உள்ளடக்கத்துக்குச் செல்

தருகன் கதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருகன் கதுன்
மங்கோலியர்களிடம் கைதியாகத் தருகன் கதுன்
குவாரசமியப் பேரரசின் மகாராணி
ஆட்சிக்காலம்1200–1220
முடிசூட்டுதல்1200
குவாரசமியப் பேரரசின் உடனமைந்த ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1200–1220
முடிசூட்டுதல்1200
முன்னையவர்தெகிசு
பின்னையவர்மங்குபெருதி
உடனமைந்த ஆட்சிஇரண்டாம் முகம்மது
குவாரசமியப் பேரரசின் இராணி
ஆட்சிக்காலம்1172-1200
முடிசூட்டுதல்1172
குவாரசமியப் பேரரசின் பிரதிநிதி
ஆட்சிக்காலம்1195-1220
துணைவர்அலாவுதீன் தெகிசு
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் முகம்மது
மரபுகுவாரசமியர் (திருமணப்படி)
தந்தைகிப்சாக்கு கான்
மதம்இசுலாம்

தருகன் கதுன் என்பவர் குவாரசமியப் பேரரசின் மகாராணி ஆவார். இவர் அலாவுதீன் தெகீசின் மனைவியாவார். குவாரசமியப் பேரரசின் நடைமுறைப்படி உடனமைந்த ஆட்சியாளரான இரண்டாம் முகமதுவின் தாயாவார்.[1]

பின்புலம்[தொகு]

இவர் கிப்சாக்கு கானின் மகள் ஆவார். இவர் கிமேக்கு கூட்டமைப்பின் கங்கிலி அல்லது பயந்துர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். ஜலாலுதீன் மிங்குபுர்னுவின் சுயசரிதையை எழுதிய சிகாபலுதீன் முகம்மது அல் நாசாவின் கூற்றுப்படி, அலாவுதீன் முகம்மதுவின் முதன்மைத் தளபதிகளில் பெரும்பாலானவர்கள் தருகன் கதுனின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தன் பக்கம் வைத்திருக்க வேண்டிய தேவையே அவரது தாயின் அறிவுரைகளை முகம்மது மிகுந்த மரியாதையுடன் கேட்டதற்கு ஒரு காரணமாக இருந்தது.[2]

நடைமுறைப்படியான உடனமைந்த ஆட்சியாளர் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலுடைய ஆட்சியாளராக ஆட்சி[தொகு]

இவருடைய கணவர் அலாவுதீன் தெகீசின் இறப்பிற்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவின் அரசவையில் இவர் ஆதிக்கம் செலுத்தினார். அலாவுதீனின் மற்றொரு மனைவியின் வழிவந்த வாரிசான ஜலாலுதீனிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டார். மங்கோலியத் தாக்குதலின்போது குவாரசமியப் பேரரசின் ஆற்றலற்ற தன்மைக்கு இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவருக்கென்று தனித் திவான் மற்றும் தனி அரண்மனை இருந்தது. சுல்தானின் ஆணைகள் இவருடைய கையொப்பமின்றி அதிகாரப் பூர்வமற்றவையாகக் கருதப்பட்டன. ஷா பல்வேறு இன மக்களை இரக்கமின்றி ஆண்டு வந்தார். மங்கோலியத் தாக்குதலின்போது, குவாரசமியப் பேரரசின் ஒன்றுபடுத்தப்பட்ட 4,00,000 வீரர்களை உடைய இராணுவமானது எளிதாக வீழ்ந்தது. குவாரசமிய ஷா முகம்மது சமர்கந்திற்குப் பின் வாங்கினார். தனது நாட்டின் எல்லைப் பகுதியை நோக்கி சென்றார். தனது தலைநகரமான குர்கஞ்சை விட்டு விலக வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து அவர் தன் தாயின் இருப்பிடத்திற்குச் சென்றார்.[3]

மங்கோலியப் படையெடுப்பு[தொகு]

