ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள்
பொதுக்கூறுகள்
[தொகு]ஓரிடத்தின் இயல்பை அடைமொழியாயின்றிக் குறிப்பிடும் வடிவங்கள் பல ஊர்களுக்கும் பொதுவானதாக வருவதால் அவை பொதுக்கூறுகள் எனப்படுகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ஒரே வடிவம் சுட்டுவதால் ஏற்படும் குழப்பத்தை நீக்க, வேறுபடுத்தும் கூறுகள் பெயரின் முற்பகுதியில் சேர்க்கப்படுகின்றன.
சிறப்புக் கூறுகள்
[தொகு]தெளிவு தோன்றவோ, சிறப்பு கருதியோ ஊர்ப்பெயர்களின் முற்பகுதியில் சேர்க்கப்படுபவை, சிறப்புக் கூறுகள் எனப்படுகின்றன. இச்சிறப்புக் கூறுகளின் தோற்றத்திற்குப் பின், ஏற்கனவே வழங்கிய பொதுக்கூறுகள் ஊர்ப் பெயராக்க விகுதிகளாகச் செயற்படுகின்றன.
பொதுக்கூறின் வகைகள்
[தொகு]பொதுக்கூற்றின் வடிவங்கள், பொருண்மை நிலையில் பலவாக இருந்தாலும் பயன்பாட்டு நிலையின் அடிப்படையில் பின்வரும் இரு வகைகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன
- குடியிருப்பிடங்களை நேரடியாகச் சுட்டுவன.
- குடியிருப்பிடங்களை மறைமுகமாகச் சுட்டுவன.
குடியிருப்பிடங்களை நேரடியாகச் சுட்டுவன
[தொகு]குடியிருப்பிடங்களை நேரடியாகச் சுட்டுவன என்னும் இவ்வடிவம் மக்கள் வாழ்விடங்களை நேரடியாகச் சுட்டுவன. இவை இல்வாழ்விடங்களைச் சுட்டுவதற்காக மட்டும் வழங்கி வருகின்றன. இவை பொருள் அடிப்படையில் பெரும்பாலும் மாறுதல் பெறுவதில்லை.
இப்படி ஊர்ப் பெயர்களில் பல வடிவங்கள் கிடைக்கின்றன.
- இருப்பு
- ஊர்
- கல்
- காலனி
- கிராமம்
- குடி
- குப்பம்
- குறிச்சி
- கோம்பை
- சாலை
- சேரி
- நகர்
- நகரம்
- நத்தம்
- பட்டணம்
- பதி
- பாக்கம்
- பாடி
- புஞ்சை
- புரம்
- புரி
- பூண்டி
- மங்கலம்
- மேடு
- வலசை
- வனம்
- வாடி
இருப்பு
[தொகு]இவ்விடம் இருப்பு என்ற பொருளில் வழங்கியிருக்கிறது.
மதுரை மாவட்டத்திலிருக்கும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு ஊர் பெயர் கச்சிராயிருப்பு.
ஊர்களைக் குறித்திடும் "இருக்கை" என்ற வடிவம் 11 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கிறது. கரை இருக்கை, காஞை இருக்கை போன்ற ஊர்கள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. இவ்வடிவமே இருப்பு என்று ஆகியிருக்கலாம்.
இதைத் தவிர குடியிருப்பு என்ற ஒரு கூட்டு வடிவமும் வழங்கி வருகின்றது. குடி, இருப்பு எனும் ஒரே பொருளைத்தரும் இரு சொற்கள் இணைந்த ஒரு பொருட் பன்மொழி குடியிருப்பு ஆகும். குடிகளின் இருப்பிடம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். காலனி (Colony) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகவும் இவ்வடிவம் வழங்குகின்றது.
எடு: பூலாங்குடியிருப்பு
(திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் செங்கோட்டை (நகரம்) அருகில் உள்ள ஒரு ஊர் பெயர் பூலாங்குடியிருப்பு)
ஊர்
[தொகு]ஊர் என்பது மக்களின் குடியிருப்பினைச் சுட்டும் தொன்மை வடிவமாகும். தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் "ஊர்" என்ற சொல் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. மருதநிலம் சார்ந்துள்ள இடத்தை ஊர் என்ற சொல்லால் குறிபிட்டு வந்தனர்.
