ஒலியியல் (மொழியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

மொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.

பிரிவுகள்[தொகு]

பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:

  • ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
  • அலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
  • கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது.

மொழிகளில் பேச்சொலிகள்[தொகு]

பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.

மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காசு மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாசு மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராகா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாசு மொழியில் 11 ஒலியன்களும், அவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).

ஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).

ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகளும் உசாத்துணையும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியியல்_(மொழியியல்)&oldid=3527714" இலிருந்து மீள்விக்கப்பட்டது