உரும்பிராய்
உரும்பிராய் | |
|---|---|
| நாடு | இலங்கை |
| மாகாணம் | வடக்கு மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலகங்களின் பிரிவு | வலிகாமம் கிழக்கு |
உரும்பிராய் (Urumpirai) இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஓர் ஊராகும். இது, யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மானிப்பாய்-கைதடி வீதியும், இவ்வூரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பிராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பிராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.
பெயர்க்காரணம்
[தொகு]அக்காலத்தில் வழிப்போக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. நிழல் தரு மரங்களுள் ஒன்றான பிராய் (அல்லது பராய்) என்ற பால் மரக்கன்றுகள் தெருவோரங்களில் நிழல் செய்யும் பொருட்டு நாட்டப்பட்டிருந்தன. நன்றாகச் செழித்துப் படர்ந்து வளரக்கூடிய இம்மரத்துக்குப் பெருஞ்சூலி மரம் என்று இன்னொரு பெயருமுண்டு. பெரிய, உயரமான என்பதற்கு உரு என்றும் சொல்வர்[1]. இதனை விட வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. தெருவோரத்தில் நாட்டப்பட்டுவந்த பிராய் மரவரிசையில் எண்களிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அந்தவகையிலே இக்கிராமத்தில் இருபத்தைந்தாவது மரம் நாட்டப்பட்டிருக்கலாம். இருபத்தைந்தாம் பிராய் என்பதனை உ- 2, ரு - 5 – 25ம் பிராய் - உரும்பிராய் என வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.[2]
எல்லைக் கிராமங்கள்
[தொகு]கிழக்கே கோப்பாய் நீர்வேலியும், தெற்கே கோண்டாவிலும் மேற்கே இணுவில் உடுவிலும் வடக்கே ஊரெழுவும், நீர்வேலியும் எல்லைக் கிராமங்களாக உரும்பிராயை அணிசெய்கின்றன. 1990 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 3.3 சதுர மைல் கொண்ட இக்கிராமத்தில் 3753 குடும்பங்களைச் சார்ந்த 13400 பேர் வாழ்கின்றார்கள்.
அதிகமான கிராமங்களில் வயற்பரப்புக் கூடியும், மக்கள் வாழ்பிரதேசம் குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம். உரும்பிராயைப் பொறுத்தவரை மக்கள் குடியிருப்புக்குரிய நிலமே கூடியிருக்கின்றது. மிகுதி நிலமும் செம்மண் செறிந்த கம நிலமாகவே பிரகாசிக்கின்றது. நல்ல நீர்வளத்தைப் பெற்றிருப்பதும் பெருங்கொடை என்றே சொல்லாம் கரந்தன், அன்னுங்கை, யோகபுரம், செல்வபுரம், என்பன உரும்பிராய்ப் பிரதேசத்தில் அடங்கிய குறிச்சிகளுட் சில.
ஒருகாலத்தில் நீர்வேலி கிராமச் சங்க பரிபாலனத்தின் கீழ் நீர்வேலி, உரும்பிராய், ஊரெழுக் கிராமங்கள் அடங்கியிருந்தன. பின்னர் உரும்பிராய், ஊரெழு ஆகிய கிராமங்கள் 1967 ஆம் ஆண்டில் பட்டினசபை நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உபபிரிவாக இயங்கி வருகின்றது.
வேளாண்மை
[தொகு]செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஓர் இடமாகும். உரும்பிராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்குப் புதிய பயிர்களான திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 1970 தொடக்கம் 1980 ம் ஆண்டு வரை வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன. அதை தொடர்ந்து இன்று (2012) வரை இப் பிரதேசத்தில் இது போன்ற மேலும் பல பயிர்கள் வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன.
