பாவ்சார் சத்திரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவ்சார் சத்திரியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடுமகாராஷ்டிராகர்நாடகாகுஜராத்ஆந்திரப்பிரதேசம்மத்தியப்பிரதேசம்ராஜஸ்தான்
மொழி(கள்)
மராத்திகுஜராத்திபாக்ரி
சமயங்கள்
இந்து சமயம் சமணம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
நாம் தேவ் மராட்டா

பாவ்சார் சத்திரியர் (Bhavsar) என்பது இந்தியாவில் காணப்படும் பல சாதிகளுள் ஒன்றாகும்.

தோற்றமும் வரலாறும்[தொகு]

சாதி முறை இந்திய சமூகங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ கி.மு 1500 க்கு முன்பிருந்தே மனு சாத்திரம், இந்திய சாதி அமைப்பு முறைகளைப்பற்றியும், அவற்றின் அமைப்பு விதிகளைப்பற்றியும் விளக்கியுள்ளது. ஆரம்பகாலங்களில், இந்து மதத்தில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளே இருந்தன. இந்தியா, நாளடைவில், அந்நியப் படையெடுப்புகளினாலும், குடிபெயர்ந்தவர்களாலும், அந்நிய வியாபாரிகளாலும் பல்வேறு தரப்பட்ட சமூக மாறுபாடுகளுக்கு ஆளாயிற்று.

இத்தகைய ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்று நிகழ்வுகளினால், இந்திய சாதி முறைகளில் மிகப்பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு, சாதிகள், உட்சாதிகள், உட்பிரிவுகள் உண்டாயின. இத்தகைய மாபெரும் மாறுதல்களின் விளைவாக, இந்தியாவின் எந்தவொரு சாதியின் தோற்றம் மற்றும் வரலாற்றுக்குறிப்புகள் துல்லியமாக அறுதியிட்டு கூற இயலாவண்ணம் உள்ளது. மேற்கத்தேய நாடுகளில், ஒருவரின் சில நூறு ஆண்டுகள் வரையிலான குடும்ப வரலாற்றை கண்டறிதல் என்பது மிக எளிது. ஏனெனில் கிறித்தவ தேவாலயங்களிலும் நகர மன்றங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்வதென்பது பல நூறாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இது மட்டுமன்றி, மிக வலிமையான பாரம்பரியமாக, அரசுகள் மற்றும் மக்களின் வரலாறுகளை எழுதி பதிவு செய்தல் கிரேக்க மற்றும் உரோமானிய நாகரிகங்களில் இருந்துள்ளது.

இம்மாதிரியான வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கு இந்தியாவில் எல்லாக் கால கட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டதில்லை. தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடுப்புக்களையும் மற்ற ஆங்கிலேயர் காலத்து வரலாற்றுத் தடயங்களையும் தவிர பெரும்பான்மையான புராதான இந்திய வரலாறு நீண்ட நாட்களாக இருளிலேயே இருந்துள்ளது. இருந்தாலும், மிக வலிமையான இந்திய பாரம்பரியமாக, மதம் சார்ந்த உரைகள் மற்றும் வேதங்கள் வாய்மொழியாகவும் எழுத்து வடிவமாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வேத புராணங்களும், பழங்கதைகளும் சில வகைகளில் மட்டுமே நம் வரலாற்றை அறிய உதவுகின்றன. ஏனெனில் வேத புராணங்களும், பழங்கதைகளும் வெறும் கற்பனை வடிவமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அவை தகுந்த அல்லது நிச்சயமான ஆதாரமின்றியும் உருவாக்கப்பட்ட காலம் குறிப்பிடப்படாமலும் உள்ளன. எனவே நாம் வேத புராணங்களையும், பழங்கதைகளையும் வரலாற்றுக்கு இணையாக மாற்றீடு செய்ய இயலாது.

பாவ்சார் சமூகத்தின் தோற்றம் இன்று உள்ள நிலையில், முழுவதுமாக புராணங்களாகவும் பழங்கதைகளாகவுமே அறியப்பட்டுள்ளது. அவ்வாறான பழங்கதைகளுள் ஒன்றில் கடவுள் பரசுராமர் ஒரு சமயத்தில் அனைத்து சத்திரியர்களையும் அழித்ததாகவும், அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள் இங்குலாசா தேவியிடம் அடைக்கலம் புகுந்து பாவ பக்தியுடன் இருந்து பாவ்சாரர்களாக மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கதை இரண்டு சத்திரியர்களைப்பற்றியது: பாவ்சிங் மற்றும் சார்சிங், இவர்களிருவரும் சேர்ந்து நிறுவியதே பாவ்சார் குலம். இவ்விரு வீரர்களின் வரலாறும் எந்த ஒரு புத்தகத்திலும் காணப்படவில்லை. இவ்விரண்டும் வெறும் கதைகளே என்பதால் இவை பாவ்சார்களின் வரலாற்றையும் அதன் தோற்றம் குறித்தும் தெளிவாக விளக்க உதவவில்லை. கிடைத்துள்ள ஆதாரங்களை கவனமாக ஆய்வதே ஒரூ சமூகத்தைப்பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ளும் ஒரே வழி. எனவே ஒட்டுமொத்த மானுட சமூக அம்சங்களான தற்போதைய மக்களின் பூகோள வாழிட பரவல், கலாச்சாரம், தொழிலும் பிற பண்புகளும் அம்சங்களும், பொதுவான பழக்க வழக்க அடையாளங்கள், பேசப்படும் மொழி மற்றும் வழக்கு மொழிகள் மற்றும் சமூகத்தைப்பற்றிக் கிடைத்துள்ள வரலாற்று மேற்கோள்கள் ஆகியவற்றின் ஆய்வு அவசியமானது.

