தாரா சிங் (செயற்பாட்டாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா சிங் மல்கோத்ரா
பிறப்பு(1885-06-24)சூன் 24, 1885
இராவல்பிண்டி, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்கால-பாக்கித்தான்)
இறப்புநவம்பர் 22, 1967(1967-11-22) (அகவை 82)
சண்டிகர், இந்தியா
தேசியம்இந்தியர்

மாஸ்டர் தாரா சிங் (சூன் 24, 1885, பஞ்சாபின் இராவல்பிண்டி – நவம்பர் 22, 1967, சண்டிகர்) இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் குறிப்பிடத்தக்க சீக்கிய அரசியல் மற்றும் சமயத் தலைவர் ஆவார். சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவை சீரமைப்பதில் முதன்மைப் பங்காற்றினார்; இந்தியப் பிரிவினையின்போது சீக்கியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இருந்த தனிப் பஞ்சாப் மாநில கோரிக்கைக்கு தலைமையேற்றார். இந்திய தாளியலாளராகவும் அரசியல்வாதியாகவும் உள்ள இராஜிந்தர் கவுர் இவரது மகள் ஆவார்.

இளமைக் கல்வி[தொகு]

சூன் 24, 1885இல் தற்போதைய பாக்கித்தானின் இராவல்பிண்டி மாவட்டத்தில் அரியால் என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பக்சி கோபி சந்த் என்பதாகும். பிறந்தபோது இவருக்கு நானக் சந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. சிற்றூரில் பரம்பரை நில அளவை அதிகாரி இனத்தைச் (பட்வாரி) சேர்ந்த குடும்பத்தினர் சீக்கிய குருக்களிடமும் குர்பானியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர்.

துவக்கக் கல்வியை முடித்த பின்னர், இராவல்பிண்டியில் இருந்த கிறித்தவப் பள்ளியில் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களில் சிற்றூருக்கு வரும்போது புகழ்பெற்றிருந்த அத்தார் சிங் என் சீக்கியத் துறவியை கண்டும் கேட்டும் வந்தார். அவருடைய தூண்டுதலில் கால்சாவில் இணைந்து திருமுழுக்குப் பெயராக தாரா சிங் எனச் சூட்டப்பட்டார். 1903இல் மெட்றிக் தேறிய தாராசிங் அம்ரித்சரில் இருந்த கால்சா கல்லூரியில் இணைந்தார். 1907இல் பட்டப்படிப்பை முடித்த பிறகு லாகூரிலிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே இவருக்கு பிபி தேஜ் கவுருடன் திருமணம் நடைபெற்றது. 1908இல் படிப்பை முடித்த பிறகு தற்போதைய பைசலாபாத்தில் கால்சா உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார்.

பணிவாழ்வு[தொகு]

தன்னார்வல ஆசிரியர்களைக் கொண்டு தாராசிங் நடத்திய இந்தப் பள்ளி மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக விளங்கியது. சீக்கிய மேன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். கனடாவில் சீக்கிய புலம்பெயர்ந்தோர் படும் இன்னல்களை அறிந்த தாராசிங் கனடிய அரசுக்கு எதிராகவும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராகவும் போராடினார். 1914இல் பைசலாபாத்தை விட்டு கல்லார் எனுமிடத்தில் இருந்த கால்சா உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரானார். பின்னர் மீண்டும் தனது பள்ளிக்கே தலைமை ஆசிரியராகத் திரும்பினார்.

சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவும் குருத்வாரா இயக்கமும்[தொகு]

சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் முதல் உறுப்பினர்களில் ஒருவராக தாராசிங் இருந்தார். இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் குருத்துவாராக்களை இணைப்பதற்கு அவை உடன்படவில்லை. ஏற்கெனவே இருந்த கோயில் நிர்வாகிகளுக்கும் பிரபந்தக் குழு அனுப்பிய குழுவிற்கும் இடையே வன்முறை வெடித்தது. நங்கானா சாகிபு கோயிலில் பெப்ரவரி 20, 1921 அன்று அவ்வாறு கைப்பற்றச் சென்ற குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 130 பேர் கொல்லப்பட்டனர். இது நங்கானா சாகிபு படுகொலை எனப்படுகின்றது. இந்த நிகழ்வை அடுத்து ஆசிரியராக இருந்த தாராசிங் குருத்துவாரா இயக்கத்தில் இணைந்தார். பொற்கோயிலின் சாவிகளை அரசிடமிருந்து பெறுவதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தாராசிங் சிறை சென்றார். இறுதியில் அரசு பணிந்து சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு நியமித்த கரக் சிங்கிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தது. சீக்கியர்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசின் ஆணைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டம்[தொகு]

1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, குடிமை ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இதில் பங்கேற்ற தாராசிங் 100 பேருடன் பெசாவரில் பேரணி சென்று கைதானார்.1931இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. 1935இல் முசுலிம் நிலைக்கு தாராசிங் எதிர்ப்பு தெரிவித்தார். 1945 ஆம் ஆண்டில், வாவெல் மாநாட்டில் தாராசிங் சீக்கியர்களின் நிலை குறித்து பங்கெடுத்தார். மே 17 ம் நாள் கிரிப்ஸ் மிஷன், மற்றும் ஜூன் 3, 1946-ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த மவுண்ட்பேட்டன் முடிவு இவற்றிற்கு எதிராக தாராசிங் எதிர்த்தார். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நலனைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார். ஆகத்து 15, 1947 அன்று, விடுதலை பெற்றபோதும் சீக்கியர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தனி மாநில இயக்கம்[தொகு]

தாராசிங் மே 28, 1948 அன்று பஞ்சாப் தனி மாகாணம் அமைக்கக் கோரினார். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக மே 29, 1960 ஆம் ஆண்டு தனது கோரிக்கையை வலியுறுத்திப் போராடினார். 1965 சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு தேர்தல்களில் சாந்த் பதேசிங் தலைமையிலான அகாலிதளம் 100 இடங்களையும் தாராசிங்கின் கட்சி 40 இடங்களையும் வென்றன. இதனால் பதேசிங்கின் தலைமையை சீக்கியர்கள் ஏற்பதாகக் கூறிய தாராசிங் அரசியலிலிருந்து விலகுவதாகக் கூறினார். நவம்பர் 1966இல் தனிப் பஞ்சாப் மாநிலம் உருவானது. நவம்பர் 22, 1967இல் தாராசிங் மரணமடைந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]