உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக முத்திரை
குறிக்கோள்: அனைவரின் நலனுக்காக[1]
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 29, 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-07-29)
முன்னிருந்த அமைப்பு
ஆட்சி எல்லைஅமெரிக்க அரசு
தலைமையகம்வாஷிங்டன், டி. சி.
பணியாட்கள்18,800+[3]
ஆண்டு நிதிUS$17.8 பில்லியன் (FY 2012)[4]
அமைப்பு தலைமைகள்
  • சார்லஸ் போல்டன், நிர்வாகி
  • லோரீ கார்வெர், துணை நிர்வாகி
வலைத்தளம்nasa.gov

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.[5] இது 1958 ஜூலை 29 அன்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது; இது இதற்கு முன் வானூர்தியியல் ஆராய்ச்சிகளுக்காக இருந்த, தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவைக் (நாகா) கலைத்து அதன் வடிவில் நிறுவப்பட்டது. இதன் ஆண்டு வரவு செலவு, 2012 இல் $17.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

பிப்ரவரி 2006-லிருந்து விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல் என்பது நாசாவின் தாரக மந்திரமாகவுள்ளது. செப்டம்பர் 14, 2011 அன்று, புதிய விண்வெளி ஏவுத் தொகுதியின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது; இதன் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இதுவரை செல்லவியலாத தொலைவுகளுக்கெல்லாம் செல்லவியலும் எனவும், எதிர்காலத்தில் மனிதர் செல்லும் விண்வெளி ஆய்வுகளுக்குப் புதுபெரும் தொடக்கமாக இருக்குமெனவும் நாசா அறிவித்துள்ளது.

அக்டோபர் 1 1958 அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளைச் செய்துவருகிறது. குறிப்பாக அப்பல்லோ திட்டம், விண்ணாய்வகம் (Skylab) எனும் விண்வெளி நிலையம், விண்ணோடத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, ஓரியான் பல்நோக்க குழு வாகனம் மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும் இதுவே கண்காணிக்கிறது.

புவி அவதானிப்புத் தொகுதி மூலம் புவியை மேலும் புரிந்துகொள்ளுதல், அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் பரிதியியற்பியல் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் பரிதியியற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சூரியக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற விண்ணுலவிகள் அனுப்பி ஆராயந்தறிதல், பெரு வெடிப்புக் கோட்பாடு போன்ற வானியற்பியல் கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கண்டறியும் தரவுத்தொகுப்புகளைப் பலநாடுகளின் அமைப்புகளோடும் பங்கீடும் செய்கிறது. விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.

உருவாக்கம்[தொகு]

முனைவர் வில்லியம் எச்.பிக்கெரிங், (மத்தியில்) தாரை உந்துகை ஆய்வகத்தின் இயக்குநர், அதிபர் ஜான் எஃப்.கென்னடி, (வலது), ஆகியோரை காண்பிக்கும் 1963-இல் எடுக்கப்பட்ட படம். நாசா மேலாண்மையர் ஜேம்சு வெப் பின்புலத்தில் உள்ளார். அவர்கள் திட்ட மாதிரியுடன் மரைனர் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுகின்றனர்.

1946-களிலிருந்து தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவானது மீயொலிவேக பெல் எக்சு-1 போன்ற இராக்கெட்-விமான சோதனைகளை மேற்கொண்டுவந்தது. 1950-களில், அதாவது பன்னாட்டு புவியமைப்பியல் ஆண்டுக்கான (1957-58) போட்டியாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுதல் இருந்தது. இதற்கான அமெரிக்கத் திட்டம் வான்கார்ட் திட்டம் ஆகும். அக்டோபர் 4, 1957-இல் சோவியத் யூனியன் இசுப்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதலில் ஏவி சாதனை படைத்தது. அதன்பின்னர் அமெரிக்கா, தனது விண்வெளித் திட்டங்களில் தீவிர கவனம் காட்ட ஆரம்பித்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் அமெரிக்கா பின்தங்கிப் போனதாக அமெரிக்க காங்கிரசு கருதியது; இது இசுப்புட்னிக் நெருக்கடி என்று அறியப்படுகிறது. ஆகவே அது தொடர்பாக விரைவாக, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரசு வற்புறுத்தியது. அதன்காரணமாக, அமெரிக்காவின் அன்றைய அதிபரான டிவெய்ட் டி. ஐசன்ஹோவர் அவரது ஆலோசகர்களுடன் தீவரமான திட்ட கருத்தாங்களில் ஈடுபட்டார். இதன் முடிவில், இராணுவ செயல்பாடுகள் தவிர்த்த விண் ஆய்வுகளுக்கு, நாகா-வினை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. பிப்ரவரி 1958-இல் இராணுவப் பயன்பாடுகளுக்கான விண் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்த மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிறுவனம் (Advanced Research Projects Agency - ARPA) ஏற்படுத்தப்பட்டது.

