உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பீட்டு மொழியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும். இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.[1][2][3]

மரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு முந்து மொழி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் மொழிக் குடும்பங்களை உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது.

வழிமுறைகள்

[தொகு]

ஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் ஒலியியல் முறைமைகள், உருபனியல் முறைமைகள், தொடரியல், சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும்.

நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் எடுகோள்கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த இந்திய-ஐரோப்பிய மொழிகளிலுமே காணப்படாத குரல்வளையொலிகள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற சோசுரே (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் இட்டைட்டு மொழியின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே மெய்யொலி எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ringe, D. A. (1995). "'Nostratic' and the factor of chance". Diachronica 12 (1): 55–74. doi:10.1075/dia.12.1.04rin. 
  2. See for example Language Classification by Numbers by April McMahon and Robert McMahon
  3. Lyle Campbell (2004). Historical Linguistics: An Introduction (2nd ed.). Cambridge: The MIT Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பீட்டு_மொழியியல்&oldid=4164836" இலிருந்து மீள்விக்கப்பட்டது