நினைவுச் சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நினைவுச்சின்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகலாயப் பேரரசன் சாஜகான், இறந்த தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டிய நினைவுச் சின்னம், தாஜ்மகால்

நினைவுச் சின்னம் (Monument) என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம். ஓர் இடத்தின் அழகை மேம்படுத்துவதற்காகவும் இவை பயன்படுகின்றன. வாஷிங்டன் டி. சி., புது தில்லி, பிரேசிலியா போன்றவை உள்ளிட்ட உலகின் பல நகரங்கள் நினைவுச் சின்னங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு முன்னரே, நகரின் பொது இடங்களை ஒழுங்கமைக்கும் நோக்கில் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் அமைவிடம் பற்றிய எண்ணம் உருவானது. பழமையான நகரங்களில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஏற்கனவே முக்கியமான இடங்களிலேயே அமைந்திருக்கும். சில வேளைகளில் குறிப்பிட்ட நினைவுச் சின்னங்களைக் குவியமாக வைத்துப் பழைய நகரங்கள் மீள்வடிவமைப்புச் செய்யப்படுவதும் உண்டு. பொதுவாக, நினைவுச் சின்னங்கள் அவற்றின் சூழலில் இருந்து வெளிப்பட்டு நிற்பதற்காக அளவில் பெரியவையாக அமைக்கப்படுவது உண்டு. எனினும் நினைவுச் சின்னங்கள் அளவில் பெரியவையாக அமையவேண்டும் என்பதில்லை.

நினைவுச் சின்ன உருவாக்கம்[தொகு]

சீனப் பெருஞ் சுவர்

செயற்பாட்டுக்குரிய அமைப்புகள் அவற்றின் பழமை, பருமன், வரலாற்று முக்கியத்துவம் என்பன காரணமாக நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுவது உண்டு. சீனப் பெருஞ் சுவர் அதன் பழமை, அளவு என்பவற்றினால் ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. பிரான்சில் உள்ள ஓராதூர்-சர்-கிளான்ஸ் என்னும் ஊர் அங்கு இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுக்காக நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. அரசியல், வரலாற்றுத் தகவல்களை உணர்த்துவதற்காகவும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. இவை சமகால அரசியல் பலத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவது உண்டு. பல்வேறு வெற்றித் தூண்கள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலைகள் போலப் பல நாடுகளில் அமைக்கப்படும் அரசியல் தலைவர்களது சிலைகள் என்பன இவ்வகையைச் சார்ந்தவை.

நோக்கு வேறுபாடுகள்[தொகு]

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள 11 ஆம் நூற்றாண்டு இந்துக் கோயிலான தஞ்சைப் பெரிய கோயில்

நினைவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து, பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ நிலையானதாகவோ தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வெவ்வேறு நோக்கில் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு வெற்றிச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் விடுதலையின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது அடிமைத்தனத்தின் சின்னமாக உணரக்கூடும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேர்லின் நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட பேர்லின் சுவர், கிழக்கு ஜேர்மனியின் ஆதரவாளர்களால், மேற்குலக அரசியல் கோட்பாடுகளில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும்; அதேவேளை, மேற்கு நாடுகளின் ஆதரவாளர்கள் அதனை ஒரு பாசிச, அடக்குமுறைச் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க கட்டிடக்கலைச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகள், தஞ்சைப் பெரிய கோயில் போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர்.

நோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை, வேறிடங்களுக்கு அகற்றப்பட்டமை, ஈராக்கில் சதாம் உசைனின் தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றாக இருந்த லித்துவேனியாவில் இவ்வாறு அகற்றப்பட்ட சோவியத் காலச் சிலைகளின் காட்சிக்காகவே குருத்தாஸ் பூங்கா (Grūtas Park) எனப்படும் தனியார் காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே இவ்வாறான 86 சிலைகள் உள்ளதாக அறியப்படுகின்றது.


சில குடியரசு நாடுகளில் கூட வழமையான ஆட்சி மாற்றங்களின் போது நினைவுச் சின்னங்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது உண்டு. உள்நாட்டுப் போர்களின்போது அமைக்கப்படுகின்ற நினைவுச் சின்னங்கள் பல சூழ்நிலைகளில் குறைந்த வாழ்நாள் கொண்டவையாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்களான பாரிய புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றிய சில ஐரோப்பிய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர்[1].

குறியீடுகளாக நினைவுச் சின்னங்கள்[தொகு]

அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை

நினைவுச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருவதுடன், அவையே நீண்டகாலம் உழைக்கக் கூடியனவாகவும், பண்டைக்காலப் பண்பாடுகளின் புகழ்பெற்ற குறியீடுகளாகவும் விளங்குகின்றன. எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கப் பார்த்தினன், தமிழ்நாட்டுக் கோபுரங்கள் என்பன அந்நந்தப் பண்பாடுகளுக்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. நினைவுச் சின்னங்களைக் கொண்டே சில நாடுகளைப் பிற நாட்டவர் அடையாளம் காண்பதும் உண்டு. இந்த வகையில் இந்தியா என்னும்போது பலருக்கும் நினைவில் வருவது தாஜ்மகால் ஆகும். அண்மைக் காலங்களில், மிகப் பெரிய அளவு கொண்ட அமைப்புகளான, அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, பிரான்சின் ஈபெல் கோபுரம் என்பவை நாடுகளின் குறியீடுகளாக மாறிவிட்டன.

நினைவுச் சின்ன வகைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. மயில்வாகனப் புலவர்; யாழ்ப்பாண வைபவமாலை; பதிப்பாசிரியர்:குல. சபாநாதன்; இந்துசமய அலுவல்கள் திணைக்களம்; கொழும்பு; சித்திரை 1995 (மூன்றாம் பதிப்பு); பக் 79 - 81

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவுச்_சின்னம்&oldid=3370312" இலிருந்து மீள்விக்கப்பட்டது