இதன் பின், முயற்சித்து, கிடைத்த உண்மைகளை ஒன்றிற்கொன்று தொடர்புபடுத்தி சுருக்கமான வரலாற்று குறிப்பினை உருவகப்படுத்தலாம். இது ஒரு மாபெரும் சிரமங்கள் நிறைந்த ஆராய்ச்சி ஆகும். ஆகவே பாவ்சார்களின் வரலாறும் [1] இன்றுள்ள நிலையில் கிடைத்துள்ள முக்கிய உண்மைகளை சேகரித்து ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

குல தெய்வம்[தொகு]

இங்குலாஜா மாதா கோயில்

பாவ்சார்களின் மூல குல தெய்வமாக இங்குலாஜா மாதா அல்லது இங்குலாம்பிகா [2][3] எனக் கோரப்படுகிறது. இங்குலாம்பிகாவின் பழமை வாய்ந்த கோயில் தற்போதைய பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது.[4] இக்கோயிலின் அமைவிடம், ஆரம்ப காலங்களில் பாவ்சார்கள் சிந்து மாகாண பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்புணர்த்துகிறது. இந்த ஹிங்லாஜ் கோயில் அப்பகுதிவாழ் இந்துக்களின் முக்கியமானவொரு புனிதத்தலமாக விளங்குவதையும், அவர்களுள் ஒரு சிறிய இந்து சமூகத்தினரால் இக்கோயில் பேணப்படுவதையும் கவனிக்கப்படவேண்டும்.

பாவ்சார்கள் இச்சிறிய சமூகத்தைச் சேர்ந்த, அதே கடவுளை வழிபடும் ஒரு பிரிவினராக இருந்திருக்கலாம். இதைத்தவிர வேறு எந்தவொரு தெய்வங்களோ, கோயில்களோ இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதியிலோ பாவ்சார்களால் பொதுவாக வழிபாடு செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே, இதுவே பாவ்சார்கள் சமூகம், ஒன்றுபட்ட இந்தியாவின் மேற்கு பகுதிகளில் தோன்றியதாக நம்பத் தகுந்த ஆதாரமாகிறது.

மக்கள் வாழ்விட பரவல்[தொகு]

பாவ்சார் சத்திரியர் வாழ்விட பரவல் வரைபடம்

ஒன்றுபட்ட இந்தியாவின் மேற்குப்பகுதியை தொடக்க வாழிடமாக கொண்டிருந்த பாவ்சார்கள் பின்னாளில் குசராத் மாநிலம் முழுவதும் பரவிக் குடியேறத் தொடங்கினர். குசராத்திலுள்ள பெரும்பாலான பாவ்சார்கள் தங்களின் குடும்பபெயராக "பாவ்சார்" என கொண்டு சுலபமாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

இச்சமூகத்தின் குடியேற்றம் மேலும் பல நூறு ஆண்டுகளாக தெற்கு நோக்கி தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளில், குறிப்பாக மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிபெயர்ந்தனர். இத்தகைய இடம் பெயர்வு பொருளாதார காரணங்களுக்காக இருந்திருக்கலாம். குசராத்திற்கு வெளியே மகாராட்டிர மாநிலமே பாவ்சார்களின் நீண்ட கால வாழிடமாக தோன்றுகிறது.

மகாரட்டிரத்திலும் தொடர்ந்து தெற்கிலும் குடியேறிய பாவ்சார்கள் மராத்தி மொழியையே மகாராட்டிரத்தில் மட்டுமின்றி தொடர்ந்து தென்னிந்தியாவிலும் பேசிவந்துள்ளனர். பாவ்சார்களின் வழக்கு மொழி இடத்திற்கு இடம் மாறினாலும் அவர்களின் மொழி மராத்தியை ஒத்தே இருந்துள்ளது.

