ஓவியத்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை ஓவியம், சமயத் தொடர்புள்ள, செந்நெறிக்கால அலங்காரங்களோடு கூடிய, காட்சிகளை அப்படியே காட்டும் இயல்பினவாகவே இருந்தன. இதன் பின்னர் பண்பியல் (abstract) மற்றும் கருத்துரு (conceptual) அணுகுமுறைகளில் ஓவியம் வரைவது விருப்பத்துக்கு உரியதாகியது.

கிழக்கத்திய ஓவியங்களிலும், மாற்றங்கள் நிகழ்ந்தே வந்தன. ஆபிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் என்பன மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மறுதலையாக, மேற்காட்டிய கிழக்கத்திய ஓவிய வகைகளின் வளர்ச்சியிலும் மேற்கத்திய செல்வாக்குக் காணப்படுகின்றது.[1][2][3]

வரலாற்றுக்கு முந்திய காலம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: வரலாற்றுக்கு முந்திய கலை

அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய ஓவியங்கள் எனக் கருதப்படுவன பிரான்சின் குரோட்டே சோவெட்டில் (Grotte Chauvet) உள்ள ஓவியங்கள் ஆகும். சில ஆய்வாளர்கள் இவற்றை 32,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்கின்றனர். சிவப்பு நிறக் களிகள் கொண்டு வரையப்பட்டுள்ள அல்லது செதுக்கப்பட்டுள்ள இவ்வோவியங்களில், குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்கள் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே உள்ளன. குகை ஓவிய எடுத்துக் காட்டுகள், பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றை உருவாக்கிய மனிதர் இவற்றை என்ன நோக்கத்துக்காக ஆக்கினர், இவை தொடர்பில் எவ்வாறான பொருள் விளக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர் என்பவற்றை விளக்குவதற்காகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தொல்பழங்கால மனிதர், விலங்குகளை இலகுவாக வேட்டையாடுவதற்காக அவற்றின் ஆவிகளைப் "பிடிப்பதற்காக" இவ்வோவியங்களை வரைந்து இருக்கலாம் என்றும், இயற்கையை விலங்குகள் வடிவில் கண்டு அவற்றுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என்றும், மனிதர்களுக்கு இயல்பாக உள்ள உணர்வு வெளிப்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கானவை இவை என்றும், தகவல்களைப் பரிமாறுவதற்கான ஒரு முறையே இது என்றும் விளக்கங்கள் பலவாறாக அமைந்துள்ளன.

பழையகற்காலத்தில் குகை ஓவியங்களில் மனிதர்களை வரைவது மிகவும் அரிது. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டன. உணவாகப் பயன்படக்கூடிய விலங்குகளை மட்டுமன்றி பலத்தைக் குறிக்கும் காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இந்த ஓவியங்களில் காணப்படுகின்றன. புள்ளிகள் போன்ற குறிகளும் சில வேளைகளில் வரையப்பட்டுள்ளன. மிக அரிதான மனிதர் தொடர்பான எடுத்துக் காட்டுகளுள், கை அடையாளங்கள், அரை விலங்கு அரை மனித உருவங்கள் போன்றன அடங்குகின்றன. கிமு 31,000 ஆண்டளவில் வரையப்பட்ட சோவட் குகை ஒவியங்களே காக்கப்பட்ட நிலையில் உள்ள முக்கியமான பழையகற்கால ஓவியங்கள். ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் கி.மு 14,000 – 12,000 ஆண்டுகள் காலப்பகுதியில் வரையப்பட்டவை. இவற்றில் வேறு பலவற்றோடு பைசன் என்னும் விலங்கினமும் வரையப்பட்டுள்ளது. பிரான்சின், லாஸ்கோக்ஸ், டோர்டோக்னே என்னுமிடத்தில் உள்ள ஓவியங்கள் மிகவும் அறியப்பட்ட சுவர் ஓவியங்களுள் அடங்குவன. இவை கி.மு 15,000 – 10,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.

மேலே குறிப்பிடப்பட்ட குகைகள் மனிதர் வாழ்ந்த இடங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் இக் குகைகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சடங்குகள் நடத்துவதற்காகப் பயன்பட்டிருக்கக் கூடும். விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டுள்ளதால் இவை மாய மந்திரத் தேவைகளுக்காப் பயன்பட்டிருக்கவும் கூடும். லாஸ்கோக்சில் உள்ள ஓவியங்களில் காணப்படும் அம்பு போன்ற குறியீடுகள் சில சமயங்களில் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் போன்ற பயன்பாடுகளைக் குறிப்பதுண்டு. ஆனாலும் எந்த முடிவுக்கும் வருவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இடைக் கற்காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆக்கம் ஸ்பெயினின் கஸ்டெலனில், சிங்கிள் டி லா மோலா என்னும் இடத்தில் உள்ள நடைபோடும் போர்வீரர் (marching Warriors) என்னும் ஓவியம் ஆகும். இது, கி.மு 7,000 – 4,000 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இது நிறத்தூள்களை பாறை மீது துப்புவதால் அல்லது ஊதுவதால் வரையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள உருவங்கள் ஒன்றின் பின்னால் ஒன்று மறையும் படி வரையப்பட்டிருப்பினும் இவை முப்பரிமாணங்களைக் காட்டும் ஓவியங்கள் அல்ல.

