கிளிமஞ்சாரோ மலை
கிளிமஞ்சாரோ மலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 5,895 m (19,341 அடி) ![]() |
இடவியல் புடைப்பு | 5,885 m (19,308 அடி) ![]() |
இடவியல் தனிமை | 5,510 km (3,420 mi) ![]() |
கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' [1] என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.
மலை அமைப்பு[தொகு]
இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிளிமஞ்சாரோவின் உகரு முகட்டிற்கு முதன்முதலாக அக்டோபர் 6, 1889 அன்று, மராங்கு (Marangu ) படைத்துறையைச் சேர்ந்த யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo) என்பவரின் துணையோடு டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மேயர் (Hans Meyer), ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller) ஆக மூவரும் ஏறி வரலாறு படைத்தனர். கிபோவைத் தவிர மற்ற இரு பெரும் எரிமலை முகடுகளாகிய மாவென்சி (5,149 மீ, 16,890 அடி), சிரா (3,962 மீ, 13,000 அடி) ஆகியனவும் அடங்கிவிட்ட எரிமலைகள்தாம். மாவென்சி ஆப்பிரிக்காவிலேயே மூன்றாவது உயரமான மலை (கென்யா மலை இரண்டாவது உயரமான மலை).
மலையின் பெயர்[தொகு]
இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்பொழுது யாரால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஐரோபியர் இப்பெயரை 1860-ஆம் ஆண்டளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சுவாகிலி மொழியில் "கிளிமா" (Kilima ) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள்[2] என்றும் "ஞ்சாரோ" (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் "வெள்ளை" "பளபளப்பான" என்று பொருள் என்றும் [3] கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ (jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர். சிறுமலை அல்லது குன்று என்று பொருள்படும் கிளிமா என்னும் பெயர் எப்படி இப்பெரிய மலைக்கு முன்னொட்டாக வந்தது என்று இவ்விளக்கங்கள் தெளிவு படுத்துவதில்லை. கிச்சகா மொழியில் கிளிமஞ்சாரே அல்லது கிளிமஜ்யாரோ (kilemanjaare or kilemajyaro) என்னும் சொற்கள் "பறவையை, சிறுத்தையை, பயணத்தொடர் வரிசையைத் தோற்கடிக்கும்" ("which defeats the bird/leopard/caravan") என்று பொருள்படும் என்கிறார்கள், ஆனால் ஐரோப்பியர்கள் 1850களில் இங்கு வரும் முன்னர், கிச்சகா மொழியினர் அப்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள்[2]
1880களில் இம்மலை டாய்ட்ச் மொழியில் கிலிமண்ட்ஷாரோ (Kilimandscharo) என்று அழைக்கப்பட்டது. கார்ல் பீட்டர்ஸ் என்னும் டாய்ட்ச் நாட்டவர் இப்பகுதி மக்களின் தலைவர்களிடம் பேசி இம்மலையை டாய்ட்ச் நாட்டினரின் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியாட்சியின் (காலனியின்) பகுதியாக ஆவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார். 1889-இல் கிபோ மலையில் உள்ள உகுரு முகட்டை கெய்சர் வில்ஹெல்ம் ஸ்பிட்ஸெ (Kaiser-Wilhelm-Spitze) [2] என்று பெயரிட்டு டாய்ட்ச் பேரரசின் ஆவணங்களில் 1918-ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தனர். 1918-இல் பிரித்தானியர் இப்பகுதியை டாய்ட்ச்சு நாட்டினரிடம் இருந்து வென்று கைமாறிய பின் அப்பெயர் கைவிடப்பட்டது.

தற்போதைய நிலைமைகள்[தொகு]
தட்பவெப்ப நிலைகள்[தொகு]
இம்மலையின் உட்புறத்தில் எரிமலை அடங்கிப் போனாலும், இதன் மேற்பரப்பில் நிகழ்வன உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இம்மலையின் உச்சியில் இருந்த அண்மைக்காலப் பனியாறுகள் பின்வாங்கியுள்ளன. மலையுச்சிப் பனிக்கட்டிகளின் கனவளவு 80% க்கு மேல் குறைந்துவிட்டது. இப் பனிக்கட்டிகள் உருகி எப்போது முற்றாகவே இல்லாமல் போகும் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 2002-ஆம் ஆண்டில் ஓஹியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்தட்பவெப்பவியலாளர் லோனீ தாம்சன் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இம்மலையின் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2015க்கும் 2020க்கும் இடையில் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. 2007-இல் ஆய்வு நடத்திய ஆஸ்திரிய அறிவியலாளர் குழுவொன்று உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2040 ஆம் ஆண்டளவிலேயே மறையும் என்கின்றனர். சில பகுதிகளிலுள்ள வானிலை காரணமாக மலைச் சரிவின் சில பகுதிகளில் பனிக்கட்டிகள் மேலும் சில காலத்துக்கு இருக்கும் என அவர்கள் மதிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா அறிவியல் அக்கடமியின் ஆய்வுகள் உச்சியை மூடியுள்ள பனிக்கட்டிகள் 2050-ஆம் ஆண்டிலேயே இல்லாமல் போகும் என்கின்றன.