1219ஆம் ஆண்டு குவாரசமியா மீது சிங்கிசு கான் படையெடுத்தார். பல பெரிய மற்றும் செழிப்பான நகரங்கள்: ஒற்றார், குஜந்து, புகாரா, சமர்கந்து, மெர்வ், நிசாபூர் மற்றும் பல தரைமட்டமாக்கப்பட்டன. அவற்றின் குடிமக்கள் கொல்லப்பட்டனர். 1220ஆம் ஆண்டு தப்பி ஓடிய பிறகு முகம்மது இறந்தார் அல்லது அதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு காசுப்பியன் கடலில் இருந்த ஒரு ஆள் அரவமற்ற தீவில் இறந்தார். தருகன் கதுன் தன் மகனின் அந்தப்புரம், குவாரசமிய ஷாவின் குழந்தைகள் மற்றும் அரசுக் கருவூலத்துடன் தப்பித்து ஓடினார். பல்வேறு வெல்லப்பட்ட ஆட்சியாளர்களின் மகன்களான 26 கைதிகள் நீரில் மூழ்கினர். காராகும் பாலைவனம் வழியாகச் சென்றார். இலால் கோட்டையில் தஞ்சம் அடைந்தார். ஆனால் மங்கோலியர்கள் சீக்கிரமே அந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். அவரும் அவருடன் இருந்த அனைத்து மக்களும் கைது செய்யப்பட்டனர். ஷாவின் மகன்கள் கொல்லப்பட்டனர். அவரது மனைவிகள் மற்றும் மகள்கள் சிங்கிசு கானின் மகன்கள் மற்றும் உடனுழைப்பாளர்களிடம் பிரித்தளிக்கப்பட்டனர்.[4]

ஜலாலுதீனுடனான உறவுமுறை[தொகு]

தருகன் கதுன் மற்றும் அவரது பேரன் ஜலாலுதீனுக்கு இடையிலான உறவுமுறையானது நல்லவிதமாக இல்லை. படையெடுத்து வந்த மங்கோலியர்களிடம் இருந்து தப்பித்து ஓடுமாறு வரிடம் கூறப்பட்டபோது தருகன் கதுன் பின்வருமாறு கூறினார்:[5]

"இங்கிருந்து செல், ஜலாலுதீனிடம் தப்பித்து ஓடுமாறு கூறு! ஐசிசக்கின் மகனின் கருணையைச் சார்ந்தவளாக நான் எப்படி இருக்க முடியும். எனக்கென உசுலக்கு ஷா மற்றும் அகு ஷா இருக்கும் பொழுது, அவனது பாதுகாப்பின் கீழ் எவ்வாறு இருக்க முடியும்? சிங்கிசு கானின் கைகளில் நான் கைதியாக இருந்தால் கூட, நான் தற்போது இருக்கும் நிலையே ஜலாலுதீனின் தயவில் இருப்பதை விட மேலானது!"

இறப்பு[தொகு]

இவர் 1233ஆம் ஆண்டு தற்போதைய மங்கோலியாவின் பகுதியில் எங்கோ ஒரு இடத்தில் வறுமை காரணமாக இருந்தார்.[6]

உசாத்துணை[தொகு]

  1. Michal Biran (15 September 2005). The Empire of the Qara Khitai in Eurasian History: Between China and the Islamic World. Cambridge University Press. pp. 165–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-84226-6.
  2. J. A. Boyle, ed. (1968). The Cambridge History of Iran, Volume 5. Cambridge University Press. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-06936-6.
  3. "Iran Heads of State".
  4. An-Nasawi, "Description of life of Jalal ad-Din Mingburnu". Chapter 18. Eastern Literature. http://www.vostlit.info/Texts/rus8/Nasawi/frametext2.htm
  5. An-Nasawi. "Description of life of Jalal ad-Din Mingburnu. Chapter 18". Vostochnaya Literatura (Eastern Literature) (in Russian).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. ""Тарих" - История Казахстана - школьникам | Путешествие во времени | Теркен-хатун. Повелительница женщин мира".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருகன்_கதுன்&oldid=3461436" இலிருந்து மீள்விக்கப்பட்டது