரன்னை, தான் பழைமைவாய்ந்த அன்னைத்தெய்வம் என்பதற்கு சான்றாகின்றாள்.[5] "தாவோ மௌ" என்றழைக்கப்படும் வியட்நாமிய அன்னைத்தெய்வ வழிபாட்டினர், அவளது ஆலயங்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், வெறியாட்டு மூலம் குறிகேட்பதும் என்று பக்திபூர்வமாக பூநகர் அன்னையை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காண[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Oscar Chapuis (1995). A history of Vietnam: from Hong Bang to Tu Duc. Greenwood Publishing Group. pp. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-29622-7. {{cite book}}: |pages= has extra text (help)
  2. Barbara Watson Andaya (2006). The Flaming Womb: Repositioning Women in Early Modern Southeast Asia. University of Hawaii Press. pp. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824829551.
  3. J. Hackin, Paul Louis Couchoud (2005). Asiatic Mythology 1932. Kessinger Publishing. pp. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4179-7695-0. {{cite book}}: |pages= has extra text (help)
  4. Anne Walthall (2008). Servants of the Dynasty: Palace Women in World History Volume 7. University of California Press. pp. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520254442. {{cite book}}: |pages= has extra text (help)
  5. Combs follow GS. Tran Quoc Vuong Historically (வியட்நாமியம்), Culture Publishing House, 1996, p. 551-552.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூநகர்_அன்னை&oldid=3848792" இலிருந்து மீள்விக்கப்பட்டது