தமிழ் நாட்டுக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டுக் கொடி (Flag of Tamil Nadu) என்பது தமிழ்நாட்டை பொதுவாக அடையாளப்படுத்தும் ஒரு கொடியாகும். இது சிலசமயம் தமிழ்க் கொடி என்றும் அழைக்கபடுகிறது. இக்கொடியானது காலந்தோறும் தமிழ் அமைப்புகளால் வெ்வேறு வடிவங்களில் பயன்படுத்தபட்டுவந்துள்ளது. ஆயினும், தமிழ்நாடு அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டுக் கொடி அறிவிக்கப்படவில்லை. அவற்றில் மூவேந்தர்களின் கொடியில் உள்ள சின்னங்களான வில், கயல், வேங்கை ஆகியவை ஒன்று சேர்ந்த கொடி[1] பரவலாக பல்வேறு காலங்களில், தமிழ் அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சென்னை மாநகராட்சியின் இலச்சினையில் தமிழ்க் கொடியின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் நாட்டுக்கொடி வரலாறு[தொகு]

தமிழ்க் கொடி பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு பரிமாணித்து வந்துள்ளது. அந்த வரலாற்றைத் தெரிந்துக் கொள்வோம்...

ஆங்கில ஏகாதியத்துக்கு முன்[தொகு]

அகன்ற தமிழ்நாடானது பண்டைய ஆட்சிக் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர், வேளிர் மற்றும் ஆய் என்பனவும் பல சிற்றரசுகளும் விளங்கி வந்தனர். அவற்றுள் சேர நாடு வில்லும், சோழ நாடு வேங்கையும், பாண்டிய நாடு இரு கயலும் ஆய் நாடு யானையையும் தம் கொடிகளில் பறக்கவிட்டனர் என்று சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. வேளிர் பலர் தன்னாட்சிப் பெற்ற சிற்றரசுகளாக விளங்கினர். பின்னர் பல்லவ ஆட்சியும் அதன் பின்னெழுத்த மூவேந்தர்களும் தங்களது முன்னோரின் சின்னங்களை கொடிகளில் தாங்கினர்.

பின்னர் விசய பேரரசும், நாயக்கர் ஆட்சியின் எழுச்சிக்குப் பின் தமிழ் மன்னர்கள் தங்கள் உரிமைகளையும் நாட்டையும் இழந்ததன் விளைவாக கொடிக்கட்டும் உரிமையை இழக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கில ஏகாதிபத்தியம் தொடர்ந்ததால் பின் தமிழருக்கென்று ஓர் கொடியில்லாமல் போயிற்று.

ஆங்கில ஏகாதியத்துக்கு பின்[தொகு]

ஆங்கில ஏகாதியத்தின் பிற்பகுதியில் மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் தமிழர் தனது வரலாற்றை எழுதத் தொடங்கினான்.

இருபதாம் நூற்றாண்டு[தொகு]

1938ம் ஆண்டு[தொகு]

மதராசு மாகாண முதல்வராக இருந்த இராசாசி, பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் தீவிரமான இந்தியெதிர்ப்பு போரட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் சேர, சோழ, பாண்டிய ஆய மூவேந்தர்களின் கொடிச் சின்னங்களான முறையே வில், வேங்கை, கயலென ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒற்றைக்கொடியே தமிழ்க்கொடியாகப் பயன்படுத்தப்பட்டது.

1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க் கொடியின் சின்னம் (மாதிரி)
1946ம் ஆண்டு[தொகு]

1946-ம் ஆண்டில் `தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி. தொடங்கினார். தனது இயக்கத்தின் கொடியாக ஒன்றிணைந்த மூவேந்தர்களின் கொடியையே பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள் என்றிருந்த சென்னை மாநகராட்சிக் கொடியை மாற்றியமைத்து, மூவேந்தர்களின் 'வில், புலி, மீன்' சின்னங்கள் அடங்கிய கொடியை, சென்னை மாநகராட்சியின் புதிய கொடியாக ம.பொ.சி பறக்கவிட்டார்.

சென்னை மாநகராட்சி சின்னத்தில் உள்ள மூவேந்தர் சின்னங்கள்
1958ம் ஆண்டு[தொகு]

`1942-ம் ஆண்டில் தமிழ் ராச்சியக் கட்சியைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் 'தமிழப்பேரரசு' என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் 1957-ம் ஆண்டு தனது கட்சியை `நாம் தமிழர்' இயக்கமாகப் பெயர் மாற்றி, 1958-ல் `சுதந்தரத் தமிழ்நாடு' மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிலும் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

1965ம் ஆண்டு[தொகு]

இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், கோவை விவசாயக் கல்லூரி மாணவர் ராமசாமி தலைமையில் அதிக அளவில் மாணவர்கள் அணிதிரண்டனர். பேரணியாகக் கோவை வ.உ.சி மைதானத்துக்குச் சென்ற அவர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த, தமிழ்நாடு வரைபடம் அடங்கிய ஒரு கொடியை, `தமிழ்நாட்டுக்ஙகொடியாக' மைதானத்தில் ஏற்றினார்கள். பின்னர், `தமிழ்நாடு வாழ்க' என கோஷமிட்டு தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

1970ம் ஆண்டு[தொகு]

அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, `மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி வேண்டும் எனத் அன்றைய தலைமை முதலவரான இந்திரா காந்தியைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தார்.

