உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். வி. ராஜதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். வி. இராஜதுரை (S. V. Rajadurai) (பிறப்பு: மனோகரன்[1]) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவர் சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார்.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மனித உரிமை இயக்கத்தில் களப்பணி பணியாளராகச் செயலாற்றிய இராஜதுரைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக 2008 இல் நியமிக்கப்பட்டுக் குறிப்பிடத்தக்க பணியைச் செய்தவர்.

இவர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை சொல்லுக்குச் சொல் விரிவான பொருள் விளக்கத்தோடும் அதன் வரலாற்றுப் பின்னணியோடும் சமகால முக்கியத்துவத்தோடும் தமிழுக்கு வழங்கியவர். இது ஓர் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் வ. கீதா உடன் இணைந்து மார்கிசிய, பெரியாரியத்துக்கான முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் இனி என்ற கலை இலக்கிய ஏட்டினை நடத்திவந்தார். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சுமார் 80 நூல்களை எழுதியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

எஸ். வி. இராஜதுரை 16 வயதிலே இலக்கியத்திலும், அரசியலிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். காரணம் இவரது தந்தை ஒரு காந்தியவாதி என்பதால் வீட்டில் அன்றாடம் அரசியல் உரையாடல் நடைபெறுவதால் அரசியலில் ஆர்வம் உருவானது. இவரது தந்தை இவரின் 16 வயதில் இறந்தார். இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாத நிலைக்கு ஆளாயினார். என்றாலும் பள்ளிப் படிப்பின் அடிப்படையில் எஸ். வி. இராஜதுரைக்கு 19 வயதில் ஊட்டியில் அரசுப் பணி கிடைத்தது.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

எஸ். வி. இராஜதுரை இளம் வயதில் திமுக மீது குறிப்பாக ஈ. வெ. கி. சம்பத் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.[1] நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கின் வீரம் விளைந்தது நூல் இவரை பொதுவுடமை நோக்கி ஈர்த்தது.[1] தொடர் வாசிப்பு இவரை ஒரு இடதுசாரியாக ஆக்கியது. 1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததால், அலுவலகத்தில் பதவி இறக்கம் செயப்பட்டார். இதனால் ஏற்பட்ட சினத்தில் அரசுப் பணியிலிருந்து விலகினார்.[2] பின்னர் பொள்ளாச்சியில் உர நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியில் உறுப்பினராக இணைந்தார். பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து 1967இல் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் மார்க்சிய லெனினிய கட்சியிக்கு முன்னோடியாக இருந்த அமைப்பின் செயல்பாடுகளில் (1967-1970 ) ஈடுபட்டார். சாரு மசூம்தாரின் அழித்தொழிப்பு கொள்கையில் உடன்பாடில்லாதது குறித்து அவரிடமே உரையாடினார்.[2] பரிமாணம் இதழில் தொடர்ச்சியாக எழுதினார். மேலும் இனி என்னும் சிற்றிதழை நடத்தினார். 1971 இல் கசடதபற சிற்றிதழ் வழியாக க்ரியா இராமகிருஷ்ணன் இவருக்கு அறிமுகமானார். மனோ என்ற பெயரில் எழுதிவந்த மனோகரனை எஸ். வி. ஆர் என்னும் புனைபெயரில் க்ரியா இராமகிருஷ்ணன் எழுதவைத்தார்.[1]

சென்னை வாழ்க்கை[தொகு]

க்ரியா இராமகிருஷ்ணனின் முயற்சியினால் ஐராவதம் மகாதேவன் இவரை சென்னையில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் 1980 இல் பணிக்கு அமர்த்தினார். இதனால் இராசதுரை சென்னைக்குக் குடியேறினார். இதன் பிறகு மீண்டும் மார்க்சிய லெனினிய இயக்கத்துடன் தொடர்பு இராசதுரைக்கு ஏற்பட்டது. அதில் மனித உரிமைகள், பண்பாட்டுப் பிரிவில் செயல்படத் துவங்கினார். இதனால் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மார்க்சிய லெனினிய இயக்கத்துடன் தமிழ்நாட்டில் தொடர்பில் இருப்பவர்கள் மீது தமிழகக் காவல்துறை ஒடுக்குமுறையில் ஈடுபடத் தொடங்கியது.[2]

தில்லி வாழ்க்கை[தொகு]

அரசின் ஒடுக்குமுறையால் தமிழ்நாடில் பாதுகாப்பான சூழல் இல்லாத சூழல் உண்டானது. இதனால் தில்லியில் உள்ள சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தில் 'லோகாயன்' என்ற திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்படும் வாய்ப்பை இவரது சக மனித உரிமைப் போராளியான காளாட் ஆல்வாரேஸ் ஏற்படுத்தித் தந்தார். அதில் ஆஷிஸ் நந்தி, திருபாய் சேத் உள்ளிட்ட இந்திய அறிவுஜீவிகள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களுடன் விவாதிக்கும் வாய்ப்புகள் அங்கு உண்டானது. ஒன்றரை ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பி.யு.சிஎல். அமைப்பின் மனித உரிமை சார்ந்து களச் செயல்பாடுகளில் கலந்துகொண்டார். 1984 இல் இவருக்கும் மார்க்சிய லெனினிய இயக்கத்துடனான தொடர்பு முறிந்தது.[2]