கோயில்கள்
[தொகு]
உரும்பிராயில் பல்வேறு இந்துக் கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில் என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கே தான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை இலங்கை நீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்ததனால் இவ்வழக்கம் 2012 ம் ஆண்டு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.[3]
உரும்பிராயில் உள்ள சைவாலயங்களின் விபரங்கள் வருமாறு:
உரும்பிராய் ஓடையம்பதி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
இவ்வாலயம் பழமையும் பெருமையும் நிறைந்த ஆலயம். இதன் கருவறையில் கற்பக விநாயகர் கருணை கொண்டு உறைந்திருப்பதால் வேண்டுவார்க்கு வேண்டிய வரங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாலயம் ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் வலிகிழக்குப் பகுதியில் உரும்பிராயில் பலாலி வீதியின் அருகில் அமைந்துள்ளது. மூலமூர்த்தியாக கற்பக விநாயகர் அமைந்துள்ளார். இவ்வாலயம் உரும்பிராய் வாழ் சைவப் பெருமக்களால் மிகப் பழங்காலந்தொட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது. பின்பு இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்பட போர்த்துக்கேயர்கள் சைவக் கோயில்களை இடித்தும், சைவ வழிபாட்டைத் தடுத்தும் வந்ததனால் இவ்வாலயப் பூசைகள் தடுக்கப்பட்டன. பின்பு அந்நியர் ஆட்சியின் கீழ் சைவக் கோயில்கள் அமைக்கவும் பிரதிட்டை செய்யவும் சைவ வழிபாடு செய்யவும் அந்நியர்களால் அனுமதி வழங்கப்பட்ட பின்பு மீண்டும் இவ்வாலயம் அமைக்கும் பணி தொடங்கியது.
கி. 1834ம் ஆண்டு கணபதி ஐயர் என்பவர் மூன்று பரப்புக் காணியில் ஊர்மக்களின் உதவியுடன் கோயிலை உண்டாக்கினார். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் மேற்குப்பகுதிக் காணியையும் அதன் மேற்கே அமைந்த சைவத்தமிழ் வித்தியாலயக் காணியையும் இலங்கை நாத முதலி என்பவர் தம் தர்மசாதனமாக எழுதிக் கொடுத்தார். அன்று தொட்டு இன்றுவரை பல தர்மவான்கள் தோன்றி காலத்துக்கு காலம் வாரிவழங்கி ஊர்மக்களின் உதவியுடன் படிப்படியாக ஆலயம் வளர்ச்சி காணுகின்றது.
ஆலயத்தின் மேற்குப்புறத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் அமைந்தள்ளது. சைவத்தையும் தமிழையும் கல்வியையும் கலைப்பண்பாடுகளையும் வளர்ப்பது இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இப்பாடசாலை உரும்பிராய் இந்துக்கல்லூரியில் இயங்கிப் பின்பு இவ்வாலயத்திற்கு மேற்கில் நிறுவப்பட்டமை வரலாறு ஆகும். கற்பக விநாயகர் ஆலயத்தில் கருவறையுடன் அர்த மண்டபம், மகா மண்டபம், கும்பமண்டபம், தம்ப மண்டபம், கோபுர மண்டபம், வெளி மண்டபம். உள் மண்டபம், வசந்த மண்டபம், மணிக்கூட்டுக் கோபுரம், தென்கோபுரம் முதலானவை அமைந்து வழிபாட்டுக்கு மிகவும் வசதிகள் கொண்டுள்ளன. பரிவார மூர்த்திகளின் ஆலயங்களில் சுப்பிரமணியர், நடேசர், மகாலட்சுமி, சந்தானகோபாலர், உள்வைரவர், தேரடிவைரவர், தட்சணாமூர்த்தி, சண்டேஸ்வரர், காளிஅம்மன் என்போர் அமைந்து அருளாட்சி செய்கின்றனர். மேலும் பிள்ளையாருக்கான தேர், முருகன்தேர், மஞ்சம், கைலாயவாகனம், சப்பறம் என்பன அமைந்து சைவ சமய உண்மைகளையும் பக்தியையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாலயம் உரும்பிராய்க் கிராமத்தில் தனித்துவ இடத்தைப் பெற்று மக்களின் சைவத்தமிழ் எழுச்சிக்கு உந்துசக்தி ஆகின்றது. கோயில் சிறக்க குடிகள் சிறப்புறுவதற்குச் சான்று ஆகியது.
உரும்பிராய் மேற்கு பரத்தைப்புலம் பிள்ளையார் ஆலயம்
இவ்வாலயம் கி.பி 18ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து உரும்பிராய் மக்களால் பூசிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாலயம் உரும்பிராய் மேற்கில் இணுவில் கிராமத்தை அண்டிய பகுதியில் மூன்று கோயிலடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.
