உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாபி கிஸ்ஸா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாபி கிஸ்ஸா

பஞ்சாபி கிஸ்ஸா (சாமுகி: پنجابی قصه, பஞ்சாபி மொழி: ਕਿੱਸਾ, பஞ்சாபி மொழி: ਕਿੱਸਾ, பன்மை: கிஸ்ஸே) என்றறியப்படும் பஞ்சாபி கதைகள் என்பது பஞ்சாபி வழக்கிலுள்ள வாய்மொழி கதைகூறல் மரபாகும். அராபியத் தீபகற்பம் மற்றும் தற்போதைய ஈரான், ஆப்கானித்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தோர் வாயிலாக இக்கதைகூறல் மரபு தென்னாசியாவிற்கு வந்தடைந்தது.[1]

கிஸ்ஸே, அப்பகுதி முஸ்லிம்களின் காதல், வீரம், பண்புத் தகைமை, அறவொழுக்கம் முதலியற்றைப் பறைசாற்றும், புகழ்பெற்ற கதைகளை வழிவழியாகப் பரிமாறும்  இசுலாமிய பாரசீக பண்பாட்டு வழக்கத்தைப் பிரதிபலிக்கும். இந்தியாவை வந்தடைகையில், மதச்சமய வரைமுறைகளைக் கடந்து மதச்சார்பற்ற உருக் கொண்டு, இசுலாமிற்கு முந்தையய பஞ்சாபி பண்பாட்டு மற்றும் நாட்டுப்புறவியல் கூறுகளையும் அதனுள் ஏற்றுக்கொண்டது.[1]

பெயர்க்காரணம்

[தொகு]

கிஸ்ஸா (பஞ்சாபி உச்சரிப்பு: [kɪssɑː]) என்ற சொல் அரபு மொழியில்காப்பியப் பழங்கதை’ அல்லது ‘நாட்டுப்புறப் பழங்கதை’ என்று பொருள்படும். ஏறத்தாழ அனைத்துத் தெற்காசிய மொழிகளிலும் இச்சொல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாசியாவின் பஞ்சாபி, உருது மற்றும் இந்தி போன்ற வட-மேற்கு மொழிகளில் இது பொதுவான ஒரு பெயர்ச்சொல்லாக விளங்குகிறது. பொதுவாக இச்சொல் 'சுவையான கதை' அல்லது 'கட்டுக்கதை' என்ற பொருளில் வழங்கப்படும்.

பஞ்சாபி பண்பாட்டில் கிஸ்ஸே

[தொகு]

பஞ்சாபி மொழி அதன் வளமான கிஸ்ஸே வகை இலக்கியக் களஞ்சியத்திற்குப் பெயர் பெற்றது. அவற்றில் பெரும்பகுதி காதல், உணர்ச்சிப் பெருக்கு, துரோகம், தியாகம், சமூக விழுமியம், பெரும் அமைப்பிற்கெதிரான பொது மனிதனின் போராட்டம் முதலியவைப் பற்றியதாக அமைவன. பஞ்சாபி மரபில் நட்பு, பற்றுறுதி, காதல் மற்றும் 'குவால்' (வாக்கு அல்லது சத்தியம்) ஆகியவை பெருமதிப்புடையவையாக போற்றப்படும். ஆகையால் பெருவாரியான கிஸ்ஸா கதைகள் இவற்றைக் கருவாகக் கொண்டு அமையும்.

கிஸ்ஸே பஞ்சாபி நாட்டுப்புற இசையின் ஊக்கவிசையாகத் திகழ்ந்து அதன் வெளிப்பாட்டிற்கு ஆழத்தையும் வளத்தையும் அளித்ததாகக் கருதப்படுகிறது. இம்மரபு தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவும் எழுத்துவடிவிலும், பொதுவில் ஒப்பிக்கப்பட்டும், பாட்டிக் கதைகளாகக் குழந்தைகளுக்குக் கூறப்பட்டும், இசையோடு நாட்டுப்புறப் பாடல்களாகவும் வழங்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு கிஸ்ஸா இயற்றத்திற்கும் தனிப்பட்ட வரைமுறைகள் உண்டு. ஒரு வகை கிஸ்ஸாவைப் பாடவோ ஒப்பிப்பவரோ மற்றொரு வகை கிஸ்ஸாவையும் வழங்க முடியும் என்பதற்கில்லை. இசை அளவில் உள்ள குரல் பரப்புகளையும் நிறுத்தங்களையும் சரியாக இயற்றாது போனால், ஒருவரால் கிஸ்ஸா வழங்குவதைத் தொடர முடியாத அளவிற்கு மூச்சுத் திணறும். நவீன பஞ்சாபி இசையில் பயன்படுத்தப்படும் தாளங்கள் (பாங்க்ரா என்று தவறாகக் குறிக்கப்படுகிறது) பெரும்பாலும் தொன்றுதொட்டு வழங்கப்படும் கிஸ்ஸா மரபில் இருந்து பெறப்பட்டவை. கிஸ்ஸே வகையைச் சார்ந்த கவிதைகள் பஞ்சாபியில் இயற்றப்பட்ட சிறந்த கவிதைகளுள் அடங்குமெனக் கருதப்படுகிறது. இன்றளவும் பாக்கித்தானின் பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கவானி பஜாரில் (கதை கூறுவோர் சந்தை) புகழ்பெற்ற கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கிஸ்ஸே ஒப்பித்தலையும் பாடல்களையும் கேட்க மக்கள் பெருமளவில் கூடுகின்றனர்.