- அகூர் = அழகு + ஊர் =அழகு நிறைந்த ஊர்
- ஆசு +ஊர் = ஆசூர் = குற்றமில்லாத ஊர்
- ஆத்தூர் = ஆற்று + ஊர்
- எந்தூர் = ஏந்து + ஊர்
- எரையனுரர் = ஏரையான் + ஊர்
- ஏவளுர் = ஏவள் + ஊர்
- கர்ணாவூர் = கர்ணன் + ஆவூர்
- கருப்பூர் = கருப்பு + ஊர்
- கீழ் சித்தாமூர் = கீழ் + சின்ன + ஆமூர்
- கீழ்கூடலூர் = கீழ் + கூடல் + ஊர்
- கீழ்சேவூர் = கீழ் + செம்மை + ஊர்
- குளத்தூர் = குளம் + ஊர் (அத்து) சாரியை
- குறள் + ஊர் =கொரளுர்
- சாத்தனூர் = சாத்தன் + ஊர்
- சிங்கனூர் = சிங்கன் + ஊர்
- செண்டு + ஊர் =செண்டூர்
- தேவன் + ஊர் = தீவனூர், தேவர்கள் வந்து தங்கும் ஊர்
- நல்லாத்தூர் = நல் + ஆற்று + ஊர்
- நல்லூர் = நன்மை + ஊர்
- நன்மை + ஆம் + ஊர் = நல்லாமூர்
- நெடிமொழியன் ஊர் = நெடிமோழியனூர்
- பாதி + இரா + புலி + ஊர் =பாதி இரவில் புலி புகுந்த ஊர் + பாதிராப்புலியூர்
- புலியூர் = புலி + ஊர்
- புளியனூர் = புளியன் + ஊர்
- மலையனூர் = மலையன் + ஊர்
- மானூர் =மான் + ஊர்
- முன்னூர் = முன் + ஊர்
- மேலாதனூர் = மேல் + ஆதன் + ஊர்
- ராயநல்லூர் = ராயன் + நன்மை + ஊர்
- கல்லல் = கல் + அல் = கல்லல்
- வெளியன் + ஊர் = வெளியனூர் [1]
சங்கப்பாடல்களிலிருந்தும் கொளு அல்லது பதிகக் குறிப்புகளிலிருந்தும் கிடைக்கின்ற ஊர்ப் பெயர்களில் பெரும்பான்மையானவை "ஊர்" என்றே முடிகின்றன. [2]
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களிலும் "ஊர்" என்று முடியும் ஊர்கள் காணப்படுகின்றன [3]
"ஊர்தல்" எனும் வினையினால் "ஊர்" என்ற சொல் தோன்றியது. சிறிது சிறிதாக ஊர்ந்து பரவும் தன்மையினால் ஊரென்பது முதனிலைத் தொழிலாகு பெயராகும் என்று ஞா.தேவநேயன் கருதுகிறார். [4] இக்கருத்தில் இச்சொல்லை அணுகினால் மக்களின் குடிப் பெயர்வுகளினால் புதிதுபுதிதாக ஊர்கள் உண்டாகின.
தொன்மைக் குடிகளின் குடியிருப்புக்கள் குடிகளின் பெயரையேக் கொண்டிருக்கும். குடிகளின் குடிப்பெயர்வு மாற்றங்களுக்கேற்ப இக்குடியிருப்புக்களும் இயங்கிக் கொண்டிருக்கும். இங்கு ஊர்ப்பெயர் என்பது இயல்பான ஊரைக் குறிப்பிடாமல் மக்களின் ஒட்டுமொத்தமான தொகுதியினைக் குறிக்கும்"[5] ஊர் என்பது இயங்கிக் கொண்டிருப்பது என்னும் கருத்துடன் இக்கருத்து பொருந்துவதைக் காணலாம்.
"ஊர்" என்ற பொதுக்கூற்று வடிவம் திராவிட மொழிகள் பலவற்றிலும் சிற்றூர் என்ற பொருளில் வழங்கி வருகின்றது.[6]
ஊர் என்ற வடிவம் திராவிட மொழிகள் வழங்கும் இடங்களிலெல்லாம் காணப்படுகின்றது. இப்பகுதிகளில் "ஊர்" என்ற வடிவத்தின் அடிப்படையில் உண்டாகியுள்ள ஊர்ப் பெயர்களை ஆராய்வதன்வழி திராவிட மக்களின் குடியேற்றத்தை அறியலாம்" [7] என்கிறார் டி.பாலகிருஷ்ணன் நாயர்.
குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனும் ஐவகை நிலங்களிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பட்டன என்பதனைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடும் பொழுது மருத நிலத்துக் குடியிருப்புக்கள் "ஊர்" என்று அழைக்கப்பட்டன என்கின்றனர். [8] ஆனால் இவ்வரையறை சங்கவிலக்கியத்தில் பெரும்பாலும் தெளிவாக உருப்பெறவில்லை என்கிறார் கி.நாச்சிமுத்து.[9]
"ஊர்" என்ற இப்பொதுக்கூற்றின் கூட்டு வடிவங்களான புத்தூர், புதூர், முத்தூர், நல்லூர் என்பனவும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூற்று வடிவங்களாக வழங்கி வருகின்றன.
கல்
[தொகு]கல் என்பதை குன்றைக் குறிப்பிடவும் பயன்படுத்தினர். கல்லின் அமைப்பைக் கொண்டு ஊர்களுக்குப் பெயர் வைத்தனர். எடுத்துக்காட்டாக;
- நன்முக்கல்
- நாமக்கல்
- பழமுக்கல்
- பெருமுக்கல்
காலனி
[தொகு]குடியிருப்பு என்ற பொருள்படும் ஆங்கிலச் சொல் காலனி ஆகும். இவ்வடிவம் அப்படியே தற்சமமாகத் தமிழில் வழங்கி வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்கி வரும் வடிவம் இது. ஊரையடுத்து ஏற்படும் குடியிருப்புகள் இப்போது காலனி எனப்படுகின்றன.