முன்னைய அரசன் கருணாகரத் தொண்டமான் என்பவரால் வ்வாலயம் பூசிக்கப்பட்டது. சரித்திர முக்கியத்தவம் வாய்ந்த ஆலயமாகும். இதன் பழைமையை எடுத்துக் கூறும் முகமாக இங்கு இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் கல்வெட்டுக்கள் உள்ள ஆலயம் எனும் பெருமை கொண்டுள்ளது.
உரும்பிராயில் மிக ஆதிகாலத்தில் எழுந்த முதலாவது பிள்ளையார் ஆலயம் எனும் பெருமை உடையது. உரும்பிராயில் உள்ள எல்லா மக்களாலும் பாகுபாடு இன்றி வழிபடப்பட்டு வருதலும் சிறப்பம்சம் ஆகும். அயல் ஊர்களில் இருந்தும் சகல மக்களும் வருகைதந்து விநாயகரை வணங்கும் மரபினை உடையது.
மூர்த்தி, தலம், தீர்த்தம், கோபுரம், கோட்டம் என்பவற்றுடன் மணி மண்டபமும் கொண்டு திகழ்கின்றது. பத்து நாட்கள் கொண்ட பெருந்திருவிழா ஆவணிச் சதுர்த்தியில் ஆரம்பித்து நடைபெறுகின்றன. மகோற்சவத் திருவிழாவில் தேர்ப்பவனி அருளாட்சி நிறைந்ததாகும். பல மக்களின் வழிபாட்டை எடுத்துக் காட்டுவதும் ஆகும்.
ஆலய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளதன் படி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த தமிழரசன் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்தில் தோன்றிய ஆலயம் இது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாலயத்தில் அரசமரத்தின் கீழ் பிள்ளையார், லிங்கம் தோன்றி இருந்ததாகவும் அதன் காலம் யாரும் அறியாதது என்றும் கூறுவர். இவ்வாலய வழியால் வந்த கூழங்கைச் சக்கரவர்த்தி இந்த லிங்கத்தை கண்டு வணங்கி இன்பம் பெற்று அந்த இடத்தில் செங்கற்களினால் ஆலயம் அமைத்தார் என்றும் கூறுவர். அதன் பின்பு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இவ்வாலயத்தை உடைத்தனர் என்றும் கூறுவர். அதன் பின்பு கருணாகர ஐயர் ஆலயத்தைப் புதுப்பித்து பூசைகள் செய்து நிர்மாணம் செய்துள்ளார். அதனால் கருணாகரப் பிள்ளையார் என்னும் பெயர் பெற்று விளங்குகின்றது. கருணாகர ஐயரின் வழித்தோன்றல்கள் தலைமுறை தலைமுறையாக இன்றுவரை பூசைகளையும், திருவிழாக்களையும் செய்துகொண்டிருப்பது இன்றும் காணக்கூடிய ஒன்றாகும். இவ்வாலயத்தின் மூலம் உரும்பிராய் மக்களின் விநாயக பக்தியும் சைவ ஒழுக்கமும் தமிழ்ப்பண்பும் மேலோங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயச் சூழலில் வசிப்போரும், அயற் கிராமத்தவர்களும் சைவத் தமிழ் மேம்பாட்டில் உயர்ந்திருப்பது இக் காலத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
உரும்பிராய் பர்வதவர்த்தினி அம்மன் கோயில்
இவ்வாலயம் உரும்பிராய் மேற்கில் மூன்றுகோயிலடியில் அமைந்துள்ளது. ஈழத்தில் சக்திகிரீடமாகத் திகழ்கின்றது. பழமையும், பெருமையும் வாய்ந்தது. நித்திய நைமித்திய பூசைகள் வரன்முறையாக நடைபெறும் ஆலயமாகும். இவ்வாலயத்தை தரிசிப்பவர்கள் பேரின்பம் பெறுவார்கள். மூலமூர்த்தியான பர்வதவர்த்தினி நோய்தீர்க்கும் தாயாக விளங்குகிறாள். அவளின் ஆலயம் தோன்றியமை அநாதியானது. யாரும் அறியாதது. கருத்துக்கு எட்டாதது.
இலங்கையில் கண்ணகை அம்மன் வரலாறு கூறும் செய்யுளில் "உரும்பிராயில் உறைந்தவள்” என்னும் குறிப்புக் காணப்படுவது சிறப்பம்சமாகும்.
