உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் நெகாரா

ஆள்கூறுகள்: 4°42′N 102°28′E / 4.700°N 102.467°E / 4.700; 102.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமான் நெகாரா
Taman Negara
King George V National Park
தாமான் நெகாரா தேசியப் பூங்கா
Map showing the location of தாமான் நெகாரா Taman Negara
Map showing the location of தாமான் நெகாரா Taman Negara
தாமான் நெகாரா
அமைவிடம்
அருகாமை நகரம்கோலா தெம்பிலிங்
ஆள்கூறுகள்4°42′N 102°28′E / 4.700°N 102.467°E / 4.700; 102.467
பரப்பளவு4,343 km²
நிறுவப்பட்டது1938/1939
நிருவாக அமைப்புகாட்டுயிர், தேசியப்பூங்காக்கள் துறை

தாமான் நெகாரா; (மலாய்: Taman Nagara; ஆங்கிலம்: Taman Negara அல்லது King George V National Park) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது.

1938 - 1939-ஆம் ஆண்டுகளில், இந்த வனப் பூங்காவிற்கு கிங் ஜார்ஜ் V தேசியப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர், தாமான் நெகாரா என்று பெயர் மாற்றம் கண்டது. தாமான் (Taman) என்றால் மலாய் மொழியில் பூங்கா அல்லது வனம்; நெகாரா (Negara) என்றால் நாடு என்று பொருள்படும்.

தாமான் நெகாரா 4,343 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழைமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.[1][2]

அமைப்பு[தொகு]

தாமான் நெகாரா எனும் தேசியப் பூங்கா தீபகற்ப மலேசியாவின் மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது. அவை பகாங், கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள். அந்த மூன்று மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள தாமான் நெகாரா வனப் பகுதிகளுக்குத் தனித்தனியாகச் சட்டங்களை இயற்றியுள்ளன. பகாங் மாநிலம் Taman Negara Enactment (Pahang) No. 2 of 1939 எனும் சட்டத்தையும், கிளாந்தான் மாநிலம் Taman Negara Enactment (Kelantan) No. 14 of 1938 எனும் சட்டத்தையும், திராங்கானு மாநிலம் Taman Negara Enactment (Terengganu) No. 6 of 1939 எனும் சட்டத்தையும் இயற்றியுள்ளன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.

மூன்று தாமான் நெகாராக்கள்[தொகு]

  • முதல் வனப்பகுதி: பகாங் மாநிலத்தில் அமைந்து உள்ள வனப்பகுதி தாமான் நெகாரா பகாங் Taman Negara Pahang என்று அழைக்கப் படுகிறது. பகாங் மாநிலத்தின் பகுதி 2,477 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
  • இரண்டாம் வனப்பகுதி: கிளாந்தான் மாநிலத்தில் அமைந்து உள்ளது. அது தாமான் நெகாரா கிளாந்தான் (Taman Negara Kelantan) என்று அழைக்கப்படுகிறது. கிளாந்தான் மாநிலத்தின் பகுதி 1,043 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
  • மூன்றாம் வனப்பகுதி: திராங்கானு மாநிலத்தில் அமைந்து உள்ளது. இதை தாமான் நெகாரா திராங்கானு (Taman Negara Terengganu) என்று அழைக்கிறார்கள். திராங்கானு மாநிலத்தின் பகுதி 853 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றுச் சூழல் சுற்றுலா[தொகு]

அண்மைய காலங்களில், மலேசியாவின் பிரபல சுற்றுச் சூழல் சுற்றுலா (ecotourism) தளமாக தாமான் நெகாரா மாற்றம் கண்டு வருகிறது. தாமான் நெகாராவில் பல கவர்ச்சிகரமான புவியியல், உயிரியல் மையங்கள் உள்ளன. தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த இடமான குனோங் தகான் மலையும் இங்குதான் உள்ளது. மலையேறுபவர்கள் கோலா தகான், மெராப்போ வழியாகப் பயணங்களைத் தொடங்கலாம்.[3][4]

அரிய வகை பாலூட்டிகள்[தொகு]

தாமான் நெகாரா பூங்காவில் 10,000 வகையான தாவரங்கள், 150,000 வகையான பூச்சிகள், 25,000 வகையான முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள், 675 வகையான பறவைகள், 270 வகையான ஊர்வன, 250 வகையான நன்னீர் மீன்கள் மற்றும் 200 வகையான பாலூட்டிகள் உள்ளன. அவற்றில் சில வகை மிக மிக அரிதானவை.[5]

பல அரிய வகையான பாலூட்டிகளும் பறவைகளும் தாமான் நெகாராவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மலேசியப் புலி, நண்டு உண்ணும் குரங்குகள் (Crab-eating macaque), சுமத்திரா காண்டாமிருகங்கள், மலாயா காட்டெருதுகள் (Malayan Gaur), ஆசிய யானைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மிக அரிய பறவைகளில் புள்ளிக்கண் பறவை (Great Argus), சிகப்புக் காட்டுக் கோழிகள், மலாயா மயில் (Malayan Peacock-Pheasant) போன்றவையும் அடங்கும்.