கிராமம்
[தொகு]சிற்றூர் எனப் பொருள்படும் சமஸ்கிருதச் சொல் கிராமம் ஆகும். சிற்றூரென்ற பொருளை இச்சொல் உணர்த்தினும் ஊர்ப்பெயருடன் இணைந்து வழங்கி வரவில்லை. காந்தியின் பெயரில் ஊரொன்றை 1947-ல் உருவாக்கிய போது அதற்கு காந்தி கிராமம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
"சாலிக்கிராமம்" என்ற ஊர் தற்போது சென்னை நகரின் ஒரு பகுதியாகவுள்ளது.
குடி
[தொகு]மக்களின் உட்குழுக்களைச் சுட்டிய "குடி" என்ற வடிவம், மக்களின் இருப்பிடங்களையும் சங்ககாலத்தில் சுட்டியிருக்கின்றது. சங்ககால ஊர்ப்பெயர்களில் பல "குடி" என்று முடிகின்றன.
உதாரணமாக சில ஊர்கள்: உத்தங்குடி, சாத்தங்குடி
குப்பம்
[தொகு]கூட்டமாகச் சேர்ந்து வாழுமிடம் குப்பம். சமுதாயத்தில் பின்தங்கிய,பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வாழுமிடமாகக் குப்பம் அமைந்துள்ளது.
1)அங்க்காணிக் குப்பம் 5)ஆதிக்குப்பம் 2)அரியாங்குப்பம் 6)மேல்போடிக் குப்பம் 3)பெலாக் குப்பம் 7)சிங்காணிக் குப்பம் 4)ஆலங்குப்பம் 8)செட்டிக் குப்பம்
குறிச்சி
[தொகு]குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி எனப்பட்டன.ஆனால் சமவெளிப் பகுதிகளில் உள்ள ஊர்களும் குறிச்சி எனப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: பேளுக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி
கோம்பை
[தொகு]மலையடிவாரத்து ஊர்கள் "கோம்பை" எனப்படுகின்றன. சிற்றூர் எனப் பொருள்படும் "கோம்பு" என்ற கன்னடச் சொல்லிம் அடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது. இப்பொதுக்கூறு உள்ள ஊர்களில் கன்னட மக்கள் வாழ்ந்து வருவது இக்கருத்துக்கு அரணாக உள்ளது.
உதாரணமாக சில ஊர்கள்: தேனி மாவட்டத்திலுள்ள கோம்பை , புள்ளிமான் கோம்பை
சாலை
[தொகு]சாலையின் அருகில் அமைந்த ஊர் சாலை.
சேரி
[தொகு]மக்கள் சேர்ந்து வாழுமிடம் "சேரி" எனக் காரணப்பெயராக வழங்கியிருக்கிறது. இச்சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது. முல்லை நிலத்து ஊர்கள் சேரி எனப்பட்டன என்கிறார் நச்சினார்க்கினியர். ஆனால் ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புகளையும் சுட்டி வழங்கியிருக்கின்றது. பார்ப்பனச் சேரி, இடையச்சேரி என்றார் போல மக்கட் பிரிவினரின் பெயர்களுடனும் சேர்ந்து சங்க இலக்கியத்திலும் வழங்கியிருக்கின்றது.
இப்பொதுக்கூறு இந்நாளில் தாழ்த்தப்பட்டவர் என்று அழைக்கப்பெறும் பள்ளர், பறையர், சக்கிலியர் முதலான சாதியினரின் குடியிருப்பிடங்களைக் குறிக்கின்றது. ஆனால் பழந்தமிழில் அவ்வாறு வழங்கவில்லை.[10] என்கிறார் சின்.கோதில்மொழியன். எனினும் 10 ஆம் நூற்றாண்டில் தீண்டாச்சேரி, பறையர்சேரி போன்ற இருப்பிடங்கள் குறிப்பிடப்படுகின்றன.[11] ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புக்கள் இவ்வாறு கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குளம், நீர்நிலை என்ற பொருள்படும் "செருவு" என்ற தெலுங்குச் சொல் சில இடங்களில் "சேரி" என்று மாறியிருக்கின்றது. இவ்விடங்களில் தெலுங்குச் சொற்களுடன் இணைந்து "சேரி" வந்துள்ளது.
உதாரணமாக; தேனி மாவட்டத்திலுள்ள சிந்தலச்சேரி, தாடிச்சேரி -இவை முறையே தமிழில் புளியங்குளம், பனைக்குளம் என்று பொருள்படுகின்றன.
"பச்சேரி" என்ற கூட்டு வடிவமும் சில ஊர்களுக்கு வழங்கி வருகின்றது. பள்ளச்சேரி எனபதே "பச்சேரி" என்று திரிந்திருக்கின்றது. பள்ளர்கள் பள்ளச்சேரி என்னும் பெயரில் ஊருக்கு வெளியே தனியே குடியிருந்ததாக எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். [12] திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளர் சாதியினர் குடியிருப்புகள் "பச்சேரி" என்று அழைக்கப்படுகின்றன.