சரித்திரவியலாளரின் கண்ணுக்கு எட்டாத காலத்தில் இருந்து வில்வ மரத்தடியில் பாம்புகளை அணிந்த வண்ணம் அன்னை தோன்றுகின்றாள் அன்னையின் மடியிலும் பாம்புகள் காட்சி தருகின்றன. வில்வ மரத்தின் வேரில் தோற்றமளித்த பாம்புகளுக்குப் பால்வார்த்து வழிபட்டவர் விநாசித்தம்பி என்பவர் ஆவார். வில்வமர வேர்கள் வழியாக முளைத்த பற்றையை தெற்கு விதியில் இன்றும் காணலாம். வில்வமரத்தடியில் அன்னை அடிக்கடி பக்தர்களுக்கு அருளாட்சி கொடுத்த வண்ணம் அற்புதம் செய்கின்றாள்.
வினாசித்தம்பியின் கனவிலே தோன்றி ஆலயம் அமைத்து ஆகம முறைப்படி வழிபாடு செய்யுமாறு அன்னை கட்டளையை ஆரம்பகாலத்தில் இட்டதன் காரணத்தினால் சிறு குடிலாக ஆலயம் அமைக்கப்பட்டது. வரணியில் இருந்து பிராமணர்களை அழைத்துப் பூசைகள் செய்விக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
1930ஆம் ஆண்டில் இருந்து ஸ்தூபியும் மண்டபங்களும் அமைக்கப்பட்டன. 1948ம் ஆண்டு சித்திரை மாதத்தில் முதலாவது மகோற்சவம் நடைபெற்றது. சித்திரைப் பௌர்ணமியில் தீர்த்தத் திருவிழா நடைபெற்றது. 1963ம் ஆண்டின் பின் மகோற்சவம் வைகாசி மாதத்துப் பௌர்ணமிக்கு மாற்றப்பட்டது. 10 நாடகள் திருவிழா நடைபெறுகின்றன. பங்குனித்திங்கள் பொங்கல் உற்சவம் சிறப்பு விழாக்கள் ஆகும். ஆலமரத்தடியில் அதிகாலை வேளை தாளலயம் தப்பாமல் கேட்கும் ஓசையும், முரசம் ஒலிக்கும் ஓசையும் அற்புதமானவை. வெண்கலக் கலசம் வைத்து ஊர்மக்கள் பொங்கிப் படைக்கும் காட்சி தனித்துவம் ஆனவை. பெருந்தொகையான நிலப்பரப்புக்களை கொண்டுள்ள இவ்வாலயம் அப்பிரதேச மக்களின் கல்வி கலாசாரம் ஒழுக்கம் மற்றும் சைவப்பழக்கம், தமிழ்மொழிப் பண்பாடு என்பவற்றுக்கு பெருந்துணையாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். உரும்பிராய் மேற்கில் மூன்று கோயிலடி எனும் இடத்தில் அமைந்துள்ள இணுவில், கோண்டாவில் மக்களை ஒன்றிணைக்கின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம், தேர், கைலாயவாகனம், சப்பறம் என மிக விமரிசைகள் கொண்டு திகழ்கின்றது. உரும்பிராயில் மூத்த தாய்த்தெய்வக் கோயிலாகக் கொண்டு பர்வதவர்த்தினி வெள்ளைக் கிழவியாக வந்து ஆரம்பத்தில் தன்னை ஆதரிக்குமாறு கூறியமை யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த இடம் இன்று ஆலயமாகும் அதன் மூலம் உரும்பிராய்க் கிராமம் பல்வேறு துறைகளிலும் சைவத்தமிழ் மேம்பாட்டிலும் முன்னணியில் திகழ்வதற்கும் இந்த ஆலய வழிபாடு பிரதான இடத்தைப் பெறுகின்றது.
