உள்ளடக்கத்துக்குச் செல்

பூபுல் செயகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபுல் செயகர்
பிறப்பு(1915-09-11)11 செப்டம்பர் 1915
இடவா, உத்திரப் பிரதேசம்
இறப்பு29 மார்ச்சு 1997(1997-03-29) (அகவை 81)
பாம்பே தற்போது மும்பை

பூபுல் செயகர் ( Pupul Jayakar செப்டம்பர் 11, 1915 - மார்ச் 29 1997) என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார். கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் வினையாற்றியவர்.

இந்தியத் தலைமை அமைச்சர்களான சவகர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் இராசீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். தத்துவ அறிஞர் ஜே.கிருட்டினமூர்த்தி, பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்திரா காந்திக்கும் இராசீவ் காந்திக்கும் பண்பாட்டுத் துறையில் ஆலோசகராக இருந்தார்.இந்திய மரபுகள் சார்ந்த கலைகளை அமெரிக்க ஐக்கிய நாடு , பிரான்சு, யப்பான் போன்ற நாடுகளில் பயணம் செய்து அங்கு இந்தியக் கலை விழாக்களையும் கண்காட்சிகளையும் நடத்தினார். [1]

1950 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அனைத்திந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக் குழுமத்தின் அவைத்தலைவர் ஆனார்.[2] 1956 இல் தேசிய நெசவு அருங்காட்சியத்தை நிறுவினார். இந்திய வரலாற்று பண்பாட்டு தொண்டு நிறுவனத்தை 1984 இல் நிறுவினார். இதன் மூலம் நாட்டின் பாரம்பரிய சொத்துக்கள், நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் , பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார்.[3] தேசிய இந்திராகாந்தி கலை மையம் என்பதனை 1985 இல் நிறுவினார். 1990 ஆம் ஆண்டில் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியை புதுதில்லியில் நிறுவினார்.[4] இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதாகக் கருதப்படும் பத்ம பூசன் விருதினை 1967 இல் பெற்றார்.[5]

இளமைக் காலம்

[தொகு]

பூபுல் ஜெயகர் 1915 இல் உத்தரபிரதேசத்தில் உள்ள இட்டாவா என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை இந்திய அரசு அதிகாரி. இவரது தாயார் சூரத்து குஜராத்தி பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் கோடைகால விடுமுறை நாட்களில் இங்கு இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருக்கு குமரி மேத்தா எனும் சகோதரனும், பூர்ணிமா, பிரேமலதா, அமர்கங்கா, மற்றும் நந்தினி மேத்தா எனும் சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தையின் பணியின் நிமித்தமாக இந்தியாவின் பல ஊர்களுக்கு செல்ல நேரிட்டது. அவ்வாறு செல்கையில் பூபுல் ஜெயகர் அந்தந்த ஊர்களின் நாகரிகம் கைத்தொழில்கள், மரபு சார்ந்த கலைகள் முதலியனவற்றை அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன.[2]

தமது பதினோறாம் அகவையில் வாரணாசியில் அன்னி பெசண்ட் அம்மையாரால் ஆரம்பிக்கப்ட்ட பள்ளிக்கூடத்தில் பயின்றார். அன்னிபெசன்ட் பிரம்மஞானி மேலும் அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர். அலகாபாத்தில் இவருடைய தந்தையார் இருந்தபோது சவகர்லால் நேரு குடும்பத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் விளைவாக இந்திரா பிரியதர்சினியின் (பிறகு இந்திரா காந்தி) நண்பர் ஆனார்.[6]

இலண்டனில் 1936 இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் பட்டம் பெற்றார்.[7] அதற்கு முன் பெட்ஃபோர்ட் கல்லூரியில் பயின்றார். பின்னர் மன்மோகன் ஜெயகர் எனும் வழக்கறிஞரைத் திருமணம் செய்து பாம்பேயில் (தற்போது மும்பை) வசிக்கலானார்.[4]

தொழில்

[தொகு]

மும்பையில் தங்கிய பிறகு டாய் கார்ட் எனும் குழந்தைகளுக்கான ஆங்கில இதழை நடத்தினார். இதுபற்றி புகழ்பெற்ற வரைஞர்களான ஜாமினி ராய், மக்புல் ஃபிதா உசைன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். 1940 இல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் செயற்பாட்டாளரான மிருதுளா சாராபாயின் கஸ்தூர்பா எனும் தொண்டு நிறுவனத்தில் உதவியாளராக சேர்ந்தார். பின் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான தேசிய பெண் விவகாரத் திட்டமிடல் குழுவின் உதவி அவைத் தலைவராக பணியமர்த்தப்பட்டார்.[8] 1940 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் நண்பரானார். பின் நெசவாளர் சேவை மையம் என்பதனை மத்திய நெசவுத் துறையின் உதவியுடன் பெசன்ட் நகர், சென்னையில் உருவாக்கினார்.[9]

