சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் (Swadeshi Steam Navigation Company (SSNC) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது, பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும்.[1] கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து, இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. உ. சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] முதன்முதலில் சுதேசி கப்பல் நிறுவனத்தின் நீராவிக் கப்பல் தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையே 1991 முடிய இயக்கப்பட்டது.
பின்னணி
[தொகு]பிரித்தானியர்களின் கப்பல் நிறுவனங்கள், இந்தியப் பெருங்கடலில் போட்டியின்றி ஏகபோக உரிமையுடன் பயணியர் & சரக்குக் கப்பல்கள் இயக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை உடைக்க, தூத்துக்குடி வணிகர்கள் ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடி-கொழும்பு இடையே குறைந்த கட்டணத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை அனுப்பினர். இதனால் பிரித்தானியர்கள் இயக்கிய கப்பலின் வருவாய் குறைந்ததால், பிரித்தானியர்களின் தலையீட்டின் பேரில், முதல்கட்டமாக தூத்துக்குடி வணிகர்களுக்கு கப்பலை வாடகைக்கு விட்ட நிறுவனம் தனது கப்பலை திரும்பப்பெற்றது.[3]
அந்நேரத்தில் தூத்துக்குடியில் சிறப்பு அரசு வழக்குரைஞராக இருந்த சுதேசி இயக்க ஆதரவாளரான வ. உ. சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் துவக்கப்பட்டது.[3]
சுதேசி கப்பல் நிறுவனம்
[தொகு]சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கு முலதனமாக ரூபாய் 10 லட்சம் பெற பொதுமக்களுக்கு 40,000 பங்குகள் விற்றனர். 16 அக்டோபர் 1906 அன்று சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை சிதம்பரம் பிள்ளை பதிவு செய்தார்.[3] பிள்ளை நிறுவனத்தை உருவாக்கியது லாபத்திற்காக அல்ல, மாறாக தேசியத்தின் இலட்சியத்திற்காக. பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத் தேவர், தனது பாம்பூர் கிராமத்தில் இருந்த நிலங்களை விற்று ரூபாய் 2 லட்சம் (2020ல் மதிப்பு ₹5.6 கோடி) பங்குகளை வாங்கினார்.[4][4] சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு பாண்டித்துரைத் தேவர் தலைவராகவும், சிதம்பரம் பிள்ளை உதவிச் செயலாளராகவும் ஆனார். [3] இந்நிறுவனத்தின் நோக்கம் தூத்துக்குடி-கொழும்புக்கும் இடையே ஒரு கப்பலை இயக்குவது மற்றும் ஆசியர்களுக்கு வழிசெலுத்தல் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதாகும்.[3] நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக சிதம்பரம் பிள்ளை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்,[5] மகாகவி சுப்பிரமணிய பாரதி சுதேசி கப்பலின் முக்கியத்துவம் குறித்துக் கட்டுரைகள் மற்றும் பாட்டுகள் எழுதினார்.[6] பாலகங்காதர திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் உதவியுடன் பிரான்சு நாட்டிலிருந்து முதல் கப்பல் எஸ். எஸ் கேலியா வாங்கப்பட்டது[5] மற்றும் 1907ல் தூத்துக்குடி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணித்து 1300 பயணிகளையும், 40,000 சரக்குப் பொதிகளையும் ஏற்றிச் செல்லக்கூடியது.[8] அந்தக் கப்பலில் "வந்தே மாதரம்" என்ற முழக்கம் அடங்கிய கொடி பறந்தது.[8] இது பின்னர் மற்றொரு பிரெஞ்சு கப்பலான S S லாவோவும் வந்தது.[5]
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்திற்கும், பிரித்தானியக் கப்பல் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தகப் போர் வெடித்தது. பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தபோது, சிதம்பரம் பிள்ளை கட்டணத்தை 50 பைசாவாகக் குறைத்தார். பின்னர் பிரித்தானிய கப்பல் நிறுவனத்தினர் பயணிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கியது.[9] தேசியவாத உணர்வின் காரணமாக சுதேசி நீராவிக் கப்பலுக்கு வணிகர்கள் மற்றும் பயணிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது.[5] பிரித்தானியக் கப்பல் நிறுவனத்தினர் பிரித்தானிய ராஜ் உதவியுடன், சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் கப்பல்களுக்கு துறைமுகத்தில் இடம் மற்றும் நேர அட்டவணையை காலம் தாழ்த்தியதுடன் மற்றுமின்றி பயணிகளின் மருத்துவ மற்றும் சுங்க அனுமதியை தாமதப்படுத்துவதன் மூலம் சுதேசி நீராவிக் கப்பல்களின் செயல்பாடுகளை அடக்கியது.[8] 1908ம் ஆண்டில், சுதந்திர வழக்கறிஞரான பிபின் சந்திர பால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை சுயராஜ்ய (சுய-ஆட்சி) நாளாகக் கொண்டாட திட்டமிட்ட குழுவில் சிதம்பரம் பிள்ளையும் இருந்தார்.[11] இதனால் கோபமுற்ற ஆங்கிலேய ஆட்சியினர் 12 மார்ச் 1908 அன்று சுப்பிரமணிய சிவா மற்றும் சிதம்பரம் பிள்ளையை அரசாங்கத்திற்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.[12] சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) விதிக்கப்பட்டது.[13] சிறையில் சிதம்பரம் பிள்ளைக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டது. இதனால் பயந்த சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனத்திலிருந்து விலகினர்.[3] சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் 1911ல் கலைக்கப்பட்டது. மேலும் கப்பல்களில் ஒன்று அதன் போட்டியாளரான பிரித்தானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.[13]
தாக்கம்
[தொகு]17 சூன் 1911 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியர் இராபர்ட் ஆஷ் துரையை, மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் நிலையத்தில் வைத்து ஒரு இரகசிய சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[11] விசாரணையின் போது, சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை முடக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையே பொறுப்பாளி என வாஞ்சிநாதன் கருதியது தெரியவந்தது.[11]
மரபுரிமை பேறுகள்
[தொகு]தமிழ்நாட்டில் சிதம்பரம் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன் என்று நினைவுகூரப்படுகிறார்.[14] இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ. உ. சிதம்பரனார் துறைமுகம் எனப்பெயரிட்டதன் மூலம், இந்திய விடுதலை இயக்கத்தில் சிதம்பரம் பிள்ளையின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உள்ளது.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manian, Ilasai (20 October 2012). "Swadeshi ship on the blue waters of Tuticorin". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/swadeshi-ship-on-the-blue-waters-of-tuticorin/article4015532.ece.
- ↑ J, Arockiaraj (25 December 2011). "VOC's descendants found in dire straits". TNN. Madurai. http://timesofindia.indiatimes.com/city/madurai/VOCs-descendants-found-in-dire-straits/articleshow/11236236.cms.
- ↑ 3.0 3.1 R.N.Sampath; Pe. Su. Mani (30 August 2017). V.O.Chidambaram Pillai. Publications Division Ministry of Information & Broadcasting. pp. 50–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2557-5.
- ↑ R.N.Sampath; Pe. Su. Mani (30 August 2017). V.O.Chidambaram Pillai. Publications Division Ministry of Information & Broadcasting. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2557-5.