உரும்பிராய் மேற்கு முருகன் ஆலயம்
இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு முருகன் சிதம்பர சுப்பிரமணியராகக் கருவறையில் காட்சி கொடுக்கின்றார். தென் இலங்கையில் கதிர்காமத்தில் முருகனுக்குத் திருவிழா எடுக்கின்ற போதே உரும்பிராயில் முருகனுக்கும் திருவிழா எடுக்கின்றனர். கதிர்காமத்தில் நடைபெறுவது போன்றே ஆடிவேல் உற்சவம், தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா கைலாசவாகனம், சப்பறம் ஆகியவை இடம்பெறுகின்ற சிறப்புக்களை இவ்வூர் மக்கள் பெறுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் மூன்று கோயிலடியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் உரும்பிராயில் ஒரே ஒரு முருகன் ஆலயம் எனும் சிறப்புடையது. வருடத்திலே இரண்டு மகோற்சவங்கள் நடைபெறுகின்ற ஆலயம் என்பது இதன் விசேட சிறப்பம்சமாகும். தைப்பூசத்திலே தீர்த்தம் அமைந்த 12 நாட்கள் கொண்ட உற்சவம் முதன்மையானது. அது போன்று திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தம் அமைந்த 16 நாட்கள் கொண்ட அலங்கார உற்சவம் இரண்டாவதாகும். இந்த உற்சவங்கள் மூலம் உரும்பிராய் மக்களுக்கு இறை உணர்வினை ஊட்டுகின்றது.
அதன் வரலாற்று அடிப்படையில் மரத்தின்கீழ் சிறு கொட்டிலாக அமைந்திருந்தது. இன்று பெரும் கோயிலாகத் திகழ்கின்றது. உரும்பிராய் பரத்தைப்புலத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் தோற்றமானது மிகவும் அநாதியானது. ஆரம்பத்தில் சிறு முகட்டுக் கோயிலாக இருந்தது. இன்று உட்பிரகாரம் முழுவதும் மூடு மண்டபங்கள், அழகான முகப்பு மண்டபம், சித்திரத்தேர் கொண்டு அடியவர்களை வாழவைக்கின்றது. அந்தணர்களால் ஆகமமுறையில் மூன்று காலப் பூசைகள் இடம்பெறுகின்ற இவ்வாலய வரலாற்றில் உரும்பிராயின் சைவமேம்பாடு விளக்கப் பெறுகின்றது. அதாவது கல்வி, கேள்விகளில் சிறந்த கற்றறிந்த பெரியோர்கள் உரும்பிராயில் வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றாக உரும்பிராய்க் கிராமத்தையும், தமிழர் பெருமையும் சர்வதேச ரீதியில் துலங்கச் செய்த உரும்பிராய்ப் பஞ்சலிங்கங்கள் இவ்வாலயத்திற்கு தொண்டாற்றியுள்ளார்கள். அவர்கள் வைத்தியர் பஞ்சலிங்கம், நீதியரசர் நாகலிங்கம், அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம், சட்டமேதை தியாகலிங்கம், கலாநிதி அமிர்தலிங்கம் ஆகிய சகோதரர் ஐவர் இவ்வாலய வளர்ச்சியில் பங்கேற்றவர்களாவர். தற்போதைய ஆலயம் 1954ம் அண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின்பு விளம்பி வருடம் பங்குனிமாதம் 13ம் நாள் (26.03.1958) புதன்கிழமை ரோகினி நட்சத்திரத்தில் தியாகலிங்கம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1979ம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து திருப்பணி ஆரம்பமானது. ரௌத்திரி வருடம் சித்திரை மாதம் 18ம் நாள் (30.04.1980) புதன் கிழமை சுவாதி நட்சத்திரத்தில் இரண்டாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது. முன்றாவது கும்பாபிஷேகம் 1992ம் ஆண்டு நடைபெற்றது. அவ்வருடம் சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. ஆலய உற்சவ காலங்களில் சமயச் சொற்பொழிவுகள், சமய அறிவுப் போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன. பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படு கின்றன. வருடாந்த மகோற்சவங்களோடு சிறப்பு உற்சவங்களும், மாதப் பிறப்பு, மாதச்சங்கிராந்தி தீர்த்தமும் மாதந்தோறும் கார்த்திகை உற்சவமும், சித்திராப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணிச் சதுர்த்தி, சனிக்கிழமை விரதங்கள், வெள்ளிக்கிழமை விரதங்கள், கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை கூட்டுப்பிரார்த்தனை மூலம் அடியவர்களைச் சிறப்புற மேம்படுத்துகின்றது. அதிக நிலவளம் கொண்ட ஆலயம் உரும்பிராயில் சைவமும் தமிழும் நின்று நிலைக்கக் காரணமாக அமைந்துள்ளது.