எரிமலைசார் நிலைமைகள்[தொகு]
இது செயற்பாடற்றதாக இருப்பினும் கிளிமஞ்சாரோவின் முதன்மைக் கொடுமுடியான கிபோவில் வளிமங்களை வெளிவிடும் புகைத்துளைகள் (fumaroles) காணப்படுகின்றன. கொடுமுடியில் அமைந்துள்ள எரிமலைவாய்ப் பகுதியில் 400 மீட்டர்களுக்குக் கீழ் பாறைக்குழம்பு உள்ளதாக 2003-இல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். முற்காலத்தில் பல நிலச்சரிவுகளும், உடைவுகளும் கிபோவில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
நிலப்படம்[தொகு]
கிளிமஞ்சாரோவின் முந்திய நிலப்படம் 1963-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசின் கடல்கடந்த நில அளவை இயக்ககத்தினால் வெளியிடப்பட்டது. இவை 1958-ஆம் ஆண்டளவில் அரச வான் படையினால் எடுக்கப்பட்ட வான்படங்களை (air photography) அடியொற்றியவை. 1:50,000 அளவுத்திட்டத்துக்கு வரையப்பட்ட இப்படங்கள் 100 அடி வேறுபாட்டுடனான உயரக்கோடுகளைக் (contours) கொண்டுள்ளன. இந்த நிலப்படங்கள் தற்போது கிடைப்பதில்லை. சுற்றுலாத்துறைக்கான நிலப்படம் முதன் முதலாக 1989-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. 1990-இல் இன்னொரு நிலப்படம் சுற்றுலாத்துறைத் தகவல்களுடன் வெளியிடப்பட்டது, இது 1:75,000 அளவுத்திட்டத்தில், 100 மீட்டர் வேறுபாட்டுடனான உயரக்கோடுகளுடன் அமைந்திருந்தது. இதில் முறையே 1:20,000, 1:30,000 ஆகிய அளவுத்திட்டங்களில் உள்ளீடாக கிபோ, மாவேன்சி ஆகியவற்றின் நிலப்படங்கள் இருந்தன. இந்த நிலப்படம் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்பியல் அம்சங்கள்[தொகு]
கிளிமஞ்சாரோ மலை உலகின் மிகப்பெரிய பல்லடுக்கு எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இது எரிமலைக் குழம்பு, எரிமலைத் தூசிப் படிவு, எரிமலைச் சாம்பல் ஆகியவற்றின் பல படைகளால் அமைந்தது. எரிமலைத் தூசிப் படிவுகள் எரிமலை வெடிப்பின்போது வளிமண்டலத்தில் கலந்து பின்னர் படிவுற்றவை. எனவே இது காணப்படுவது ஒருகாலத்தில் கிளிமஞ்சாரோவில் எரிமலை இயக்கமுள்ளதாக இருந்ததைக் காட்டுகிறது. இருந்தாலும், அறியக்கூடிய அண்மைக் காலத்தில் எரிமலை வெடிப்பு ஏற்படவில்லை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக இம்மலை செயலற்ற நிலையிலேயே இருப்பதாகக் கருதலாம்.
கிளிமஞ்சாரோ மலை கூம்பு எரிமலை வடிவம் கொண்டது. இது எரிமலைவாயூடாக எறியப்பட்ட பொருள்களினால் உருவானது. இவ்வாறான வெளிப்படு பொருட்கள் எரிமலை வாயைச் சுற்றிக் கூம்பு வடிவில் குவிந்தன.
மலையேறும் பாதைகள்[தொகு]

கிளிமஞ்சாரோ மலைமீது ஏற ஏற்புபெற்ற பல மலைவழிகள் உள்ளன. அவையாவன:
- மச்சாமே (Machame) [4][5]
- மாரங்கு (Marangu) [6][7]
- ரோங்கை (Rongai) [8][9]
- லெமோஷோ அல்லது லண்டோரோசி லெமோஷோ (Londorossi Lemosho)[10][11]
- உம்புவே (Umbwe )[12][13]
- சிரா (Shira) [14][15]
- இம்வேக்கா (Mweka) (descent only) [16]
இவற்றுள் "மச்சாமே" சிறந்த காட்சியமைப்புக் கொண்டதும் சரிவு கூடியதுமான பாதையாகும். "ரோங்கை", "மராங்கு" ஆகியவை இலகுவான பாதைகள். ஆனால் இப்பாதைகளில் தங்குமிட வசதிகள் குடிசைகளாகும். ஏறுவது இலகுவானதால் இப்பாதைகள் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளன. இங்கே ஏறுவதும் இறங்குவதும் ஒரே வழியே.
கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இது பற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். நுட்ப நோக்கில் ஏறுவது இலகுவானாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவது கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும். எனினும் பலர் நோய்வாய்ப்படுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந்நோயால் மலையேறுவோர் 10 பேர்வரை இறக்கிறார்கள். இவர்களுடன் உதவிக்குச் செல்லும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 10-20 பேர் வரை இறப்பதாகச் சொல்லப்படுகிறது. மலையேறும் எல்லோருமே ஓரளவு வசதிக்குறைவு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" கொடுமுடியை அடைகிறார்கள். குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
மலையேறுவோர் கிளிமஞ்சாரோ மலையில் செலவுசெய்யும் ஒவ்வொரு நாளுக்கும் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பாக தான்சானிய அதிகார அமைப்புக்களை உயர் மலைகளில் ஏறுவோர் சங்கங்கள் விமர்சித்துள்ளன. இப்போக்கு, செலவுகளைக் குறைப்பதற்காக மலையேறுவோர், புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொள்ளத் தூண்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கிளிமஞ்சாரோவில் ஏறுவது இலகு என எண்ணிக்கொண்டு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையிட்டு அங்குள்ள தான்சானிய மருத்துவ சேவை அலுவலர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு வரும் பலருக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள், தான்சானியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மலையேறும் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளத் தூண்டப்படுவதாகவும், அதற்குத் தேவையான உடற்தகுதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கின்றன.
தாவர வகைகள்[தொகு]
கிளிமஞ்சாரோவில் நீரைத் தேக்கும் முட்டைக்கோசு வகைத் தாவரங்களை உட்படுத்திய, பல தனித்துவமான தாவர வகைகளை டுசொக் புல்வெளிப் பகுதிகளில் காணலாம். இவையனைத்தும் ஆல்ப்ஸ் காலநிலைக்குப் பழக்கப்பட்டவை. கிளிமஞ்சாரோ பலவிதமான காட்டுவகைகளை 3000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் கொண்டுள்ளது. இக் காடுகளில் 1200க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த vascular தாவரங்கள் காணப்படுகின்றன.
விலங்குகள்[தொகு]
கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில் பல்வேறு பறவைகளையும் விலங்குகளையும் காணலாம். இவற்றுள் கட்டைவிரலற்ற கொலோபசுக் குரங்கு, நால்வரி எலி, குங்குரு எனப்படும் வெண்கழுத்துக் காக்கை, எலும்புண்ணிக் கழுகு, பல்வகை மலைக்குருவிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
- ↑ "உகுரு" அல்லது "உஃகுரு" என்பது Uhuru என்று கிழக்கு ஆப்பிரிக்க மொழியாகிய கிசுவாகிலி மொழியில் உள்ள சொல். அதன் பொருள் விடுதலை அல்லது நாட்டு விடுதலை என்று பொருள். தற்பொழுது ஆங்கிலத்திலும் இச்சொல் ஏற்றுக்கொண்ட சொல் (1950களில் ஏற்றுக்கொண்ட சொல்). இங்கே பார்க்கவும் பரணிடப்பட்டது 2008-04-15 at the வந்தவழி இயந்திரம்)
- ↑ 2.0 2.1 2.2 http://www.ntz.info/gen/b00769.html
- ↑ "Kilima-Njaro" (alternate name in 1907), The Nuttall Encyclopædia, 1907, FromOldBooks.com, 2006, webpage: FOB-Njaro.
- ↑ http://7summits.com/kilimanjaro/machame.php
- ↑ http://www.climber.org/TripReports/2004/1390.html
- ↑ http://7summits.com/kilimanjaro/marangu.php
- ↑ http://www.ultimatekilimanjaro.com/routes#marangu
- ↑ http://7summits.com/kilimanjaro/rongai.php
- ↑ http://www.ultimatekilimanjaro.com/routes#rongai
- ↑ http://7summits.com/kilimanjaro/shira-machame.php
- ↑ http://www.ultimatekilimanjaro.com/routes#lemosho
- ↑ http://7summits.com/kilimanjaro/umbwe-breach.php
- ↑ http://www.ultimatekilimanjaro.com/routes#umbwe
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.footprint-adventures.co.uk/itinkms.html.
- ↑ http://www.ultimatekilimanjaro.com/routes#shira
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://gorp.away.com/gorp/location/africa/tanzania/hik_kil2.htm.