நகரம்
[தொகு]பேரூர் எனும் பொருளில் நகரம் வழங்கி வருகின்றது. இடைக்காலத்தில் வணிகர்களின் அவை "நகரம்" என்று அழைக்கப்பட்டிருக்கிறது.[13] 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு மக்களின் குடியேற்றம் மதுரை மாவட்டப் பகுதிகளில் நிகழ்ந்த பொழுது, விஜயநகரப் பேரரசின் தலைநகரான விஜயநகரம், வித்யாநகரம் போன்று தாம் குடியேறிய இடத்திற்கும் தெலுங்கு மக்கள் "நகரம்" என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம், கோவிந்தநகரம். -இங்கு தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர்.
நகர்
[தொகு]நகர் எனும் இவ்வடிவம் பெரிய ஊர் என்பதைக் குறிக்கப் பயன்பட்டு வரும் தொன்மையான வடிவம் ஆகும். இவ்வடிவம் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது புதிதாக ஊர்களின் அருகில் உருவாக்கப்படும் குடியிருப்புக்களுக்கு "நகர்" என்ற பொதுக்கூற்றுடன் இணைந்த சிறப்புக் கூற்று வடிவங்கள் சூட்டப்படுகின்றன. பொருண்மையளவில் இவ்வடிவம் மாற்றம் பெற்றுள்ளது.
பழனி மாநகர் (சாணா) என்ற ஊர்ப்பெயரில் "மாநகர்" என்ற கூட்டு வடிவம் வந்துள்ளது. பெருமை கருதி, "மா" என்ற அடைமொழி நகருடன் சேர்க்கப்பட்டுள்ளது. "மாநகர்" என்று ஊர்களைக் குறிப்பிடும் வழக்கம் பிற்காலப் பாண்டியர் காலத்தில் இருந்திருக்கிறது.[14]
நத்தம்
[தொகு]"நத்தம்" என்பது ஓர் ஊர் இருந்து, அழிந்துபட்ட இடத்தைக் குறிப்பிட வழங்கி வரும் சொல்லாகும். நத்தம், நத்தமேடு, நத்தத்துமேடு என்று அவை சொல்லப்படுகின்றன. முன்பு ஊர் இருந்து அழிந்த இடத்தில், மீண்டும் ஊர் உண்டாகும் பொழுது அவ்வூர்ப்பெயரின் பொதுக்கூறாகவோ, சிறப்புக்கூறாகவோ, "நத்தம்" அமைகின்றது. "நத்தம், புறம்போக்கு" என்பது தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை வழக்காக உள்ளது. குடியிருப்பு இருந்து அழிந்து வெறுமனே கிடக்கும் நிலம் "நத்தம்" என்றும் குடியிருப்பில்லாத, எவருக்கும் உரிமையில்லாத இடம் "புறம்போக்கு" என்றும் இதன்வழி குறிப்பிடப்படுகிறது. நத்துதல் (கெடுதல்) என்னும் வினையடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டிலேயே இச்சொல் ஊரைக் குறிக்கும் அளவில் பொருள் மாற்றம் பெற்றிருக்கிறது.
"வடபுலத்தார் நத்தம் வளர"
என்னும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அடிகளுள் "நத்தம்" என்ற சொல் இப்பொருளில் வந்துள்ளது.[15]
பட்டணம்
[தொகு]பேரூர் என்ற பொருள் இருந்தாலும், உண்மையில் இன்று சிற்றூர்களே "பட்டணம்" எனப் பெயர் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்து ஊர்கள் "பட்டினம்" எனப்படுமென்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். [16] ஆனால் இவ்வரையறை சங்கவிலக்கியத்தில் பெரும்பாலும் தெளிவாக உருப்பெறவில்லை என்கிறார் கி.நாச்சிமுத்து.[17] இவ்வடிவமே காலப்போக்கில் பட்டணம் என்று சொல் நிலையிலும், பொருள் நிலையிலும் மாறியிருக்கிறது. ஊர்களைக் குறிப்பிடும் பொதுக்கூறாகப் பிற்காலப் பாண்டியர் காலத்தில், "பட்டணம்" பயன்பட்டிருக்கிறது.
பதி
[தொகு]மக்கள் வாழ்விடம், உறைவிடம் "பதி" எனப்பட்டது. "பதியெழுவறியாப் பழங்குடிகள்" என்று சிலப்பதிகாரத்தில் இவ்வடிவம் வந்துள்ளது.[18] இவ்வடிவம் அருகியே வந்துள்ளது.
"திருப்பதி" என்ற கூட்டு வடிவமும் வழங்கி வருகின்றது. வைணவத் தலங்களைத் திருப்பதிகள் எனக் குறிப்பிடும் வழக்கத்தையொட்டி பெயரிடப்பட்டுள்ளது.
உதாரணமாக; மதுரை மாவட்டத்திலுள்ள அப்பன் திருப்பதி என்ற ஊரைச் சொல்லலாம்.
பாக்கம்
[தொகு]கடற்கரைக்குப் பக்கத்திலுள்ள ஊர்களைப் பாக்கம் என அழைத்தனர். ஆனால் ஊர் என்பது போலவே பாக்கம் என்றும் வழங்குகின்றனர்.