1970 இல் முன்மொழியப்பட்ட தமிழ்நாட்டுக் கொடி

அப்போது, தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.அதில் வலது மேற்புறத்தில் இந்திய தேசியக்கொடியும், இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் இந்தக் கோரிக்கை ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது.[2][3]

1980ம் ஆண்டு[தொகு]

`சாதி ஒழிப்பே... தமிழ்நாடு விடுதலை' எனக் கூறி ஆயுத வழியில் போராடிய தமிழரசனின் `தமிழ்நாடு விடுதலைப் படை' அமைப்பு சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் ஐந்து நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக்கொடியாகப் பறக்கவிட்டது. 1990-களின் பிற்பகுதியில், தமிழ்நாடு விடுதலைப் படை பயன்படுத்திவந்த தமிழ்நாட்டுக் கொடியில், ஏறுதழுவுதல் இலச்சினையையும் சேர்த்து, தமிழ்நாட்டுக்கொடியாக வீரப்பனால் காட்டுக்குள் பறக்கவிடப்பட்டது.

1980ல் தமிழரசனால் வெளியிடப்பட்ட தமிழ்க் கொடி
1990ல் வீரப்பன் காட்டில் ஏற்றிய தமிழ்க் கொடி
1990ல் வீரப்பனார் ஏற்றிய கொடி (மாதிரி)

இருபத்தொன்றாம் நூற்றாண்டு[தொகு]

2010-ம் ஆண்டு[தொகு]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் `தமிழர் இறையாண்மை மாநாட்டை' 2010'ல் நடத்தினார். அந்த மாநாட்டில் சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' அறிவித்து, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் கைகளால் வெளியிட்டார். ஆனால், அதில் அவரது கட்சியின் தனிப்பட்ட அடையாளங்களால் அமைக்கப்பட்டதால் அது தமிழர்களால் ஏற்கப்படவில்லை.

2010ல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்ட தமிழ்க் கொடி
2016ம் ஆண்டு[தொகு]

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாக்கிய `நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு' ஏட்டில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கிய கொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீலநிறம்கொண்ட அந்தக் கொடியில் `வெல்க தமிழ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர், சல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டம் உள்ளிட்டவைகளில் இந்தக் கொடி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், முந்தைய நூற்றாண்டின் தமிழ்ப் பற்றாளர்கள் பயன்படுத்திய மூவேந்தர் சின்னங்கள் இதிலும் இருந்தமையால் இக்கொடியை பெரும்பாலான தமிழர் தங்கள் கொடியாக உணர்ச்சிப் பூர்வமாகவே கொண்டிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் மூவேந்தர் கொடியைத் தமிழ்நாட்டுக்கொடியாக 2020ம் ஆண்டு நவம்பர் 1ல் ஏற்றிக் தமிழர் நாளில் கொண்டாடினர்.

நாம் தமிழர் சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு கொடி
2018ம் ஆண்டு[தொகு]

`தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் சார்பில், முந்தைய கொடியில் சிவப்புநிறக் கொடியின் நடுவே மஞ்சள் நிறப் பின்புலத்தில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்து சிறுமாற்றங்களுடன் `தமிழ்நாட்டுக்கொடியாக' வெளியிடப்பட்டது.

2020ம் ஆண்டு[தொகு]
2020ல் பெரியாரிய இயக்கத்தால் வெளியிடப்பட்ட கொடி (மாதிரி)

அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் `வெள்ளைக்கொடியில் சிவப்பு தமிழ்நாடு வரைபடம்' அடங்கிய கொடி ஒன்று தமிழ்நாட்டுக்கொடியாக வடிவமைக்கப்பட்டது. அதை, பொழிலன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர், நவம்பர் 1-ம் நாள் அந்தக் கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாளும் கொண்டாடப்பட்டது. ஆனால், இவற்றில் தமிழர் உணர்வுகள் வெளிப்பட வில்லை என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. வெள்ளி நிறம் சமாதனம் மற்றும் தோல்வியின் அடையாளம் என்றும், நடுவில் உள்ள தமிழ்நாடு வரைபடம் சிவப்பு நிறம் இரத்தத்தின் வெளிப்பாடு என்றும் குற்றச்சாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர் ஒரு சாரர்.

குறிப்புகள்[தொகு]

  1. கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு கொடியை அறிதுகப்படுத்திய பெரியார் ஆதரவாளர்கள், ஒன் இந்தியா, 2020 அக்டோபர் 21
  2. "Archived copy". 23 மே 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 22 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (7 ஆகத்து 2017). "மாநிலத்திற்கென தனிக் கொடி : இதிலும் தமிழகம் முன்னோடி". கட்டுரை. தி இந்து. 7 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நாட்டுக்_கொடி&oldid=3577418" இருந்து மீள்விக்கப்பட்டது