கிழக்கத்திய ஓவியங்கள்[தொகு]

தென்னாசிய ஓவியங்கள்[தொகு]

இந்திய ஓவியங்கள்[தொகு]

இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. இந்திய ஓவியம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் இருந்த பல்வேறு ஓவியப் பாணிகளை ஒருங்கே குறிக்கும் ஒரு தொடராகும். இது எல்லோராவில் காணும் பெரிய சுவரோவியங்கள் முதல் முகலாயரின் சிற்றோவியங்கள் வரை பல்வேறு அளவுகளில் உள்ள ஓவியங்களையும், உலோகங்களால் அழகூட்டப்பட்ட தஞ்சாவூர் பாணி ஒவியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது. காந்தாரம், தக்சிலா ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களில் பாரசீகச் செல்வாக்குக் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதி ஓவியங்கள் பெரும்பாலும் நாளந்தாவை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவை. இவ்வாக்கங்கள் இந்தியப் புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.

மிகப்பழைய இந்திய ஓவியங்கள் பீம்பேத்கா பாறை வாழிடங்களில் காணப்படுகின்ற ஓவியங்கள் ஆகும். இவை கி.மு. 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தாவில் இந்திய ஓவியங்களின் சிறந்த எடுத்துக் காட்டுகளைக் காண முடிகின்றது. கனிமங்களில் இருந்து பெறப்பட்ட, சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களில் பல்வேறு சாயைகளைப் பயன்படுத்தி இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்திய ஓவியப் பாணிகளில் பின்வருவன பரவலாக அறியப்பட்டவை.

கிழக்காசிய ஓவியங்கள்[தொகு]

சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளும் பலம்வாய்ந்த ஓவிய மரபுகளைக் கொண்டவை. இவை வனப்பெழுத்து (calligraphy), அச்சடிப்பு (printmaking) என்பவற்றோடும் நெருங்கிய தொடர்புகொண்டவை. தூரகிழக்கு நீர் சார்ந்த நுட்பங்கள், குறைவான உண்மையியம், நளினமானவையும் மரபுப்பாணியில் அமைந்தவையுமான உருவங்கள், வெண்ணிற வெளிகளின் (எதிர் வெளி) முக்கியத்துவம், நிலத்தோற்றங்களுக்குக் கொடுக்கும் முதன்மை என்பன தூரகிழக்கு நாடுகளின் ஓவியங்களுக்குத் தனித்துவமான இயல்புகளை வழங்குகின்றன. மையாலும், நிறங்களாலும்; கடதாசி, பட்டுத் துணி என்பவற்றின் மீது வரைவதற்கும் அப்பால், அரக்குப் பூச்சின் (lacquer) மீது பொன் இழைத்து வரைவதும் கிழக்காசிய ஓவியங்களில் பொதுவாகக் காணும் ஒரு அம்சமாகும். கிபி முதலாம் நூற்றாண்டில் கடதாசி கண்டுபிடிக்கப்பட்டபோது, இது ஓவியம் வரைவதற்கான மலிவான ஊடகமாக ஆனது.

கான்பூசியனியம், தாவோயிசம், புத்த மதம் என்பன கிழக்காசிய ஓவியங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. மத்தியகால சோங் மரபு ஓவியரான லின் டிங்குயி (Lin Tinggui) வரைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைசெய்யும் பிக்குகள் என்னும் ஓவியம், பௌத்த எண்ணக்கருக்கள் சீன மரபுவழி ஓவியங்களில் கலந்து இருப்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பட்டுத்துணியில் வரையப்பட்ட மேலே குறிப்பிட்ட ஓவியம் மழித்த தலையுடன் கூடிய பிக்குகள் ஆற்றில் சலவை செய்யும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளனர். பனிபடர்ந்தது போன்ற, மண்ணிறமும், அமைதியான காட்டுச் சூழலும் அமைந்த பின்னணியில் அவற்றுக்கு எதிர்மாறாக ஒளிரும் கடுமையான நிறங்களில் பிக்குகள் வரையப்பட்டுள்ள இவ்வோவியம் வியக்கத்தக்கவகையில் உள்ளது. மர உச்சிகளை மூடியிருக்கும் மூடுபனி கிழக்காசிய ஓவியங்களுக்கே உரிய எதிர் வெளியை (negative space) உருவாக்குகின்றது.

கிங் மிங் விழாவின்போது ஆற்றோரக் காட்சி (Along the River During Qing Ming Festival), சீன ஓவியரான சாங் செடுவான் வரைந்த, 12 ஆம் நூற்றாண்டு ஓவியத்தின் 18ஆம் நூற்றாண்டு மீள்வரைவு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவியத்தின்_வரலாறு&oldid=3889649" இலிருந்து மீள்விக்கப்பட்டது