அவர்களின் குடும்ப பெயர்களும், மராத்திய மரபின்படி அம்பர்கர், ஜவல்கர், கோகலே, பிசே, பல்லே, பதங்கே, மாளத்கர் என்பன போன்றே இருந்துள்ளது. பொதுவாக காணப்படும் குடும்பப்பெயர்களுள் ஒன்றான "குசராத்தை சேர்ந்தவர்" என பொருள்படும "குஜ்ஜர்" என்ற குடும்பப்பெயர், பாவ்சார்களுக்கு குசராத்தி பாவ்சார்களிடம் உள்ள தொடர்பையும் மூலத்தையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.[5]

பொது தொழில்[தொகு]

வண்ணம் தோய்த்தல்
தையல் இயந்திரம்

முற்காலங்களில் ஒவ்வொரு சாதியினரும் ஒரு குறிப்பிட்ட வாணிகம் அல்லது தொழிலைக் கொண்டிருந்தனர். பாவ்சார் சமூகத்தினரும் துணிகளுக்கு வண்ணம் தோய்த்தலை தொழிலாகக்கொண்டிருந்தனர். அவர்கள் "ரங்க்ரேஜ்" என குஜராத்திலும் "ரங்காரி" என மற்ற இடங்களிலும் அழைக்கப்பட்டனர். ("ரங்" என்றால் வண்ணம் / நிறம் என வட இந்திய மொழிகளில் பொருள்படும்).

இத்தொழிலே நீண்ட காலமாக பாவ்சார்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இயந்திரமயமாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் அறிமுகப்படுத்திய பின்னர், கைத்தொழில்களாக இருந்த நெய்தல் மற்றும் வண்ணம் தோய்க்கும் தொழில்கள் படிப்படியாக அழிந்துபோயின. இந்த இயந்திரமயமாக்கலுக்கு இரையானோர்களில் ஒருவரான இரங்காரிகளான பாவ்சார்களும் மாற்றுத்தொழிலைத் தேட முற்பட்டனர்.

சில இரங்காரிகள் (பாவ்சார்கள்) தங்களுக்கு இயல்பான தொழிலான தையல் தொழிலை மாற்றுத்தொழிலாக ஏற்றதே தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாவ்சார்கள் தையல்காரர்களாக இருப்பதற்கான காரணமாகும். இன்று கூட, சில பாவ்சார் சமூக பெரியோர்கள் தம் இளவயதில் வண்ணம் தோய்த்தலை தொழிலாக கொண்டிருந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியாவில் தையல் தொழில் தொடர்ந்து பாவ்சார்களின் மிகப் பொதுவானத் தொழிலாகக் காணப்படுகிறது. இருப்பினும், குசராத்திலுள்ள பாவ்சார்கள் மற்ற தொழில் நிபுணர்களாகவும், வணிகர்களாகவும், சிறு அளவிலான வர்த்தக நிறுவன உரிமையாளர்களாகவும் பல்வேறு தரப்பட்ட தொழில்களிலும் சிறந்து காணப்படுகின்றனர்.

மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம்[தொகு]

விட்டோபா - பண்டரிபுரம்
வர்க்காரி

குசராத்திலுள்ள பாவ்சார்கள் குசராத் முழுவதிலும் பரவி கிட்டத்தட்ட குசராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சைவ உணவை மட்டுமே உண்பவர்களாகவும் குஜராத்தி மொழி பேசுபவர்களாகவும், அவர்களின் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களும் குசராத்திய முறையை ஒத்தும் காணப்படுகிறது.

அகமதாபாதைச் சேர்ந்த கல்வியியலாளர் முனைவர் மிலாப் பாவ்சார் தம் முனைவர் பட்டத்தை பாவ்சார்கள் சமூகத்தைப்பற்றிய ஆய்வின் மூலம் பெற்றுள்ளார். இவரின் ஆய்வு குறிப்பாக குசராத்திலுள்ள குசராத்திய பாவ்சார் சமூகத்தின் பரவல், அவர்களின் பாரம்பரியம், மற்றும் சமூக அமைப்புகளைப் பற்றி மட்டுமே விவரிக்கின்றது.

மேலும் அவருடைய பாவ்சார்களின் தோற்றம் குறித்த ஆய்வு புராணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள பாவ்சார்கள் சற்று வித்தியாசமான மராத்தி மொழி பேசுபவர்களாகவும், பொதுவாக அசைவ உணவு உண்ணுபவர்களாகவும், பல மராத்திய மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். பண்டரிபுரத்திற்கு புனித யாத்திரை செல்வதும் (வர்க்காரி) அவ்வாறான மத / கலாச்சார மரபுகளுள் ஒன்றாகும்.