சூலை 29, 1958-இல் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி சட்டத்தில், இதன் மூலம் நாசாவினை ஆரம்பித்து, அதிபர் ஐசன்ஹோவர் ஒப்பமிட்டார். அக்டோபர் 1,1958-இல் நாசா செயல்படத் தொடங்கியபோது, 46 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நாகா அதன் 8000 பணியாளர்களுடன் முழுமையாக நாசாவாக மாற்றம் பெற்றது. ஆண்டு நிதிநிலைக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது; மேலும், மூன்று ஆராய்ச்சி நிலையங்களும் (லாங்லி வானூர்தியியல் ஆய்வகம், ஏம்சு வானூர்தியியல் ஆய்வகம், மற்றும் லூவிசு பறப்பு உந்துகை ஆய்வகம்) மற்றும் இரண்டு சிறிய சோதனை அமைப்புகளும் நாசாவின்வசம் வந்தது. 1959-ஆம் ஆண்டு நாசா முத்திரைக்கு அதிபர் ஐசன்ஹோவர் ஒப்புதல் வழங்கினார். இராணுவ எறிகணை நிறுவனம் மற்றும் ஐக்கிய அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நிலையத்தின் அங்கங்கள் நாசாவுடன் சேர்க்கப்பட்டன. அமெரிக்கா சோவியத் யூனியனுடன் விண்பந்தயத்தில் ஈடுபட்டதில் முக்கிய பங்கு செருமானிய இராக்கெட் திட்டத்தைச் சாரும். செருமானிய இராக்கெட் பொறியாளரான வெர்னர் வான் புரௌன் என்பாரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகவிருந்தது, அவர் அப்போது இராணுவ எறிகணை நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். வான் புரௌன் வி-2 எறிகணையை வெற்றிகரமாக வடிவமைப்பதற்கு முன்னர் அமெரிக்கரான இராபர்ட் கோடார்டு என்பார் எறிசுகளின் தொழில்நுட்பத்தில் பல அங்கங்களை தனது ஆராய்ச்சியால் கண்டறிந்தார்; அவரது ஆராய்ச்சி, பின்வந்த பல எறிசுகள், ஏவுகணைகள் ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது. நாசா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க வான்படை மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களில் செய்யப்பட்டு வந்த விண்வெளி ஆராய்ச்சிகள் பலவும் நாசாவுக்கு மாற்றப்பட்டது. மேலும் 1958-இல் தாரை உந்துகை ஆய்வகம் (Jet Propulsion Laboratory) நாசாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது; இது கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

விண்பறப்புத் திட்டங்கள்[தொகு]

மே 28, 1964 அன்று, சாடர்ன் I SA-6 ஏவுதலுக்கான கட்டுப்பாட்டுத் தளத்தில். வான் புரௌன் மத்தியில் இருக்கிறார்.

நாசாவின் திட்டங்களுள் விண்பறப்புத் திட்டங்களே மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன; ஆளுள்ள மற்றும் ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் பலவித ஆராய்ச்சிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் - அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகளை எடுத்துச்செல்ல, ஆளுள்ள விண்பறப்புத் திட்டங்களுக்கு முன்னதான சோதனைகள், விண்வெளி ஆய்வகத்துக்கு உதவ மற்றும் பலவித செயற்கைக்கோள்களை ஏவுதல் ஆகியவற்றுக்காக செய்யப்படுகின்றன. ஆரம்ப காலகட்டங்களில் நாசாவின் திட்டங்கள், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையிலான விண்வெளிப் பந்தயத்தில் வெற்றிபெறுவதற்காக செயல்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் சோவியத் யூனியன் முன்னணியில் இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா நிலவுக்கு முதலில் ஆளுள்ள பயணத்தை மேற்கொண்டு விண்பந்தயத்தில் முன்னணி பெற்றது. ஆளற்ற விண்பயணத் திட்டங்கள் இதுநாள் வரை சூரியக் குடும்பத்தின் பல கோள்களையும் சூரியனையும் ஆய்வு செய்துள்ளன. மேலும் பிரபஞ்சத்தை ஆய்வுசெய்வதற்கு புவியைச்சுற்றும் பல தொலைநோக்கிகளும் புவியை ஆய்வு செய்யும் பல செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன.

