மரைனர் திட்டம்
மரைனர் திட்டம் (Mariner program) என்பது செவ்வாய், வெள்ளி (மேர்க்குரி)[1] ஆகிய கோள்களை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்ணாய்வு மையத்தினால் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லா தானியங்கி விண்கப்பல்களுக்கான திட்டமாகும்.[2] பூமியில் இருந்து வேறொரு கோளுக்கு முதன் முதலில் ஒரு விண்கப்பலை இத்திட்டத்தின் மூலம் அனுப்பினர். அதுமட்டுமின்றி வேறொரு கோளை அதன் ஒழுக்கில் சுற்றி வந்த முதலாவது கப்பலும் இத்திட்டத்திலேயே அனுப்பப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்றைய மூன்றும் தொலைந்து போயின. இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட மரைனர் 11 மற்றும் மரைனர் 12 ஆகியன வொயேஜர் திட்டத்தில் அனுப்பப்பட்டன.
மரைனர் திட்டத்திற்கு மொத்தமாக 554 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிக்கப்பட்டுள்ளது.[3]
மரைனர் திட்டக் கலங்கள்
[தொகு]- மரைனர் 1 - வெள்ளி கோளை நோக்கி 1962 சூலை 22 இல் இது அனுப்பப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட 5 நிமிடங்கக்ளுக்குள் வெடித்துச் சிதறியது.
- மரைனர் 2 - இது 1962 ஆகத்து 27 இல் வெள்ளியை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது. இது வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இதுவே வேறொரு கோளை நோக்கிச் சென்ற முதலாவது விண்கலமாகும்.[4]
- மரைனர் 3 - இது செவ்வாய்க் கோளை நோக்கிச் செலுத்தப்பட்டது. ஆனால் இது தொலைந்து விட்டது.[5]
- மரைனர் 4 - இது செவ்வாய்க் கோளை நோக்கி 1964 நவம்பர் 28 இல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செவ்வாய்க்குக் கிட்டவாக சென்ற முதல் விண்கலமாகும். ஆனாலும் பின்னர் தொடர்புகள் கிடைக்கவில்லை.[5]
- மரைனர் 5 - 1967 சூன் 14 இல் வெள்ளி நோக்கி ஏவப்பட்டது. அக்டோபரில் கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது. வெள்ளியின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது. இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
- மரைனர் 6, 7 - இவை செவ்வாய்க்கு முறையே 1969 பெப்ரவரி 24 இலும், 1969 மார்ச் 27 இலும் ஏவப்பட்டன. செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன. இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.[6]
- மரைனர் 8, 9 - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை. மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது. மரைனர் 9 1971 மே மாதத்தில் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைக் கோள் ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு 1971 நவம்பரில் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது. இது தற்போது இயங்கவில்லை. ஆனாலும் இது 2022 வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[7]
- மரைனர் 10 - 1973 நவம்பர் 3 இல் வெள்ளியை (வீனசை) நோக்கிச் செலுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி புதன் (மேர்க்குரி) நோக்கிச் சென்றது. இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mariner Program". JPL Mission and Spacecraft Library. Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
- ↑ "Mariner-Venus 1962 Final Project Report" (PDF). NASA Technical Reports Server.
- ↑ Mariner 4, NSSDC Master Catalog
- ↑ "Mariner 2". US National Space Science Data Center.
- ↑ 5.0 5.1 Pyle, Rod (2012). Destination Mars. Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61614-589-7.
- ↑ Pyle, Rod (2012). Destination Mars. Prometheus Books. pp. 61–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61614-589-7.
- ↑ NASA - This Month in NASA History: Mariner 9 பரணிடப்பட்டது 2013-05-14 at the வந்தவழி இயந்திரம், November 29, 2011 — Vol. 4, Issue 9