உள்ளடக்கத்துக்குச் செல்

பளியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பளியர் பெண்ணும் குழந்தைகளும்

பளியர், அல்லது பழையர் அல்லது பழையரேர் (Paliyan, Palaiyar, Pazhaiyarare) எனப்படுபவர் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்னக காடுகளில் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடியினராவர். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் பொதுவாக வேட்டைக்காரர்களாகவும், தேன் சேகரிப்பவர்களாகவும் உள்ளனர். சேனைக் கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவர்களது முதன்மை உணவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தும் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்திருந்தனர். தற்காலத்தில் இவர்கள் சமவெளி மக்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். மலைப்புறத் தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் சிலர் பணி புரிகின்றனர். மேலும் இவர்கள் மலை கோயில்களில் பூசை செய்தும், கோயில் சுற்றுபுறத்தை தூய்மை செய்தும் வருகின்றனர். இவர்களுக்கு அரசு திட்டத்தின் முலம் வீட்டுமனை மற்றும் ஆரம்பக் கல்வி கூடங்களும் அமைத்து தரப்பட்டுள்ளன.[1][2][3]

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு மலையின் சரிவிலும், தொடர்ந்து, தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளிலும் இவ்வினத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர், மலைவாழ் இனங்களில் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது என்றும் சிலர் சொல்கின்றனர். இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். இவர்கள் காய், கனி, தேன், தானியங்களை உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் குடியிருப்பைக் கொண்டிருக்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த இன மக்கள் குக்குருவான் பறவையை திட்டுவான் குருவி என்று அழைக்கிறார்கள். [4]

இசை

[தொகு]

இந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு இசை மட்டுமே. புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் இவர்களிடம் உயிர்ப்போடு உள்ளன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கி இசைக்கின்றனர்.

வழிபாடு

[தொகு]

மலைவனம் முழுவதும் வனதேவாதிகள் (தெய்வங்கள்) நிறைந்திருக்கின்றன என்று இவர்கள் நம்புகிறார்கள். மேலும் இசையால், வனதேவாதிகளை தங்களின் வாழ்விடத்துக்கே வரவைத்துப் பேசமுடியும் என்றும் நம்புகின்றனர். எழுகரை நாடன், பளிச்சியம்மன் இந்த தெய்வங்களே இவர்களின் முதன்மைத் தேவாதிகள். இந்த தேவாதிகள் உள்ளிட்ட 12 வனதேவாதிகள் உள்ளது என்கின்றனர். இவர்களின் தெய்வ வழிபாட்டில் இசை முதன்மை ஆனதாக உள்ளது. தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு விதமான இசை வாசிக்கப்படும். அப்போது, ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் தானாக முன்வந்து ஆடுகிறார். தெய்வங்கள் தங்களுக்குப் பிடித்த இசையை கேட்கும்போது, யாராவது ஒருவருக்குள் வந்திறங்குவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

வனதேவாதிகளை வரவழைக்க அந்த தேவாதிகளுக்குப் பிடித்த குழலை மட்டும்தான் இசைக்கவேண்டும் என்று நம்புகின்றனர். குழல் வாசித்து வனதேவாதிகளை வரவழைப்பதை இவர்கள் வெறியாட்டு என்று அழைக்கின்றனர்.

வெறியாட்டின்போது ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொருவிதமாக குழல் வாசிக்கின்றனர். அந்தக் குழலிசையைக் கேட்டு எங்கயிருந்தாலும் அந்த தெய்வங்கள் மயங்கி வரும் என்றும், ஒவ்வொரு தேவாதிக்கும் ஒரு ஆட்டம் உள்ளது. அருள் வந்து ஆடுகிறவர்கள் அந்தந்த தேவாதிக்கான ஆட்டத்தைத்தான் ஆடுவார்கள். அதைக்கொண்டே எந்த தேவாதி வந்திருக்கிறது என்பதை அறிகின்றனர். [5]

மேற்கோள்

[தொகு]
  1. Thurston, E. 1909. Castes and Tribes of South India. Vol IV. Government press, Madras
  2. Dahmen, Rev. F. 1908 The Paliyans, a hill-tribe of the Palni Hills (south India), Anthropos 3: 19-31
  3. Gardner, P. M. 1972. The Paliyans. In: Bicchieri, M. (ed.,). Hunters and Gatherers Today. New York: Holt, Rinehart and Winston. pp. 404-447
  4. இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல்தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015
  5. ஒய். ஆண்டனி செல்வராஜ் (23 ஆகத்து 2017). "ஆதி இசையில் அசத்தும் பளியர்கள்!". கட்டுரை. தி இந்து. Retrieved 24 ஆகத்து 2017.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பளியர்&oldid=4282253" இலிருந்து மீள்விக்கப்பட்டது