கிஸ்ஸே வகை கவிதைகள்

[தொகு]

வாரிஸ் ஷா'வின் (1722–1798) ‘ஈர் ராஞ்சா’ (‘ஈர்’ கிஸ்ஸா என்றறியப்பட்ட) கிஸ்ஸா அனைத்து கிஸ்ஸாக்களிலும் மிகுந்த புகழ் பெற்றதாகும். குரு கோவிந்த் சிங், பாபா ஃபரீது போன்ற மதச்சமய தலைவர்களும் புரட்சியாளர்களும் புகழ்பெற்ற கிஸ்ஸாக்களில் இருந்து நீதிகளையும் செய்திகளையும் எடுத்துக் கூறுமளவிற்கு பஞ்சாபி பண்பாட்டில் கிஸ்ஸேவின் தாக்கம் மிக வலுவாக உள்ளது. பஞ்சாபின் பல தலைமுறை ஆன்மீகத் தலைவர்களையும் சமூக ஆர்வலர்களையும் மெய்ஞான மற்றும் ஆன்மிகச் செய்திகளை இளைஞர் காதல் கதைகளோடு இணைத்து வழங்க கிஸ்ஸேவின் புகழும் கிட்டதட்ட தெய்வ நிலையும் ஊக்கமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. பஞ்சாப் பகுதியில் சூபி இயக்கம் தோன்ற இது வழிவகை செய்தது.

பஞ்சாபி சூபி கிஸ்ஸே இயற்றிய மிகுந்த புகழ் பெற்ற கவிஞர் புல்லே ஷா (ஏ.தா.1680-1758) ஆவார். இளைஞர் முதியோர் என்று வயது பேதமற்று அனைவராலும் மதித்துப் போற்றப்படுமாறு காதலையும் இறைவனையும் குறித்து அவர் இயற்றிய கலம்கள் (கவிதைகள்) புகழ் வாய்ந்தவை. அண்மைக் காலங்களில் தென்னாசியப் பாடகர்கள் இக்கவிதைகளின் சாரங்களைத் தங்கள் இசைக் கோவைகளில் எடுத்தாண்டுள்ளனர். நாட்டுப்புற இசை இரட்டையர்களான குல்தீப் மனக் மற்றும் தேவ் தரிகே வாலா ஏறத்தாழ அவரின் அனைத்து கிஸ்ஸாக்களைக் குறித்து எழுதியும் பாடியுமுள்ளனர். சமீபத்தில் ரப்பி (ரபி செர்கில் இயற்றியது) கோவையில், புல்லே ஷாவின் ‘புல்லா கி ஜானா மே கௌன்’ என்பதன் ஆங்கில பெயர்ப்பை (‘I know not who I am’) இயற்றியுள்ளார். சிலவாண்டுகளுக்கு முன் ஹர்பஜன் மான் என்ற கனடா-வாழ் பஞ்சாபிப் பாடகர் பீலு இயற்றிய ‘மிர்சா சாகிபானை’ புத்தாக்கம் செய்து வழங்கினார். பாக்கித்தானின் மாண்டி பகாவுத்தீன் மாவட்டத்தைச் சேர்ந்த டயிம் இக்பால் டயிமும் மிர்சா சாகிபான், லைலா மஜுனு, சோனி மகிவால், பிலால் பிட்டி உள்ளிட்ட பலவற்றைக் குறித்த கிஸ்ஸாக்களை இயற்றியுள்ளார். அவர் "ஷா நாமா கர்பலா" மற்றும் "கம்பல் போஷ்" ஆகியவற்றை இயற்றியதன் மூலம் புகழ் பெற்றார்.

புகழ்பெற்ற கிஸ்ஸே

[தொகு]

பஞ்சாப் பகுதியில் திரிந்த முஸ்லிம் கவிஞர்களே பஞ்சாபி கிஸ்ஸேவின் பெரும்பகுதியை இயற்றினர். பழைய கிஸ்ஸேக்கள் பொதுவாக உருதுவில் படைக்கப்பட்டன. புகழ்பெற்ற கிஸ்ஸேக்களுள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • மிர்சா சாகிபான்’ - பீலு
  • ஈர் ராஞ்சா’ - வாரிஸ் ஷா
  • சோனி மகிவால்’ - ஃபஸல் ஷா செய்யது
  • சாஸ்ஸி புன்னூ’ - ஹஷம் ஷா
  • சுச்சா சிங் சூர்மா
  • ஜியோனா மோர்’ - பக்வான் சிங்
  • ஷிரின் ஃபராத்
  • பூரான் பகத்’ - கதர்யார்
  • கேஹார் சிங் ராம் கௌர்
  • ஷாம் கௌர், ஷாம் சிங், ஷாம் லால்
  • தோல் சம்மி
  • யூசப்பும் சுலைக்காவும்’ - ஹபீசு பர்குர்தார்
  • லைலா மஜுனு
  • கௌலான்
  • துல்லா பட்டி
  • மனு குக்கூ
  • உஸ்தாது அர்மான்
  • ஜாட் பரம்ஸு

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mir, Farina. "Representations of Piety and Community in Late-nineteenth-century Punjabi Qisse". Columbia University. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-07-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_கிஸ்ஸா&oldid=3624964" இலிருந்து மீள்விக்கப்பட்டது