ஆளுள்ள விண்திட்டங்கள்[தொகு]

நாகாவினால் ஆரம்பிக்கப்பட்ட இராக்கெட்-வானூர்தித் திட்டங்கள் நாசாவினால் அடுத்தநிலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன; அவை ஓர் ஆள் சென்ற, இராணுவ இராக்கெட்டுகளால் ஏவப்பட்ட விண்பயணங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு கவனம் திருப்பப்பட்டபின் சிக்கனமான ஆனால் சிக்கலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆதரவுத் திட்டங்கள், ஆளுள்ள திட்டம், ஆளற்ற திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன மற்றும் பெரிய ஏவூர்திகள், விண்கலம் மற்றும் நிலவில் இறங்கும் கலம் ஆகியவை உருவாக்கப்பட்டன. நிலவில் தரையிறங்கிய பின்னர், விண்பந்தயம் முடிவுக்கு வந்தது; இதற்குப் பின்னர் நாசாவின் செயல்பாடுகள் குறைந்தன. பன்னாட்டு உதவியுடன் தற்காலிக அல்லது நிரந்தரமான விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கான திட்டம் விண்பந்தய காலத்திலேயே இருந்தது; இதன்மூலம் பன்னாடுகளின் ஒத்துழைப்பு அதிகமாவதுடன் விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதன் பெரும் பொருளாதார சுமையும் குறைந்தது. மொத்தத்தில், 1958-க்குப் பிறகு நூற்றுக்கும் மேலான ஆளுள்ள விண்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீல் ஆம்ஸ்ட்றோங் மற்றும் எக்சு-15, 1960

எக்சு-15 ஏவூர்தி-வானூர்தி[தொகு]

நாகா எக்சு.எஸ்.-1 (பெல் எக்சு-1 ) திட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வான்படை மற்றும் கப்பற்படை ஒத்துழைப்புடன் எக்சு-15 உட்பட கூடுதலான சோதனை வாகனங்கள்/திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒல்லியான விமானவுடலுடன் எரிபொருள் கொண்டிருக்கும் சீர்வடிவங்களும் ஆரம்பகால கணினிமயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் எக்சு-15 வடிவமைப்பில் முக்கியமான அங்கங்களாகும். விண்பந்தயம் ஆரம்பமான பிறகு, ஆளுள்ள விண்பயணத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்கனவே இருந்த ஏவூர்திகள் மூலம் ஏவப்படக்கூடிய எளிமையான விண்கலங்கள் பயன்படுத்தப்பட முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆகவே விண்பயணத்துக்கு, எக்சு-15 வடிவமைப்பை மாற்றுவதற்குப் பதிலாக சிறு அறையுடன் கூடிய விண்கல வடிவமைப்புகள் தேர்வுசெய்யப்பட்டன. அதற்குப் பதிலாக,விண்பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான கருவிகளை உருவாக்கி மேம்படுத்தவும் எக்சு-15கள் பயன்படுத்தப்பட்டன. விண்கலத்தின் திசையமைவை மாற்றுவதற்கு தாரைகளைப் பயன்படுத்துவது, விண்பயண வீரர்களுக்கான விண்ணுடைகள் மற்றும் தொடுவானத்தை வரையறுப்பதற்கான தெரிமுறை செலுத்துநெறி ஆகியவை இதன் மூலமே உருவாக்கி மேம்படுத்தப்பட்டன. 1959-லிருந்து 1968 வரை 200-க்கு சற்றே குறைவான விண்பயணங்கள் எக்சு-15-ஆல் மேற்கொள்ளப்பட்டன; இதன்மூலம் விண்பந்தய காலத்துக்குத் தேவையான தரவுகள் மட்டுமின்றி விண்ணோட வடிவமைப்புக்குத் தேவையான தரவுகளும் பெறப்பட்டன. எக்சு-15 அதிகபட்சமாக 354,200 அடிகள் (107.96 கிமீ) உயரத்தை எட்டியது.

