கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அது பாதுகாப்பனதல்ல என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு எதிராக போராட்டமும் நடை பெறுகிறது. இக்கூற்றுக்கு மறுப்பாக இந்திய அரசு தரப்பிலும் கூடங்குளம் அணுமின்நிலைய ஆதரவாளர்கள் தரப்பிலும் சுட்டிக்காட்டப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
கூடங்குளம் உலைகள் WWER (water water energy reactor ) எனப்படும் உருசியத் தொழில்நுட்பத்தால் ஆனவை. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் "விவிஇஆர்" உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில்நுட்பத்தில் இது மிக உயர்ந்ததாகும். இது மிக உச்சக்கட்ட பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் 'காண்டு உலைகள்', ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷியாவின் 'விவிஇஆர்' உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை.
கூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் அழுத்த நீர் அணுஉலைகள் வகையைச் சேர்ந்தவை. இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். 'மட்டுப்படுத்தி' (Moderator) ஆகவும் 'குளிர்விப்பி' (Coolant) ஆகவும் சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் பயன்படுத்தப்படவில்லை. ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில் அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும். இதற்காக
- எதிர்மறைப் புரைக் கெழு (Negative void coefficient)
- எதிர்மறைத் திறன் கெழு (Negative power coefficient)
ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு, காற்று மண்டலத்தில் கலப்பது என்பது நடைபெறாது. எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல யுரேனியம் எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும். மேலும் பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டுமொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுள்ள ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாது.
ஒருவேளை ஹைட்ரஜன் தீப்பற்றி எரிந்து விடலாம் என்பதற்காக அவ்வாறு நேரும்போது அது தண்ணீராக மாற்றப்பட்டு விடும் வகையில் ஹைட்ரஜன் சேர்ப்பான்கள் (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது உயிர்ச்சேதம் நேராவண்ணம் தானாகவே இயங்கும் "மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு" (Passive Heat Removal System) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத்தைத் தணித்து விடும்.
அணு உலையும், அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால், அலைகள் கூட தொட முடியாத உயரத்தில் தான் உலை அமைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே ஆகும். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கூடங்குளம் உலையில் கதிர்வீச்சு வெளியேறாது என்பது கூடங்குளத்தை ஆதரிக்கும் அறிவியலாளர் கருத்தாகும்.
மேற்கோள்கள்
[தொகு]பி.இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம் , சென்னை 94. அவர்கள் எழுதிய கட்டுரை.'அறிவியல் ஒளி' , டிசம்பர் 2011 இதழ்.