தமிழ்நாடு தமிழருக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு தமிழருக்கே (Tamil Nadu Tamilarukkae) என்பது தமிழர்களுக்கு மொழிப்பற்றை ஊட்டவும், தமிழ்நாடு எவரின் மேலாதிக்கத்திலும் இல்லாமல் தன்னாட்சி பெற்று, தமிழரின் ஆளுகையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் தமிழறிஞர்களாலும், அரசியல் தலைவர்களாலும் எழுப்பபட்ட ஒரு முழக்கம் ஆகும். இதுவே தமிழ்த் தேசியத்துக்கு அடிப்படையாக ஆனது.

பின்னணி[தொகு]

பிரித்தானியாவின் இந்தியாவில் 1937இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சரான இராசகோபாலாச்சாரி, சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் ஆணையிட்டார்.

இந்த ஆணையை எதிர்த்து தமிழறிஞர்கள் நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத் தலைவர்கள் போன்றோர் கடுமையாக எதிர்த்ததுடன், இந்தி திணிப்புத் தொடர்பான அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் சென்னை மாகாணத்தில் தொடங்கியது. அதில் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டை தனியாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் உருவானது.

தமிழ்நாடு தமிழருக்கே[தொகு]

இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னை, திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சிராப்பள்ளியில் இருந்து தொண்டர் படை நடைபயணமாக புறப்பட்டது. தொண்டர் படை 11, செப்டம்பர், 1938 அன்று கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து சேர்ந்தது. மாலை நடந்த பொதுக்கூட்டத்திற்கு மறைமலை அடிகள் தலைமை வகித்தார். கூட்டத்தில் கே. வி. ரெட்டி நாயுடு, ஈ. வெ. இராமசாமி, சோமசுந்தர பாரதியார், பொ. தி. இராசன், மீனாம்பாள் சிவராஜ், மௌலானா மௌல்வி சர்புதீன், பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார், ரெவரண்ட் அருள் தங்கையா, திருப்பூர் முகைதீன், கே. வி. அழகர்சாமி, அ. பொன்னம்பலனார், டாக்டர் தர்மாம்பாள், பண்டிதை நாராயணி அம்மாள் உள்ளிட்ட ஆளுமைகளுடன் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். [1] அக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மறைமலை அடிகள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை ஈ. வெ. இராமசாமி, சோமசுந்தர பாரதியார் ஆகியோர் வழிமொழிந்தனர்.[2] இந்த போராட்டமே தமிழர்களை ஒரு தேசிய இனமாக திரளவைத்தது.

காங்கிரஸ் லட்சியம் 'சுயராஜ்யம்' என முதன் முதலில் கூறியது காலஞ்சென்ற தாதாபாய் நௌரோஜி. அதுபோலவே 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியவர்கள் சென்ற 11-ந் தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில் பேசிய பாரதியார் காங்கிரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ. வெ. இராமசாமி பெரியார் பகுத்தறிவாதிகளின் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாக பிரதிபலித்தது என்று தைரியமாகக் கூறலாம். -விடுதலை, தலையங்கம், 19.9.1938

மாற்றுருவம்[தொகு]

நீதிக்கட்சியில் இருந்த பிற தென்னிந்திய மொழி பேசும் தலைவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எங்கே போவது என்று கேட்டதால் இந்த முழக்கம் ஈ. வெ. இராமசாமியால் திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 1965 இக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் ஈ. வெ. இராமசாமியால் முன்னெடுக்கபட்டது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ். வி. ராஜதுரை- வ. கீதா, பெரியார் சுயமரியாதை சமதர்மம் (நூல்) விடியல் பதிப்பகம் கோயம்புத்தூர், விரிவாக்கபட்ட பதிப்பு ஆகத்து, 2009, பக்கம்: 709
  2. ""தமிழ்நாடு தமிழருக்கே" முழக்கம் பிறந்தது எப்போது? எதற்கு?". தமிழ் வலை (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_தமிழருக்கே&oldid=3806052" இலிருந்து மீள்விக்கப்பட்டது