இந்திரா காந்தி பிரதம மந்திரி ஆவதற்கு முன்பே அவருடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். அவர் பிரதமராக ஆன பின்பு இந்தியக் கலாச்சாரத்துறையின் ஆலோசகராக இவரை நியமனம் செய்தார். பின் இந்திய கைத்தறி மற்றும் செசவுத் துறைக்கான அவைத் தலைவர் ஆனார். 1974 முதல் மூன்று ஆண்டுகள் இந்திய நெசவுக் குழுவின் அவைத் தலைவராக இருந்தார்.

1980 ஆம் ஆண்டில் இலண்டன், பாரிசு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நமது திருவிழா (அப்னா ஃபெஸ்டிவல்ஸ்) எனும் பெயரில் கலாச்சாரத் திருவிழாவை இந்திய அரசு நடத்தியது . இதில் இவரின் பங்கும் உள்ளது. 1982 இல் இந்தியக் கலாச்சாரத் தொடர்பு மன்றத்தின் துனைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.[10] இந்திரா காந்தி நினைவு தொண்டு நிறுவனத்தின் உதவி அவைத் தலைவராக 1985 முதல்1989 வரை இருந்தார். இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறையில் பிரதமரின் ஆலோசகராக இருந்தார். இந்திரா காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய தேசிய கலை,பண்பாட்டுக் கலாச்சாரத் தொண்டு நிறுவனத்தை 1984 இல் நிறுவினார்[11].

குடும்பம்.

[தொகு]

இவர் மன்மோகன் ஜெயகர் எனும் வழக்கறிஞரை 1937 இல் திருமணம் செய்தார். அவர் 1972 இல் இறந்தார். இவருக்கு ராதிகா ஹெர்ஸ்பெர்கர் எனும் மகள் உள்ளார். அவர் மதனப்பள்ளியில் உள்ள  ரிஷி வேலி பள்ளிக்கூடம் , புனேவில் உள்ள சஹ்யார்டி பள்ளி, வாரணாசியில் உள்ள ராஜ்குருநகர் மற்றும் கே எஃப் ஐ பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை நடத்திவருகிறார். அதிதி மங்களா தாஸ் இவருடைய உறவினர் ஆவார்.[12]

இவர் மார்ச் 29, 1997 இல் உடல்நிலை குறைவின்மையால் இயற்கை எய்தினார்.

மேற்கோள்

[தொகு]
  1. பர்ன்ஸ், ஜான் எஃப் (2 ஏப்ரல்1997). "கைவினைப் பொருட்களில் பூபுல் செய்த புரட்சி". தெ நியூயார்க் டைம்சு. https://www.nytimes.com/1997/04/02/arts/pupul-jayakar-81-led-revival-of-arts-and-handicrafts-in-india.html. 
  2. Mrázek, Jan; Morgan Pitelka (2008). கலையின் பயன் என்ன?. University of Hawaii Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-3063-6.
  3. Burns, John F. (2 April 1997). "கைவினைப் பொருட்களில் பூபுலின் மறுமலர்ச்சி". The New York Times. https://www.nytimes.com/1997/04/02/arts/pupul-jayakar-81-led-revival-of-arts-and-handicrafts-in-india.html. 
  4. "About IGNCA". IGNCA website.
  5. "பத பூசன் விருதுகள் வாங்குபவர்கள்". மத்தியத் தகவல் தொடர்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 28 சூன்2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Mrázek, Jan; Morgan Pitelka (2008). What's the use of art?: Asian visual and material culture in context. University of Hawaii Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-3063-6.
  7. Singh, Kuldip (2 April 1997). "Obituary: Pupul Jayakar". The Independent (London). https://www.independent.co.uk/news/people/obituary-pupul-jayakar-1264718.html. 
  8. The tapestry of her life Malvika Singh, Indian Seminar, 2004.
  9. "Past perfect". The Hindu. 28 February 2004 இம் மூலத்தில் இருந்து 30 மே 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040530154313/http://www.hindu.com/mp/2004/02/28/stories/2004022800010100.htm. 
  10. Weisman, Steven R. (27 October 1987). "Many Faces of the Mahabharata". New York Times. https://www.nytimes.com/1987/10/27/arts/many-faces-of-the-mahabharata.html. 
  11. The tapestry of her life Malvika Singh, Indian Seminar, 2004.
  12. "Fleet feat". The Hindu. 1 January 2010 இம் மூலத்தில் இருந்து 3 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100103014453/http://beta.thehindu.com/arts/dance/article74071.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபுல்_செயகர்&oldid=3250726" இலிருந்து மீள்விக்கப்பட்டது