துல்லா பட்டி
துல்லா பட்டி | |
---|---|
மியானி சாகிபு கப்ரிசுத்தான் (கல்லறை)யில் நல்லடக்கம் | |
பிறப்பு | நடு-16ஆவது நூற்றாண்டு சந்தல் பார், பஞ்சாப் பகுதி, இந்தியா (தற்கால பாக்கித்தான்) |
இறப்பு | 1599 லாகூர், பஞ்சாப் பகுதி, இந்தியா (தற்கால பாக்கித்தான்) |
மற்ற பெயர்கள் | அப்துல்லா பட்டி |
அப்துல்லா பட்டி (Abdullah Bhatti) என்ற இயற்பெயருடைய துல்லா பட்டி (Dulla Bhatti அல்லது Dullah Bhatti) புகழ்பெற்ற பஞ்சாபிய நாட்டுப்புற நாயகனும் பேரரசர் அக்பர் ஆட்சியில் முகலாயருக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரரும் ஆவார். இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிடப்படுகின்றார். இவர் 1599இல் மரணமடைந்தார்.[1]
வாழ்க்கை
[தொகு]துல்லா பட்டி ராஜ்புத் முஸ்லிம் பட்டி இனத்தைச் சேர்ந்தவர்; ஊரக விவசாயி அல்லது நிலக்கிழாராக இருந்தார்.[2] இளைஞராக, உள்ளூர் பஞ்சாபிகளுக்கு மொகலாய அரசினர் இழைத்த அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து அவர்களுக்கு எதிராக மாறினார். மொகலாயர்களுக்கு எதிராக கரந்தடிப் போர் முறையில் போரிட்டு 10, 12 ஆண்டுகளுக்கு வெற்றியும் பெற்று வந்தார்.[3] இருப்பினும் சிலர் காட்டிக் கொடுத்தமையால் மொகலாயர்களிடம் இறுதியில் தோல்வியடைந்தார்.[4] லாகூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 1599இல் அங்கு தூக்கிலிடப்பட்டார்.[5]
பரவல் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் இடம் பெற்றமை
[தொகு]- பஞ்சாபியருக்கு இன்றும் பட்டி மிகப் பெரிய நாயகனாக விளங்குகின்றார். மரபுவழி நாட்டார் பாடல்களில் இவர் பெரிதும் இடம் பெறுகிறார்.[6]
- மரபுசார் தாதி நிகழ்ச்சிகளில் நினைவு கூரப்படுகிறார்; காட்டாக கவிதைகள் நடிக்கப்படுகையில் , நடிகர்கள் இவரது வீரச் செயல்களை செய்து காட்டுகின்றனர்.
- பல நூல்களும், புனைவுக் கதைகளும் நாடகங்களும் இவரது வாழ்க்கையையும் வீரச் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இதில் 1973இல் பாக்கித்தானிய எழுத்தாளர் நஜம் உசைன் சையது எழுதிய தக்த் லாகூர் என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்றது.
- பல உருது மற்றும் பஞ்சாபி திரைப்படங்கள் இவரை வைத்து எடுக்கப்பட்டுள்ளன; 1956இல் வெளியான புகழ்பெற்ற இயக்குநர் அன்வர் கமால் பாஷாவின் துல்லா பட்டி குறிப்பிடத்தக்கதாகும்.