தகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
The ASCII codes for the word "Wikipedia" represented in binary, the numeral system most commonly used for encoding computer information.

ஒரு கருத்துரு என்னும் அடிப்படையில், தகவல் என்பது பல்வேறு பொருள்களைத் தருவது. அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து தொழில்நுட்பப் பின்புலம் கொண்ட பொருள்கள் வரை இது பரந்துள்ளது. பொதுவாக, தகவல் என்னும் கருத்துரு; கட்டுப்பாடு, தொடர்பு, தரவு, வடிவம், விளக்கம், அறிவு, மனத்தூண்டல், ஒழுங்குரு, நோக்கு, சார்பாண்மை போன்ற கருத்தமைவுகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. தகவல் சமூகம், தகவல் புரட்சி, தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.

தமிழில் தகவல் என்பது, செய்தி என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான information என்னும் சொல்லுக்கு, "தகவல் சொல்லும் செயல், அல்லது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளதுபோல் இது, மனதுக்கு வடிவம் கொடுத்தல்" என்னும் பொருள் தரப்பட்டுள்ளது.

இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் தகவல் என்பது "ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை" ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது பெறுனர்களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய பண்பு எனலாம். தகவல் என்பது எப்பொழுதும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது துல்லியத் தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு அதிகரிக்கும்போது அதன் துல்லியத் தன்மையும் அதிகரிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்&oldid=2228060" இருந்து மீள்விக்கப்பட்டது