குழந்தை இறப்பு
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை குழந்தை இறப்பு (Infant mortality) என்றும், ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு (Under-five mortality) என்றும், உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது(WHO). குழந்தைகளின் உடல்நலம், மற்றும் ஒரு நாட்டின் மொத்த அபிவிருத்தியை சுட்டும் ஒரு அளவீடாக குழந்தை இறப்பு வீதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் ஆகியன அமைகின்றன. 2008ஆம் ஆண்டில், உலகளவில் பிறக்கும் குழந்தைகளில் 8.8 மில்லியன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய நோய்களால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இறந்து போனதாகவும், அதற்கு முக்கிய காரணம் ஊட்டக்குறையே எனவும் அறியப்படுகிறது (UNICEF).
உலகளவில் 5 வயதுக்குள் மரணத்தை தழுவும் குழந்தைகளில் 32 சதவீதம் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என இன்டர் ஏஜென்சி குரூப் ஆப் சைல்டு மார்டலிட்டி எஸ்டிமேசன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இறக்கும் குழந்தைகளில் 75 சதவீதம் பேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் உள்ளனர். இதில் இந்தியக் குழந்தைகள் மட்டும் 21 சதவீதம் பேர். இது ஆப்பிரிக்காவில் 51 சதவீதமாகவும், ஆசியாவில் 42 சதவீதமாகவும் உள்ளது. 1990ல் உலக முழுவதும் 90 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது 65 ஆக குறைந்துள்ளது. ஆனால், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய நாடுகளில் இது இன்னும் குறைந்தபாடில்லை. அங்கு பிறக்கும் 7 குழந்தைகளில் ஒன்று 5 வயதுக்கு முன்னதாகவே இறந்துவிடுகிறது. அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் 144ன் உயிர் காக்கப்படுவதில்லை.மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளின் நிலைமை இதைவிட மோசம். அங்கு ஆறில் 1 குழந்தை இறந்து விடுகிறது. அங்கு குழந்தை இறப்பு விகிதம் 169 ஆக உள்ளது என்கிறது." [1]
இந்திய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு
[தொகு]இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. இது குறித்து மத்திய அரசின் சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் என்ற புள்ளியியல் அமைப்பு வெளியி்ட்டுள்ள 2007ம் ஆண்டுக்கான அறிக்கை:
இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 55. அதாவது இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 55 குழந்தைகள் தங்களது 5வது பிறந்தநாளுக்கு முன்னதாக இறந்துவிடுகின்றன. இந்த விகிதம் மத்திய பிரதேசத்தில் 72, ஒரிஸ்ஸாவில் 71, உத்தரப்பிரதேசத்தில் 69 ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இது 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவைத் தவிர்த்து நாட்டின் மற்ற பகுதிகளை விட தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இது மகாராஷ்டிராவில் 34, கேரளாவில் 13 ஆக உள்ளது.[1]
தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு
[தொகு]சமீபத்தில் தமிழக திட்டக்குழு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் திருவண்ணாமலை, சிவகங்கை, கடலூர், நாகப்பட்டிணம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை வளர்ச்சி அறிக்கை சேர்த்து கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், கடந்த 2000ல் தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 60 ஆக இருந்தது. தற்போது அது திண்டுக்கல் மாவட்டத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. குழந்தை இறப்பு கொடைக்கானலில் பூஜ்யம்... திண்டுக்கல், நத்தம் பகுதியில் இது கடந்த 2002-04ல் 24.9 ஆக இருந்தது. கடந்த 2006ல் அது 3.4 ஆக குறைந்துவிட்டது. கொடைக்கானல் பகுதியில் 2006-07 அது பூஜ்யமாகிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 2002-03ல் 66ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 2007ல் 58ஆகக் குறைந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் இது 19.63 ஆகவும், அம்மாவட்டத்தின் தேவகோட்டையில் 13.08, சாக்கோட்டையில் 13.25 ஆகவும் இருக்கிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் போன்ற அதிக நகர்ப்புறமான பகுதிகளில் மட்டும் இது அதிகம் காணப்படுகிறது.
குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருவது தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயருவதையே காட்டுகிறது. தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1970ல் 125, 2000ல் 51 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கையில் பிரசவ மரணம் குறைவு.அதேபோல் பிரசவத்தின் போது இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2001ல் 32.49 இருந்த இது 2006ல் 19.27 ஆக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இது 6.33 என்ற அளவுக்கு வெகுவாக குறைந்துள்ளது. திருவண்ணாமலைமாவட்டத்தில் இது 25.68 லிருந்து 11.3 ஆகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 21.1, புதுக்கோட்டை மாவட்டத்தில் 20.8, தேனிமாவட்டத்தில் 19.9 மற்றும் மதுரை மாவட்டத்தில் 18.8 ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் தற்போது இந்த பிரச்சனை அதிகமுள்ளது.
1971ல் தமிழகத்தில் 31.4 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் தற்போது 19.3 ஆகவுள்ளது. அதேபோல் இறப்பு விகதமும் நன்றாக குறைந்துள்ளது. 14.4லிருந்து 7.9 ஆக குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இது 4.09 சதவீதமாக இருக்கிறது.[1]