மெர்க்குரி திட்டம் (1959-63)[தொகு]

மெர்குரி திட்ட வரைபடம்

அமெரிக்க வான்படை விரைவில் விண்வெளியில் மனிதன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தது. 1958-ஆம் ஆண்டில் மெர்க்குரித் திட்டம் தொடங்கப்பட்டபோது, அமெரிக்க வான்படையின் அத்திட்டத்தினை தன் செயல்திட்டமாக நாசா எடுத்துக்கொண்டது. முதலில் அமெரிக்க வான்படை, கடற்படை மற்றும் மரைன் சோதனை விமானித் திட்டங்களிலிருந்து ஏழு வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். மே 5, 1961 அன்று ஆலன் ஷெபர்டு அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆனார்; அவர் ரெட்ஸ்டோன் உந்துகலன் மூலம் ஏவப்பட்ட ஃபிரீடம் 7 கலத்தில் 15 நிமிட எறிதல் வகை (துணை சுற்றுப்பாதை) பறத்தல் மூலம் இச்சாதனையை புரிந்தார்.

மெர்க்குரி திட்டத்துக்கு போட்டியாக சோவியத் ஒன்றியம் வஸ்தோக் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் சோவியத் ஒன்றியம் மனிதர்களை விண்வெளிக்கு செலுத்தியது அமெரிக்கர்கள் விண்வெளி ஆய்வில் பின்தங்கினர். இதனால் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி நிலவில் முதலில் மனிதனை அமெரிக்கா செலுத்தவேண்டும் என்று விண்வெளி ஆராய்ட்சிக்கு அதிக நிதி ஒதுக்கும் படி அமெரிக்க கீழவையான காங்கிரசை கேட்டார். அப்பல்லோ திட்டத்துக்கான உந்து சக்தியாக இது இருந்தது.

ஜெமினி திட்டம் (1961-66)[தொகு]

மெர்க்குரி திட்ட விண்கலன்களை அடைப்படையாக கொண்டு நீண்ட நேரம், சரியாக புவியிரங்கு திறன், இரு விண்கலங்களை அருகில் நிறுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இது ஜெமினி திட்டத்துக்கு உதவியாக இருந்தது, இத்திட்டம் இரு மனிதர்கள் விண்கலத்தில் செல்லும் படி வடிவமைக்கப்பட்டது. இது விண்வெளியில் சோவியத் ஒன்றியத்தின் முன்னிலையை குறைப்பதற்காகவும் அப்பல்லோ திட்டத்துக்கு ஆதரவாகவும் 1962ல் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 23, 1965ல் ஜெமினி 3 ஏவுகலன் மூலம் ஜான் யங், கஸ் கிரிசம் ஆகியோர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். 1965, 1966ம் ஆண்டுகளில் மொத்தம் 9 ஏவுதல் நடந்து 14 நாட்கள் விண்வெளியில் இருந்து இவ்விண்கலத்தின் உறுதி நிலைநிறுத்தப்பட்டது.

அப்பல்லோ திட்டம் (1961-72)[தொகு]

விண்ணாய்வகம் (1965-79)[தொகு]

அப்பல்லோ-சோயுசு சோதனை திட்டம் (1972-75)[தொகு]

விண்ணோடம் திட்டம் (1972-2011)[தொகு]

அனைத்துலக விண்வெளி நிலையம் (1993 முதல் தற்போது வரை)[தொகு]

வணிகரீதியிலான ஏவுகலம் திட்டம்[தொகு]

ஆராய்ச்சி[தொகு]

நில நடுக்கம்[தொகு]

உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களை நாசாவால் கணிக்க முடியாது இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) கூறியுள்ளது.[6]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lale Tayla and Figen Bingul (2007). "NASA stands "for the benefit of all."—Interview with NASA's Dr. Süleyman Gokoglu". The Light Millennium. பார்க்கப்பட்ட நாள் September 29, 2054. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. U.S. Centennial of Flight Commission, NACA பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம். Centennialofflight.gov. Retrieved on 2011-11-03.
  3. "NASA workforce profile". NASA. 11 January 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
  4. Teitel, Amy (2011-12-02). "A Mixed Bag for NASA's 2012 Budget". DiscoveryNews. Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012.
  5. National Aeronautics and Space Act, ஜூலை 29, 1958.
  6. நிலநடுக்கம்: நாசாவால் கணிக்க முடியாது இந்து தமிழ் 28.ஏப்ரல் 2015