1)ஆலப்பாக்கம் 8)கவேரிபாக்கம் 2)புதுப்பாக்கம் 9)வடகொடிபாக்கம் 3)நாகல்பாக்கம் 10)எலவளப் பாக்கம் 4)கல்பாக்கம் 11)மேல்பாக்கம் 5)செம்பாக்கம் 12)மாம்பாக்கம் 6)ஏப்பாக்கம் 13)அவரப்பாக்கம் 7) அம்மணம்பாக்கம் 14)கருவம்பாக்கம்
ஆல், ஆத்தி, மா, கடவம், நாகல் ஆகிய மரங்களைக் கொண்டு, ஊருக்குப் பெயர் வைத்துள்ளனர். சமணர்கள், செல்வாக்கால், பெற்ற பெயர் அம்மணம்பாக்கம். அவரைக் கொடியை வைத்து, அவரைப்பாக்கம் அமைதுள்ளது.
பாடி
[தொகு]ஊர்களைக் குறிப்பிட வழங்கிவரும் தொன்மையான வடிவங்களுள் ஒன்று "பாடி" என்பதாகும். இது சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்கள், முல்லை நிலத்து ஊர்கள் "பாடி" எனப்பட்டன.[19] என்கின்றனர். இவ்வரன்முறை பெரும்பாலும் தொடர்ந்து இருந்திருக்கிறது. "பாடி" என்ற பொதுக் கூறு பெற்று முடியும் ஊர்கள் இன்றும் காடு சார்ந்த பகுதிகளிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக சில பாடிகள்; விளங்கம்பாடி. சிறுவாடி
புரம்
[தொகு]குடியிருப்பினைக் குறித்து வரும் சொல் சம்ஸ்கிருதச் சொல் "புரம்" ஆகும். நாட்டின் தலைநகர் "புரம்" எனப்பட்டதாகச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது.[20]
சிங்கபுரம், கபிலபுரம் என்ற இரண்டு ஊர்களைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது.[21] இவை பிற நாட்டு நகரங்களாகும். தமிழ்நாட்டில் "புரம்" என்ற பெயரில் நகரங்கள் எதுவும் அக்காலத்தில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் "புரம்" எனும் பெயரில் ஊர்கள் இருந்துள்ளன. இவை வணிகர்களின் குடியிருப்புகளைக் குறித்து அமைந்துள்ளன.[22] தாதாபுரம் என்ற ஊர் இராஜராசோழன் பெயரால் ஏற்பட்ட ஊர் ஆகும். இராஜராஜபுரமே நாளடைவில் தாதாபுரம் என மருவியது என்பார் முத்து எத்திராசன் அவர்கள். விட்லாபுரம், கிராண்டிபுரம், வைரபுரம் போன்ற பெயரில் ஊர்களும் உள்ளன.
புரி
[தொகு]"புரம்" என்ற பொதுக்கூற்றின் பொருளையே இவ்வடிவமும் கொண்டிருக்கின்றது. இவ்வடிவம் பெரிய ஊர்களையும் இராசதானிகளையும் குறித்து வருமென்று அகராதியும் [23] சூடாமணி நிகண்டும் [24] குறிப்பிட்டாலும், இது சாதாரண ஊர்களின் பெயரில்தான் வந்துள்ளது. இதன் வருகை "புரம்" என்ற வடிவத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும்.
புஞ்சை
[தொகு]புன்செய் நிலங்கள் நிறைந்த இடம். எடுத்துக்காட்டு காட்டுப் புஞ்சை
பூண்டி
[தொகு]குடியிருப்பிடம் "பூண்டி" எனப்படுகிறது. "சூழ்ந்து கொள்ளுதல்" என்னும் வினையடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது.[25] கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் "பூண்டி" என்ற வழக்கு இருந்திருப்பதை, "முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி" என்னும் சுந்தரரின் பாடலடிகள் உணர்த்துகின்றன.[26] சிற்றூர்களைக் குறிப்பிடும் பல சொற்களில் பூண்டி என்பதுவும் ஒன்றெனச் சூடாமணி நிகண்டும் சேந்தன் திவாகரமும் குறிப்பிடுகின்றன. [27]
பொதுக்கூற்று வடிவமாக மட்டுமின்றித் தனி ஊர்ப்பெயராகவும் "பூண்டி" வழங்குகின்றது.
மங்கலம்
[தொகு]"மங்கலம்" என்பது தூய்மை, நிறைவு போன்ற பொருள்களில் வழங்கி, மக்களின் குடியிருப்பினையும் குறிக்கத் தொடங்கியது. "மங்கலம் என்ப மனைமாட்சி" என்பது குறள். இச்சொல் சங்க காலத்திலேயே ஊர்ப்பெயர்களுடன் இணைந்து வந்துள்ளது. கிள்ளிமங்கலம், கொடிமங்கலம் என்னும் ஊர்கள் சங்ககாலத்தில் இருந்திருக்கின்றன.
மக்கள் குடியிருப்பினைக் குறித்தாலும், இடைக்காலத்தில் சிறப்பாகப் பார்ப்பனர்களின் குடியிருப்புக்களே "மங்கலம்" என்று குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் "சதுர்வேதி மங்கலம்" என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[28] இவ்வடிவத்தின் முற்பகுதியாகிய சதுர்வேதி காலப்போக்கில் மறைந்தது. இருக்கு முதலான நான்கு வேதங்களைக் கற்ற பார்ப்பனர் சதுர்வேதி எனப்பட்டார்.
