தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மெதீனாப்பூர் மாவட்டத்தில் உள்ள தம்லுக் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தம்லுக், சாலைவழியாக கொல்கத்தாவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ரூப்னார்யான் ஆற்றின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ள தம்லுக், பண்டைய பாளி, சமசுக்கிருத இலக்கியங்களில், தம்ராலிபி, தம்ராலிப்தா, டமாலிப்தா, வேலகுலா போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்தியாவிலிருந்து தொலைதூர இடங்களுக்குக் கடல்வழியாகச் செல்வோர் பயன்படுத்தும் ஒரு துறைமுகமாக இது இருந்துள்ளது. பண்டைக்காலப் புவியியலாளர்களான பிளினியும், தொலமியும் கூட இவ்விடத்தைப்பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

1954-55 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் புதியகற்காலத்தில் இருந்து அண்மைக்காலம் வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியது. உள்ளூர் மக்களின் முயற்சியினால், தம்லுக்கினதும் அண்டிய பகுதிகளினதும் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் தம்லுக் அருங்காட்சியகமும், ஆய்வு மையமும் நிறுவப்பட்டன.

தற்போது இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிக்கூடங்களில், வரலாற்றுக்கு முந்தியகாலத்தைச் சேர்ந்த அரும்பொருட்களும், எலும்பினால் செய்யப்பட்ட கருவிகள், அம்பு முனைகள், கத்தி, தூண்டில்கள், என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், மௌரியப் பேரரசு, சுங்கர், குசாணர், குப்தப் பேரரசு, பாலர் காலத்திய மற்றும் பிற்காலத்து முசுலிம் ஆட்சியாளர் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]