உரும்பிராய் சிவன் ஆலயம்
உரும்பிராய் பலாலி வீதியியை அண்மித்து இவ்வாலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயிலாகத் திகழ்கின்றது. இது தனிப்பட்டவரின் பரம்பரையினரால் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. சிவன் ஆலயம் என்பதனால் சைவப் பண்பாடுகள் இங்கே முழுமையாகப் பேணப்படுகின்றது.
சிவபூதராஜர் ஆலயம்
இவ்வாலயம் உரும்பிராய் கோப்பாய் நீர்வேலி ஆகிய மூன்று கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். கருவறையில் சிவமூர்தமாகிய சிவபூதராயன் அமைந்துள்ளார். வருடந்தோறும் பெருந்திருவிழாவில் தேர்த்திரவிழாவும், தீர்த்த திருவிழாவும் அன்பர்களின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மூன்று கிராம மக்களும் ஒன்று கூடுவதனால் சைவப் பாரம்பரியம் மேம்பாடு அடைய வசதியாகவுள்ளது.
காமாட்சி அம்பாள் ஆலயம் (காளிகோயில்)
இது மிகப் பழமையான ஆலயம் தனியாருக்குச் சொந்தமானது தற்போது பெருந்திரளான பொது மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பெருந்திருவிழாவில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் திருவருளைப் பெறுவது அற்புதமான நிகழ்வு ஆகும்.
பேச்சியம்மன் ஆலயம்
இது உரும்பிராய் வடக்கில் உள்ளது. இது மகா மாரியம்மன் என்னும் பெயருடன் விளங்குகின்றது. வருடந்தோறும் இவ்வாலயத்திலிருந்து கிராம அலுவலர் அதாவது வீதிப் பவனி வந்து அம்மன் மக்களுக்கு அருள் வழங்குவது பழைய மரபாகும். கிராம ஊர்வலத்தில் ஊர்மக்கள் யாவரும் ஈடுபடுதல், சாத்துப்படி சாத்தல் என்பன தெய்வீக அனுபவங்களாகும். ஊர்மக்களை அருள் வெள்ளத்தில் திளைக்கச் செய்பவள் மாரியம்மன் ஆகும். இவ்வாலயப் பெருந்திருவிழா மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டையும் அன்பையும் வெளிப்படுத்தி நிற்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ஆதிபராசக்தி அம்மன் ஆலயம்
இவ்வாலயம் உரும்பிராய் வடக்கில் அமைந்துள்ளது. சின்னக் காளி என்னும் பெருமை கொண்டுள்ளது. இங்கு பழமையான வழிபாட்டு முறைகள் பேணப்படுகின்றன. கிராம மக்களின் துன்ப துயரங்களை நீக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
நாகபூஷணி அம்மன் ஆலயம்
இது உரும்பிராய் மேற்கில் அமைந்துள்ளது. வருடந்தோறும் பெருந்திருவிழாவைக் கொண்டுள்ளன. அவை பத்து நாட்கள் கொண்ட அலங்காரத் திருவிழாவாக அமைந்திருக்கின்றது. பொதுக் கோயில் எனும் நிலையில் நிர்வகிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருட மகா சிவராத்திரி தினங்களும் பக்தியும் வழிபாடும் நிறைந்ததாயுள்ளது. அடியவர்களின் சமயப் பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்களை நன்கு வளர்ப்பதற்கு இவ்வாலயம் உதவுகின்றது.
ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்
இவ்வாலயம் உரும்பிராய் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கி அரைக் கிலோ மீற்றர் தொலைவில் கோப்பாய் வீதியில் அமைந்துள்ளது. இது உரும்பிராயின் காவல்த் தெய்வமாக அமைந்த வைரவப் பெருமானை கருவறையிற் கொண்டுள்ளது. மிகவும் பழமையான ஆலயம். சமயப் பணியோடு சமூகப்பணிகளையும் செய்து மக்களுக்கு வழிகாட்டுகின்றது. சிறந்த நிருவாகக் கட்டமைப்பைக் கொண்டு பணி செய்து வருகின்றது. அயற்கிராம மக்கள் தினந்தோறும் வருகை தந்து வழிபட்டு நோய் நொடிகளைத் தீர்க்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. யாழ்ப்பாணத்து மக்களால் மிகவும் அறியப்பட்ட ஆலயமாகவும் திகழ்கின்றது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் நடைபெறுவதும் புரட்டாதிச் சனி நாட்களில் ஊர்மக்கள் யாவரும் எள்ளெண்ணெய் எரிப்பதும். விபூதி போட்டு நூல்கட்டி நோய் தீர்த்தலும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். சிவராத்திரி உற்சவம் முக்கியத்துவம் உடையது. பண்ணிசை, சமயஅறிவுப் போட்டி, சொற்பொழிவுகள், பரிசளிப்புகள் போன்றவை சகல மக்களையும் ஒன்றிணைக்கின்றது. அலங்கார உற்சவம் 25 நாட்கள் நடைபெறுவதும் அக்காலத்தில் விஷேட அபிஷேகமும் இவ்வாலயச் சிறப்பை மேலும் வலுவாக்குகிறது. ஊர்மக்களோடு பின்னிப் பிணைந்த ஆலயம் சைவப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கின்றது.