மேடு
[தொகு]மேட்டுப் பாங்கான இடத்திற்கு மேடு எனப் பெயர் வந்துள்ளது. எடுத்துக்காட்டு; அணைமேடு, ஈச்சேரி மேடு, கூனிமேடு,
வலசு
[தொகு]குடியிருப்பிடத்தைக் குறித்து வரும் சொல் "வலசு" ஆகும். இவ்வடிவம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டப் பகுதிகளில் "வலசு" என்ற வடிவம் வழங்கி வருகின்றது. இப்பகுதி மக்கள் அவரவர் தோட்டங்களில் வீடுகளைக் கட்டிக் கொண்டு தனித்தனியே வாழுமிடங்கள் "வலசு" எனப்படுகின்றன. இப்பழக்கத்தையொட்டி இப்பகுதிகளில் "வலசு" என்பது மிகுதியாக வழங்குகிறது. "வலசு" காலப்போக்கில் ஊராக வளர்ச்சியடையும் பொழுது ஊர்ப்பெயரில் "வலசு" நிலைத்து விடுகின்றது.
"வலசை" என்ற வடிவமும் வழங்கி வருகின்றது. இடம்விட்டு இடம் பெயர்ந்து புதிதாகக் குடியேறும் இடங்களுக்கு "வலசை" என்று பெயரிடும் வழக்கம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் (தெலுங்கு, கன்னட மக்களின் குடியேற்றத்திற்குப் பின்பு) வந்திருக்கிறது. வேற்றிடங்களுக்குக் குடிபோவதை "வலசை" என்று அகராதி குறிப்பிடுகின்றது.[29]
வனம்
[தொகு]திந்திரி = புளியமரம், வனம் = காடு. புளியமரங்கள் நிறைந்த ஊராகையால் திந்திரிவனம், திண்டிவனம் எனப் பெயர் வந்தது.
வாடி
[தொகு]"வாடி" என்பது குடியிருப்பிடத்தைக் குறிக்கும் தெலுங்கு வடிவமாகும். அம்மொழியில் உள்ள "வாடா" எனப்திலிருந்து திரிந்த வடிவம் இதுவாகும். தெலுங்குச் சொற்களுடன் "வாடி" இணைந்து வருகின்ரது. "வாடி" என்ற முடியும் ஊர்களில் பெரும்பான்மையாக தெலுங்கு, கன்னட மக்கள் வாழ்ந்திருப்பர் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பர்.
குடியிருப்பிடங்களை மறைமுகமாகச் சுட்டுவன
[தொகு]மறைமுகமாகக் குடியிருப்பிடங்களைச் சுட்டும் பொதுக் கூற்று வடிவங்கள் சொற்பொருள் நிலையில் குடியிருப்பிடங்களைச் சுட்டுவனவாக இல்லை. ஆனால் பயன்பாட்டு நிலையில் இவை ஊர்களைக் குறித்து வரும் ஆகுபெயராகவோ, தழுவு பெயராகவோ செயற்படுகின்றன. சொற்பொருளைத் தெரிந்து கொண்டு, ஊர்ப்பெயர் தோன்றிய பின்னணியையும் புரிந்து கொண்டால்தான் இப்பொதுக்கூறுகள் குறிப்பிடும் உண்மையான காரணத்தை அறிய முடியும். இவை அமைந்த இடங்களோ, சுட்டும் இடங்களோ உட்கருவாக் அமைந்து, இவற்றைச் சுற்றியோ, ஒட்டியோ மக்கட் குடியிருப்புகள் ஏற்பட்டு, ஊர்களாக வளர்ச்சியடையும் பொழுது இவை ஊர்ப்பெயரில் பயன்படத் தொடங்குகின்றன. இனம் கண்டுகொள்ளுதல் என்னும் காரணம் பற்றியே ஊர்ப்பெயர்கள் தோன்றுகின்றன. எனவே கண்ணுக்குத் துலக்கமாகத் தோன்றும். எளிதில் தட்டுப்படும் இயற்கை, செயற்கை சார்ந்த அமைப்புகளைச் சுட்டும் சொற்கள் தழுவு பெயராக ஊர்ப் பெயரைக் குறிப்பிடப் பயன்படுவது இயல்பானது எனலாம். இவ்வாறு அமைந்து வரும் பொதுக்கூறுகளை
- இயற்கையமைப்பை ஒட்டியன
- செயற்கையமைப்பை ஒட்டியன
என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
இயற்கையமைப்பு ஒட்டியன
[தொகு]இயற்கையமைப்பை ஒட்டியமைந்து மறைமுகமாக ஊர்களைச் சுட்டும் வடிவங்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். அவை
- தாவரங்களை ஒட்டியன
- நிலத் தோற்றங்களை ஒட்டியன
- நீரிடங்களை ஒட்டியன
- பயிர் விளைவிடங்களை ஒட்டியன
- விலங்குகளை ஒட்டியன
தாவரங்களை ஒட்டியன
[தொகு]தாவரங்களின் மிகுதி அல்லது அருமை என்னும் காரணங்களால் தாவரப் பெயர்கள் ஊர்ப் பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்திருக்கின்றன. சிறு அளவில் இவை வழங்கின்றன. தாவரமிருக்குமிடத்தைச் சுட்டிய வடிவம், அருகில் தோன்றிய ஊரையும் தழுவு பெயராகக் காலப்போக்கில் குறித்தமையே இவை இவ்வாறு வழங்குவதற்கு அடிப்படை எனலாம். இலுப்பை, கானல், புளி எனும் தாவரப் பெயர்களும், "தளிர்" எனும் தாவர சினைப் பெயரும், "மரம்" எனும் முதற்பெயரும் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.