அரிதான மயில் கெண்டை மீன்கள்[தொகு]

தகான் ஆற்றில் பெளி மீன் எனும் பொன் மீன் (ஆங்கிலம்: Malaysian Mahseer; மலாய்: Ikan Kelah) எனும் ஒரு வகையான அரிய மீன்கள் உள்ளன. இவற்றை மிகவும் பாதுகாப்பாகப் பராமரித்து வருகின்றனர். இவற்றை மயில் கெண்டை மீன் என்றும் அழைப்பார்கள். இந்த வகையான மீன்கள் மலேசியா, இந்தோனேசியா, தெற்கு ஆசியா போன்ற பகுதிகளின் ஆறுகளில் காணப்படுகின்றன.

தாமான் நெகாராவில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல், தாவரங்களைச் சேதம் செய்தல் போன்றவை சட்டப்படி குற்றமாகக் கருதப் படுகிறது. கோலா தகானில், தாமான் நெகாராவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு விதான நடைபாதை (Canopy Walkway), குவா தெலிங்கா குகைச் சுரங்கம், லத்தா பெக்கோ நீர்ச் சரிவும் உள்ளன.

மலாயா தொடருந்து நிறுவனம்[தொகு]

தாமான் நெகாராவிற்குள் செல்ல விரும்பும் அனைவரும் காட்டுயிர், தேசியப் பூங்காத் துறையினரின் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். கே.டி.எம் தொடர்வண்டிச் சேவையின் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் தாமான் நெகாராவிற்குச் செல்லலாம். கே.டி.எம். தொடருந்து சேவையைப் பயன்படுத்துபவர்கள் ஜெராண்டுட் நகரில் இறங்கி, தாமான் நெகாராவிற்குச் செல்ல வேண்டும்.

கே.டி.எம். என்றால் கிரேத்தாப்பி தானா மலாயு (Keretapi Tanah Melayu) (KTM). பேருந்தின் வழியாக தாமான் நெகாராவிற்குச் செல்பவர்கள், கோலாலம்பூர் தலைநகரில் இருந்து ஜெராண்டுட் நகருக்குச் செல்ல வேண்டும். இது மூன்று மணி நேரப் பயணம். பின்னர், அங்கு இருந்து கோலா தகான் பட்டினத்திற்கு படகு வழியாகச் செல்ல வேண்டும். இது இரண்டரை மணி நேரப் பயணம்.

உலகின் மிகப் பழைமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட தாமான் நெகாரா, பல்லாயிரக் கணக்கான வன உயிர்களின் புகலிடமாக விளங்கி வருகின்றது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Taman Negara is a grandmother to the rest of the world’s rainforests. During the Ice Ages, when immense glaciers covered much of the Earth, Malaysia was blessed with a location far enough away from the ice that its forest started to develop 130 million years ago
  2. "Taman Negara National Park is the perfect place if you love rainforest and outdoor activities. Experience walking on the world's longest canopy walkway, visiting the aborigine village, trekking under rainforest canopy, climbing the highest mountain in Peninsular Malaysia, caving, fishing, camping, observing wildlife,". Taman Negara. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  3. "Taman Negara is the oldest primary rainforest in the world. Research has shown that this rainforest has never been influenced by ice ages and other big changes in time. With 4343 square kilometers it is the biggest National Park in Malaysia, spread out over three states at Peninsular Malaysia; Pahang, Terengganu and Kelantan". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  4. "Taman Negara is nestled between 3 states in Malaysia, namely largest in Pahang which cover an area of 2,477km2, Kelantan (1,043km2) and Terengganu (853km2), with a total area of 4,343km2. It is the largest national park in Peninsular Malaysia and known to be the world's oldest tropical rainforest". pahang.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  5. "About Mutiara Taman Negara". Mutiara Taman Negara (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் தாமான் நெகாரா தேசியப் பூங்கா பற்றிய ஊடகங்கள்

மேலும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமான்_நெகாரா&oldid=3750526" இலிருந்து மீள்விக்கப்பட்டது