காட்டு வைரவர் ஆலயம்
இது உரும்பிராய் கிழக்கில் அமைந்துள்ளது. இது மிகவும் பழைமையான வணக்க முறையான வேள்வி முறையினைக் கொண்டிருக்கின்றது. அதனால் யாழ். மாவட்ட மக்களாலும் இலங்கையின் வெவ்வேறு பிரதேச மக்களாலும் நன்கு அறியப்பட்ட ஆலயமாகவும் திகழ்கின்றது.
வேம்படி வைரவர் ஆலயம்
இது உரும்பிராய் வடக்கில் எல்லைத் தெய்வமாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் காவல்த்தெய்வமாக பழங்காலந் தொட்டு அருள் புரிவது குறிப்பிடத்தக்கது.
இராசாட்டி அண்ணமார் ஆலயம்
அண்ணமார் ஆலயங்கள் உரும்பிராய்ப் பிரதேசத்திற்குச் சிறப்பான ஆலயங்களாகத் திகழ்கின்றன. உரும்பிராயில் மட்டும் மூன்று அண்ணமார் ஆலயங்கள் காணப்படுகின்றன. உரும்பிராய் வடக்கில் அமைந்த இராசாட்டி அண்ணமார் ஆலயம் மிகவும் பழமையானது. சிவமூர்த்தமாக அண்ணமாரைக் கொண்டு வழிபாடு செய்யப்படுகின்றது. சைவ விழாக்களும் நடைபெறுகின்றன. இவ்வாலயத்திலுள்ள தலவிருட்சம் உரும்பிராய் சைவசமயத் தவரின் தொன்மையை எடுத்தக் காட்டுகின்றது. சுமார் 300 வருடங்கள் பழமையுடையது. அங்குள்ள விருட்சம் என்ன மரம் என்பது யாராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இலங்கையில் திருக்கேதீஸ் வரத்திலும் தீவகத்திலும் உரும்பிராயிலுமாக 3 மரங்கள் உள்ளன. அதன் சுற்றளவும், பரந்த வளர்ச்சியும் பார்ப்போரை அதிசயிக்க வைக்கின்றது. இவ் விருட்சத்தின் பெயர் என்னவென்று தெரியாது. அதனால் ஆயுள்மரம், வேங்கைமரம், என்றும் மக்கள் அழைக்கின்றனர். மக்களின் ஒற்றுமைக்கும் பண்பாட்டிற்கும் அடிகோலிய ஆலயமாகத் திகழ்கின்றது. இதைவிட உரும்பிராய் மறக்கணாவில் ஒரு அண்ணமார் ஆலயம் உண்டு. உரும்பிராய் செல்வபுரத்திலும் அண்ணமார் கோயில் உண்டு.