விலங்குகளை ஒட்டியன
[தொகு]விலங்குகள் அவ்வவ்விடங்களில் இருந்தமையாலும், பிற காரணங்களாலும் அவற்றின் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுகின்றன. கறையான், புலி , மான் என்னும் விலங்குப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாக அமைந்துள்ளன.
நீரிடங்களை ஒட்டியன
[தொகு]"நீரின்றி அமையாது உலகு" என்பதால் ஊர்கள் நீர்வளம் மிக்க பகுதிகளையொட்டியே ஏற்பட்டன. பண்டைய நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளில் தோன்றியுள்ளன என்பது வரலாற்று உண்மை. உணவிற்கும், உடல் தூய்மைக்கும், வேளாண்மைக்கும், ஆடு, மாடு முதலிய வீட்டு விலங்குகளுக்கும் நீர் தேவைப்படுகிறது. எனவே இயற்கையாக நீர்வளம் உள்ளதா என்று பார்த்து மக்கள் குடியேறியிருக்கின்றனர் அல்லது நீர் வசதியை ஏற்படுத்த குளம் , கிணறு போன்ற நீரிடங்களை வெட்டிக் குடியேறியிருக்கின்றனர். நீரிடங்களைச் சுட்டிய வடிவங்கள் தழுவு பெயராக ஊரையும் காலப்போக்கில் சுட்டத் தொடங்கின. அடைப்பு, அணை, ஊருணி (ஊரணி), ஊற்று (ஊத்து), ஏந்தல், ஏரி, ஓடை, கரை, கால், கிணறு, குண்டம், குளம், கேணி, சமுத்திரம், சிறை, சுனை, டேம், தாங்கல், துறை, நதி, ரேவு, படுகை, மடை, வாவி என்ற நீரிடப் பெயர்களும், நீரிடச் சார்புப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூற்று வடிவங்களாக அமைந்துள்ளன.
பயிர் விளைவிடங்களை ஒட்டியன
[தொகு]உழுது உண்ணும் வாழ்க்கை முறையினைத் தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே அறிந்திருக்கின்றனர். இவ்வாறு வேளாண்மை மேற்கொள்வார், நன்செய் ஆயினும், புன்செய் ஆயினும் வயல்களின் நடுவே வீடு கட்டிக் கொண்டு வேளாண்மை செய்யும் வழக்கத்தினால் பயிர் விளைவிடங்களைக் குறிப்பிடும் சொற்கள் தழுவு பெயராக ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக மாறிவிட்டன. எஸ்டேட், காணி, கொம்பு, சோலை, தோட்டம், தொப்பு, பண்ணை, பற்று, வயல் என்றும் பயிர்விளைவிடப் பெயர்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.
நிலத் தோற்றங்களை ஒட்டியன
[தொகு]மலை, காடு, வெட்டவெளி, மேடு, பள்ளம், வழி போன்றவை ஊர்ப்பெயர்களாக அமையக் காரணமாக இருக்கின்றன. நிலமாகிய முதற்பொருளின் வேறுபாடுகளையொட்டி நிலத்தோற்றம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வேறுபடுத்தி அழைக்கப்பட்டு வந்தன என்பதைச் சங்க நூல்கள் காட்டுகின்றன. இவ்வழக்கத்தையொட்டி ஊர்ப்பெயர்களும் நிலத்தோற்றங்களுக்கேற்ப இன்றளவும் வேறுபடுத்தி அழைக்கப்படுகின்றன. கடவு, கட்டை, கல், களம், காடு, கிரி, குண்டு, குழி, குன்றம், சிலம்பு, தேரி, பரப்பு, பள்ளம், பாலை, பாறை, மலை, மேடு, வெளி, வழி என்பன ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக இவ்வழக்கத்தினையொட்டி அமைந்து ஊர்களை வேறுபடுத்துகின்றன.
செயற்கையமைப்பை ஒட்டியன
[தொகு]இயற்கையமைப்பையொட்டியவை ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுவது போன்று கட்டிடங்கள், வணிகமையங்கள் போன்ற செயற்கை அமைப்புகளும் குலப்பெயர்கள், முந்தைய நிகழ்வுகள், முந்தைய ஏற்பாடுகள் போன்றவற்றைக் குறித்து வருமிடங்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைகின்றன.
கட்டிடம் போன்றவற்றை ஒட்டியன
[தொகு]செயற்கையாக உருவாக்கப்படும் கட்டிடம் போன்றவற்றைக் குறித்து வரும் சொற்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன. ஆசிரமம், ஆலை, கொட்டம், கொட்டாரம், கோட்டை, கோயில், சத்திரம், சாவடி, பங்களா, பழஞ்சி, பள்ளி, மடம், மந்தை, ரோடு, வீடு, ஸ்டேசன் ஆகிய வடிவங்கள் ஊர்ப்பெயர்கலின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன.
