குதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்பிரிக்க மண் குதிர்(1906-1918)

குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும் முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.

சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.

அமைப்பு[தொகு]

இக்குதிர்களின் விட்டம் இரண்டு மீட்டர் முதல் ஆறு மீட்டர் வரையும், உயரம் மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும். அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்து வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறு உதவுகிறது.

இயந்திரங்களைப் பயன்படுத்தியும் உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும் முறைகளும் சில நேரத்தில் அமைக்கப்படுவதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே வண்டிகளுக்கு மாற்றப்படும் வசதியையும் ஏற்படுத்துவர்.

குதிர்கள் பண்ணைகளில் உள்ளது போல தனியாகவோ, அல்லது துறைமுகங்களிலும், ஆலைகளிலும் உள்ளது போல், பல குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் வட்டமாகவோ, அறுகோணமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். குதிர்களின் மேல் கூரை அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் ஆட்கள் மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள் (belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறை பின்பிற்றப்படுகிறது.

விளைவுகள்[தொகு]

இக்காலக் குதிர்கள் எஃகு, திண் காறை போன்றவற்றாலும் கட்டப்படுகின்றன. கட்டுவதற்குப் பயன்படும் பொருள் நெருப்பினாலும், புழு,பூச்சிகளினாலும் பாதிக்கப்படாததாக இருக்க வேண்டும். ஈரத்தால் பாதிக்கப்படும் சிமெந்து மாவு, சர்க்கரை போன்றவற்றைச் சேமிக்கும் போது, அந்த ஈரத்தால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். மரம், எஃகுக் குதிர்களுக்கு அடிக்கடி வர்ணப்பூச்சு அவசியம் அடிக்க வேண்டும்.

சேமிக்கப்படும் பொருள் வெளியேற்றப்படும் பொழுது, அழுத்தத்தினாலும், உராய்வினாலும் பக்கச்சுவர்களில் ஒட்டிக் கொண்டு, சிறிதுசிறிதாக சேமிக்கப்பட்டப் பொருள், குறைந்த அளவில் வீணாவதும் உண்டு. மேற்கூறிய விளைவுகள் ஏற்படாவண்ணம், உகந்த முறையில் தொழில்நுட்ப பொறியியல் அறிஞர்களைக் கொண்டு, திட்டமிட்டுக் குதிர்கள் கட்டப்பட வேண்டும்.

குதிர்

இப்பொழுது கட்டப்படும் தமிழகக் கிராம வீடுகளிலும் கூட, வேளாண்மை செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று சந்தையில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுகிறது. அடுத்த பருவத்தில் பயிரிட வேண்டி விதைகள் மட்டும் சேமிக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் கிராமங்களுக்கு தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் சேமிக்கும் வழக்கம் அருகி வருகிறது.

தமிழ்நாட்டில் குதிர்கள்[தொகு]

கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும் இது ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.

குதிலரை அல்லது குதிர் என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானிய சேமிப்புக்கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்து வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை சுமார் ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஒரு உறைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். இதனால் தானியங்கள் எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக தானியத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைக்கப்பட்டிருக்கும்.[1]

உபயோக முறை[தொகு]

  • தானியங்களை அறுவடைக்காலங்களின் போது எடுத்து வந்து குதிலின் மேல்பக்கம் உள்ள பெரும் துவாரம் வழியாக கொட்டிவிடுவர்.
  • தேவைப்படும் காலங்களில் தரையளவு உள்ள கீழ்க்கதவை திறந்து தேவையான அளவு தானியங்களை எடுத்துவிட்டு மூடிவிடுவர்.
  • இடையில் தானியங்களின் அளவை பார்ப்பதற்கு நடுத்துவாரக்கதவு ஒன்றும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. என். முருகவேல் (2018 சனவரி 20). "வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 20 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிர்&oldid=2744860" இருந்து மீள்விக்கப்பட்டது