மண்டல் ஆணைக்குழு காலத்திற்குப் பிந்தைய சூழலில் மெல்லமெல்ல பெரியாரியம் நோக்கி நகர்ந்தார்.[1] தமிழ்ச் சூழலில் மார்க்சிய மரபை பெரியாரியத்தோடும், தமிழ் அடையாள அரசியலோடும் இணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மனித உரிமை செயல்பாடுகள்[தொகு]

மார்க்சிய இயக்கங்களுடன் ஈடுபாடு கொண்டிருந்த காலகட்டத்தில், மனித உரிமை செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். மரண தண்டணையில் இருந்து காக்கும் விதத்தில் பலருக்கு உதவினார். மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று செயல்படும் இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். பல ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த புலவர் கலியபெருமாளை விடுதலை செய்வித்ததில் இவர் பெரும் பங்கு வகித்தார்.[1] பெருஞ்சித்திரனார் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகப் பிணை மறுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக நாடெங்கும் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். அடுத்த ஓரிரு மாதங்களில் பெருஞ்சித்திரனாருக்கு பிணை கிடைத்தது.[1]

கோத்தகிரிக்கு இடம்பெயர்தல்[தொகு]

2002 இல் இவருக்கும் இவரது மனைவிக்கும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு இடம்பெயர்ந்தார். 2007, 2008இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராக இருந்தார்.[2] அப்போது இவர், ரோஜா முத்தையா நூலகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு குடி அரசு நூல்களைப் பதிவேற்றும் முயற்சியில் இறங்கினார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

வ. கீதாவுடன் இணைந்து இவர் எழுதி ஆங்கிலத்திலும் வெளியான பெரியார்: சுயமரியாதை சமதர்மம் நூல் தமிழ் அறிவுச் சூழலிலும், இந்தியா முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. 2024 ஏப்ரல் 10 அன்று தன் 85வது பிறந்த நாளில் அடியெடுத்த வைத்த எஸ். வி. ராஜதுரை எழுத்துப் பணியிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.[3]

எழுதிய மொழிபெயர்த்த நூல்களில் சில[தொகு]

 • கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (மொழிபெயர்ப்பு) (2014)
 • இருத்தலியம்
 • இரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்
 • அந்நியமாதல் (1979)[4]
 • பதி, பசு, பாகிஸ்தான் (2003)[5]
 • இந்து இந்தி இந்தியா (1993)[6]
 • உச்சங்களின் யுகம் (2004)[7]
 • மார்செல்லோ முஸ்டோ (மூலம் யானிஸ் வருஃபாகிஸ்)
 • பெரியார்: சுயமரியாதை சமதர்மம் (வ. கீதாவிடன் இணைந்து எழுதியது.
 • பெரியார் மரபும் திரிபும்
 • பார்வையிழத்தலும் பார்த்தலும் (2007)[8]
 • பெரியார்: ஆகஸ்ட்-15 (1998)[9]
 • ஆகஸ்ட் 15 துக்கநாள் - இன்பநாள்
 • தலித்தியமும் உலக முதலாளியமும் (2001)[10]
 • போரும் இடதுசாரிகளும் (மூலம் மார்செல்லோ மூஸ்டோ)
 • கம்பூனிஸ்ட் கட்சி அறிக்கை: இன்றைய முதலாளியம் (2023)
 • ஸரமாகோ நாவல்களின் பயணம்
 • இரத்தம் கொதிக்கும்போது (மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
 • பொருளாதாரம் பற்றி என் மக்களுக்கு அளித்த விளக்கம் (யானிஸ் வருஃபாகிஸ் எழுதிய நூலின் தமிழாக்கம்)

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "வானவில் அரங்கம்-எஸ்.வி.இராஜதுரை பல்பரிமாண சமூகப் போராளி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "வானவில் அரங்கம் - என் வாழ்க்கை ஒரு நெடும் பயணம்: எஸ்.வி.ராஜதுரை பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
 3. (in ta) எஸ்.வி.ராஜதுரை: 85 - தமிழ் அறிவுலகின் பேராளுமை. 2024-04-13. https://www.hindutamil.in/news/literature/1230087-sv-rajadurai-85.html. 
 4. ராஜதுரை, எஸ் வி (1979). "அந்நியமாதல்". க்ரியா. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 5. ராஜதுரை, எஸ் வி (2003). "பதி, பசு, பாகிஸ்தான்". அடையாளம். பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 6. Rājaturai, Es Vi (1993). "Hindu, Hindi, India". Ar̲ivakam. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 7. Rājaturai, Es Vi (2004). "உச்சங்களின் யுகம்: வரலாற்றுப் பதிவுகள்". பொன்னி. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 8. இராஜதுரை, எஸ் வி (2007). "பார்வையிழத்தலும் பார்த்தலும்: கலை, இலக்கியம், தத்துவம், அரசியல்". சந்தியா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 9. Rājaturai, Es Vi (1998). "Periyār, Ākasṭ 15". Viṭiyal Patippakam. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
 10. ராஜதுரை, எஸ் வி (2001). "தலித்தியமும் உலக முதலாளியமும்". விடியல் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._ராஜதுரை&oldid=3942078" இலிருந்து மீள்விக்கப்பட்டது