வணிக மையங்களை ஒட்டியன
[தொகு]வணிக மையங்களான கடை, சந்தை, பேட்டை முதலியவையும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.
குலப்பெயர்களை ஒட்டியன
[தொகு]புறமண உறவுக் கட்டுப்பாடுடைய, அகமண உறவினை விலக்கிய குறிப்பிட்ட மக்களின் குலப்பிரிவுத் தொகுதிகளைக் குறிப்பிடும் கூட்டம், தெரு, வளவு என்பனவும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.
முந்தைய நிகழ்வுகளை ஒட்டியன
[தொகு]முந்தைய காலங்களில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் சொற்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாகப் பயன்படுகின்றன. கால்நடைகளை அடைத்து வைத்திருந்த இடங்களைக் குறிப்பிடும் "தொழு" , "பட்டி" என்பனவும், படைகள் பாடி வீடு போட்டதால் "பாளையம்" என்னும் வடிவமும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன.
முந்தைய ஏற்பாடுகளை ஓட்டியன
[தொகு]ஏதேனும் காரணம் பற்றி உருவாக்கப்படும் ஏற்பாடுகள், திட்டங்கள் போன்றவை சார்ந்து ஊர் தோன்றும் பொழுது அவ்வேற்பாட்டி பெயரையோ, திட்டத்தின் பெயரையோ பொதுக்கூறாகப் பெறுகின்றது. கட்டளை, நாடு, ஸ்கீம் ஆகிய வடிவங்கள் இவ்வாறு வழங்குகின்றன.
பொருள் புலப்படா வடிவங்கள்
[தொகு]ஊர்ப்பெயர்களின் சிறப்புக்கூறுகள் போக எஞ்சியிருக்கும் வடிவங்களில் சில பொதுக்கூறுகள் போல் தோன்றுகின்றன. ஏதேனும் ஒரு வடிவத்திலிருந்து சிதைந்தோ அல்லது மருவியோ இவை உண்டாகியிருக்கலாம். சொற்பொருள் மட்டுமின்றி செயல்நிலையிலும், பின்னணி நிலையிலும் அறிய முடியாமலும் சில ஊர்களின் பெயர்கள் இருக்கின்றன.
ஆதாரம்
[தொகு]- முனைவர் பா.அ.ம.மணிமாறன் எழுதிய மதுரை மாவட்ட ஊர்ப் பெயர்கள் பக்-50 முதல் 102 வரை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.
- ↑ கி.நாச்சிமுத்து, "சங்ககால ஊர்ப்பெயர்கள்", இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற இரண்டாம் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை, பக்-1.
- ↑ Iravatham Mahadevan, "Corpus of Tamil- Brahmi Inscriptions", Seminar on Inscriptions.
- ↑ ஞா.தேவநேயன், "நாகரீகம்", செந்தமிழ்ச்செல்வி -10, ப-301.
- ↑ Town have changed location, moving the name with them. Primitive village may bear merely the tribal name, and shift location with the tribal migartions" -Encyclopedia, Vol.15, p.1161.
- ↑ DED-643, P.57
- ↑ T.Balakrishnan Nair, The proplem of Dravidian Origins - A Linguistic Anthropological and Archaelogical Approach, p-35
- ↑ தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், நூற்பா-18, நச்சினார்க்கினியர் உரை
- ↑ கி.நாச்சிமுத்து, "சங்ககால ஊர்ப்பெயர்கள்", இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற இரண்டாம் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை, பக்-1.
- ↑ சின்.கோதில் மொழியன், "தொல்காப்பியத்தில் சேரி", புலமை-தொகுதி7, பகுதி1, பக்.32
- ↑ K.R.Hanumanathan, Untouchability, p.162
- ↑ கோ.கேசவன், பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, ப-94.
- ↑ கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு, ப.173
- ↑ AER.No.276 of 1929-30
- ↑ Tamil Lexicon p.2149
- ↑ தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், நூற்பா-18, நச்சினார்க்கினியர் உரை
- ↑ கி.நாச்சிமுத்து, "சங்ககால ஊர்ப்பெயர்கள்", இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற இரண்டாம் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.
- ↑ சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப் பாடல்:15
- ↑ தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், நூற்பா-18, நச்சினார்க்கினியர் உரை
- ↑ சூடாமணி நிகண்டு ஐந்தாம் தொகுதி, நூற்பா-36
- ↑ சிலப்பதிகாரம் கட்டுரை, காதை;140.141
- ↑ மா.சந்திரமூர்த்தி, வெ.வேதாசலம், பராக்கிரம பாண்டியபுரம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு
- ↑ Tamil Lexicon, p.2773
- ↑ சூடாமணி நிகண்டு, ஐந்தாம் தொகுதி, நூற்பா-36
- ↑ Tamil Lexicon, p.2830
- ↑ சுந்தரர் தேவாரம், திருமுருகன்பூண்டிப் பதிகம்,1.
- ↑ சூடாமணி நிகண்டும் ஐந்தாம் தொகுதி, நூற்பா-36
- ↑ கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு , ப.209
- ↑ Tamil Lexicon, p.3533