தென்னிந்தியாவில் குறிப்பாக மகாராட்டிரத்திலும் கர்நாடகத்திலும் உள்ள பாவ்சார் சத்திரியர்கள் பெருமளவில் "பண்டரிபுர வார்க்கரி" என அழைக்கப்படும் விட்டோபாவின் பக்தர்களாகவும் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் ஆஷாட ஏகாதசியில் பண்டரிபுரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்களாகவும் உள்ளனர். சமய துறவிகளான துக்காராம், நாம்தேவ், ஞானதேவ் போன்றோரின் போதனைகளும் அபங்களும் (கீர்த்தனைகள்) தொடர்ந்து தவறாமல் பாவ்சார் சமூக கோயில்களில் நடைபெற்றும் வந்துள்ளது.

சத்திரியர் பாரம்பரியம்[தொகு]

பொதுவாக பாவ்சார்கள் தாங்கள் வீரர் குலமான சத்திரியர்கள் என கருதுகின்றனர். ராஜபுத்திரர் போன்றோ அல்லது மராட்டாக்களைப் போன்றோ, பாவ்சார் சத்திரியர்கள் எந்த ஒரு நிலப்பகுதியையும் ஆட்சி செய்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. அது மட்டுமில்லாமல், எந்தவொரு இராச்சியத்தின் படைகளில் பாவ்சார்களின் பங்களிப்பைப்பற்றியோ, எந்தவொரு போரிலும் ஈடுபட்டதாகவோ வரலாற்று தகவல்கள் இல்லை. 400 ஆண்டுகளுக்கு முந்தைய மராட்டிய பேரரசுகளிலும் பாவ்சார் குலத்தினரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு ஏதும் இருந்ததாகவும் அறியப்படவில்லை.

ஆகையால் பாவ்சார் சமூகத்தினர் சத்திரியர்களாக அறியப்படும் காரணத்தை விளக்குவது கடினமாகிறது. அநேகமாக சத்திரியர் பெயர்க்காரணம் புராணங்களிலிருந்து வெளிவராமல் புதைந்து வரலாற்று அடிப்படையின்றி போயிருக்கலாம்.

அண்மைக்கால வரலாற்றில், பாவ்சார்களின் இராணுவத்துடனான தொடர்பு, அவர்களின் தற்போதைய குடியேற்றப்பகுதிகளான அப்போதைய ஆங்கிலேய படைத்தலங்கலாக விளங்கிய புனே, பெங்களூர், மைசூர், பெல்காம், பெல்லாரி, சென்னை போன்ற இடங்களில் தங்கி ஆங்கிலேயப் படையினருக்காக தையல் தொழிலில் ஈடுபட்டதின் வாயிலாகக் காணப்படுகிறது. இதைப்போலவே, அநேகமாக பாவ்சார் சமூகம் மற்ற பல ஆட்சியாளர்களின் படையினருக்கும் வண்ணம் தோயப்பவராகவும், தையலராகவும் பணியாற்றியிருக்கலாம்.

இவ்வாறான பல்வேறு ஆட்சியாளர்களின் படைகளிடம் பாவ்சார்ககளுக்கு இருந்த தொடர்பின் மூலமாக பாவ்சார்கள் சத்திரியர்கள் என்ற அடையாளத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பாவ்சார்களின் சத்திரியர் பெயர்க் காரணத்தைத் தெளிவாக அறிய மேலும் ஆய்வுகள் தேவை.

"பட்" பாரம்பரியம்[தொகு]

"பட்" எனப்படுவது இந்தியாவில் காணப்படும் பல குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும். பட் குடும்பத்தினரின் மூலமாக பாவ்சார் சமூகத்தினர் தம் சந்ததியினரைப்பற்றிய விவரங்களை விரிவாகப் பதிவு செய்யும் வழக்கம் பாவ்சார்களின் பாரம்பரியங்களுள் ஒன்றாகும்.

"பட்" குடும்பத்தினர் தாம் ஒவ்வொரு பாவ்சார் குடும்பத்தின் வரலாற்றைப் பல தலைமுறைகளாக பதிவு செய்து வந்துள்ளனர். இதன் மூலம் எவரொருவரும் பாவ்சார் ஒருவருடைய வம்சாவளியைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்து வந்த 'பட்'களின் இந்த மரபு வழித் தொழில் இன்றைய தலைமுறையினரால் கைவிடப்படுவதினால் மெல்ல அழிந்து வருகிறது. 'பட்' களிடம் இன்றும் உள்ள பாவ்சார் சமூகத்தினரைப் பற்றிய எழுத்து வடிவிலான தகவல்களும் அழிந்து வருகின்றன.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-18.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-06. பார்க்கப்பட்ட நாள் 2011-11-18.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2011-11-18.
  4. http://news.bbc.co.uk/2/shared/spl/hi/picture_gallery/07/south_asia_hindus_in_pakistan/html/1.stm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்சார்_சத்திரியர்&oldid=3625205" இலிருந்து மீள்விக்கப்பட்டது