சூழ்பொருளியல்
சூழ்பொருளியல் (Pragmatics) என்பது, சொற்றொடரின் பொருளுக்கும், பேசுபவரின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆராயும் துறையாகும். எனவே இத்துறையில், சூழ்நிலை (context) எவ்வாறு பொருள்கொள்ளலில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. சூழ்பொருளியல் பொதுவான மொழியியலின் ஒரு துணைப் பிரிவாகும்.
ஆய்வுமுறையும், முன்கருதற் குறிப்புகளும் (presuppositions)
[தொகு]சூழ்பொருளியல், பொதுவாக உரையாடற் சூழ்நிலையில், சொற்றொடர்களாலான பேச்சுத் தொடர்களிலேயே (utterances) முக்கியமாக ஆர்வம் காட்டுகின்றது. சூழ்பொருளியலில், சொற்றொடர்ப் பொருள் (sentence meaning), பேசுனர் பொருள் (speaker meaning) ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியப்படுகின்றது. சொற்றொடர்ப் பொருள் என்பது சொற்றொடரால் குறிக்கப்படுகின்ற நேரடியான பொருளாகும். பேசுனர் பொருள் எனும்போது அது, பேசுனர் தெரியப்படுத்த விரும்பும் கருத்துருவைக் குறிக்கிறது.
இன்னொரு பேசுனர் தெரிவிக்க விரும்பும் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல், சூழ்பொருளியல் ஆற்றல் எனப்படுகின்றது.