எலும்புண்ணிக் கழுகு
எலும்புண்ணிக் கழுகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி (Chordata) |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கழுகு வரிசை |
குடும்பம்: | ஆக்ஸிபிட்ரிடீ (Accipitridae) |
பேரினம்: | ஜிப்பேட்டஸ் Gypaetus ஸ்டோர் (Storr), 1784 |
இனம்: | G. barbatus |
இருசொற் பெயரீடு | |
Gypaetus barbatus (L, 1758 | |
![]() | |
உலகில் இன்று எலும்புண்ணிப் பாறு வாழும் பகுதிகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இத்தாலியின் வடக்கே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் இப்பறவை கொண்டுவிடப்பட்டுள்ளது. |

எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% எலும்பாக இருப்பதால்[2] இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்பாறு அறிவியல் வகைப்பாட்டில் கழுகுவரிசையில் (Falconiformes, `வால்க்கனி`வார்ம்ஸ்) ஆக்ஸிபிட்ரிடீ (Accipitridae) என்னும் குடும்பத்தில், ஜிப்பீட்டஸ் (Gypaetus) என்னும் பேரினத்தில், எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும்.
தோற்றம்[தொகு]
எலும்புண்ணிப்பாறு தன் சிறகை விரித்து இருக்கும் பொழுது ஏறத்தாழ 3 மீட்டர் (9-10 அடி) அகலமும், தலையில் இருந்து வால் வரையில் நீளம் ஏறத்தாழ ஒரு மீட்டரும் இருக்கும். சிறகுகள் கரும்பழுப்பு நிறத்திலும், உடல் இளம்பழுப்பு நிறத்திலும், தலையில் கருப்பு வெள்ளை பட்டைகளும் அலகை ஒட்டி தாடி போல இறகுகள் நீட்டிக்கொண்டிருப்பதும் சிறப்புத் தோற்ற அடையாளங்கள் ஆகும். இப் பாறுக்கு "தாடி" இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் தாடிப் பிணந்தின்னிக் கழுகு (Bearded vulture) என்று அழைக்கிறார்கள். நெஞ்சில் கருப்பும் வெள்ளையுமாக புள்ளிகள் இருக்கும். பிணந்தின்னிக் கழுகாக இருந்த பொழுதிலும், பிணந்தின்னிக் கழுகுகள் போல இல்லாமல் பிற கழுகுகளைப் போல் முகத்தில் இறகுகள் இருப்பதும் சிறப்பு அடையாளம். இறந்த விலங்குகளின் தசையைக் கிழிக்க வலுவான வளைந்த பெரிய அலகும், வலிந்து பற்றக்கூடிய கால்விரல்களும் நீளமான உகிர்களும் (கால் நகம்) கொண்டிருக்கும்.

வாழ்முறை[தொகு]
எலும்புண்ணிக் கழுகு மலை முகடுகளில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைப் பகுதிகளில் கூடுகட்டி வாழ்கின்றது. ஒரு பெண்பறவையுடனே உறவு கொண்டுள்ளது (ஒரு சில ஆண் பறவைகளுடனும் உறவு கொள்ளுமாம் [3]. மார்ச்-மே மாதங்களில் கூட்டில் ஒன்றோ இரண்டோ முட்டைகள் இடுகின்றன. முட்டைகள் வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் உள்ளன. குஞ்சுகள் பொரித்து வெளிவரும்பொழுது அதன் தூவி வெண்மையாக இருக்கும். குஞ்சு பொரித்து 7 மாதங்கள் முதல் ஓராண்டுவரை தாய்-தந்தைப் பறவைகள் கொண்டு வந்து தரும் உணவை உண்டு வாழ்கின்றன. 6-7 ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற முழு உடல்வளர்ச்சி அடைகின்றன. விலங்குக்காட்சியகங்களில் வளரும் பொழுது 40 ஆண்டுகள் கூட உயிர்வாழும் [3]..
எலும்புண்ணிப் பாறுகள் எலும்பை முழுவதுமாக உண்ணுவது வியப்பூட்டுவதாகும்.. உண்ணும் அளவாக எலும்பை உடைக்க, பெரிய எலும்புகளை தூக்கிக்கொண்டு ஏறத்தாழ 80 மீட்டர் (260 அடி) உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே பாறைகளில் விழச்செய்து எலும்புகளை உடைத்து உண்ணுகின்றது[4]. பாறுதல் என்றால் மோதி உடைத்தல், சிதறுதல் என்னும் பொருள் இருப்பதாலும், உயர் மலைப்பகுதிகளில் பாறைகளில் வாழ்வதாலும் இக்கழுகு இனம் எலும்புண்ணிப்பாறு என்று தமிழில் அழைக்கப்படுகின்றது. உடைத்த எலும்புகளின் உள்ளே இருக்கும் எலும்பு மச்சையையும் உண்கின்றது.
இப்பறவைகள் தான் வாழும் பகுதிகளிலேயே தங்கி வாழும் பறவைகள் (தொலைவான பகுதிகளுக்கு வலசையாகச் செல்லாத பறவை).
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]
- ↑ BirdLife International (2004). Gypaetus barbatus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 09 May 2006. Database entry includes justification for why this species is of least concern
- ↑ Handbook of the Birds of the World, Volume 2. p.84 and p. 125
- ↑ 3.0 3.1 Handbook of the Birds of the World, Volume 2. p. 125
- ↑ "lammergeier." Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. 12 Apr. 2008 <http://www.search.eb.com.proxy.lib.uwaterloo.ca/eb/article-9046969>