இராசாட்டி அண்ணமார் ஆலயம் தற்போது திருவாளர் புஸ்பநாதன் அவர்களின் தலைமையைக் கொண்ட நிர்வாக சபையினரால் நிர்வகிக்கப்படுகிறது. பிரம்மஸ்ரீ ஜெகநாத ஐயர் நித்திய பூசகராக உள்ளார். சைவப் பாரம்பரியத்தில் பூசைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகம் விகிர்திவருடம் சித்திரைமாதம் அத்த நட்சத்திரத்தில் நடைபெற்றது. அதாவது 26.04.2010ம் ஆண்டு இவ்வாலய வரலாற்றின் படி மூன்று சகோதரர்கள் காட்டு வழியில் போகும் போது விதிவசத்தால் தனித்துப் போய்விட்டார்கள். இளையவர் அண்ணமாரே அண்ணமாரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தி அழுதார். சிவபெருமான் அண்ணன்மாராய் வந்து காப்பாற்றினார். அவ்வாறு அவர்கள் ஒன்ற சேர்ந்து காலைவேளை உரையாடியபோது தனித்தனியாக ஒவ்வொருவரையும் சிவனார் காப்பாற்றியுள்ளார் எனும் உண்மை புரிந்தது. அந்த மூவரும் பேறு பெற்றவர்கள் என்பதனால் அவர்கள் மூவருக்கும் ஆலயம் அமைந்தது. அதுவே அண்ணமாரின் வரலாறு ஆகும். அதனால் ஆலயத்தில் சிவவழிபாடும் தொடர்கிறது.இவ்வாலயத்தில் வருடாந்த கும்பாபிஷேகம், திருவெம்பாவை, சரஸ்வதிபூசை, சித்திரைப்பௌர்ணமி, மாதக் கடைசி வெள்ளிக்கிழமைப் பூசை என்பன சிறப்பாக இடம்பெறுகின்றது.
பொது மக்கள் பொங்கல் செய்து படைப்பது அற்புதமானது. 1990ம் ஆண்டின் பின் ஒழுங்கமைந்த நிர்வாகம் உண்டு. தலைவர் உட்பட 11 உறுப்பினர்கள் கொண்ட சபையினர் நிர்வகிக்கின்றனர். குருக்களைக் கொண்டு பூசை நடைபெறுகின்றது. ஐயருக்கு சம்பளத்துடன் 2500.00 ரூபா சேர்த்து மாத உபயகாரர் வழங்குகிறார்கள். நிர்வாகம் ரூபா 1000.00 சம்பளம் வழங்குகின்றது. மக்களின் சேவை நிறைவேற்றல் சிறந்த பூசையாகும். நவராத்திரி உபயகாரர்கள் உண்டு ஆலயச் சூழலில் 36 குடும்பங்கள் ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். பொதுக் கோயிலாக அமைந்துள்ளது. கோயிற்காணி பொதுவானது. அது 2 பரப்பளவுள்ளது. ஆலயத்தை அரசாங்கத்தில் தற்போது பதிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 2015ம் ஆண்டு கலாசார அமைச்சில் பதிவு பெற்றுள்ளது.
ஆலயத்தில் காணப்படும் அற்புதம் அதிசயமானது. அதாவது இரவில் யாரும் ஆலயத்தில் நிற்கமுடியாது. காவல் தெய்வமாகக் காட்சிதருகின்றார். ஒரு தாயார் தனது குழந்தை இரவு காணாது போனது பற்றிக் கலங்கி எங்கும் தேடினார் குழந்தையைக் காணவில்லை. அண்ணமாரே நீதான் என்னிடம் என்குழந்தையைச் சேர்க்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கண் உறங்கி விட்டார். என்ன அதிசயம் அவளின் கனவில் அண்ணமார் தோன்றி குழந்தை இருக்கும் இடத்தைக் காட்டி குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தார். மக்கள் ஆச்சரியமடைந்தனர். அண்ணமாரின் அற்புதத்தை வியந்தனர். இவ்வாலயத் தின் பின் வீதியில் உள்ள மரம்தான் ஆலயம். மரத்தின் கீழ் நிலம் ஒவ்வொரு நாளும் மத்தியானம்வரை ஈரமாகக் காணப்படுகின்றது. மாலைவேளையில் உலர்ந்துவிடும். இவ் அற்புதம் இன்னும் தொடர்கிறது.
ஆலயத்தில் பொங்கல் நடைபெறுகின்ற போது பாம்புகள் வருகின்றன. விவசாயத்தில் முதலில் விளைந்த விளை பொருடகள் அண்ணமாருக்கு வழங்கப்படுகின்றது. உரும்பிராய் வடக்கு மக்களின் குல தெய்வமாகவும் அண்ணமார் திகழ்கின்றார். கும்பமூலம் சுவாமி சுற்றப்படகின்றது. விக்கிரகங்கள், எழுந்தருளிகள் இல்லை. மரம் முக்கியமானது. முன்னோர் மர அருகில் சூலம் வைத்துள்ளனர். அது இன்றும் உள்ளது. பழங்காலத்தில் இரவுப் பூசையும் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்தும் கலைஞர்கள் வந்தனர். மானம்பூ உற்சவமும் நடைபெற்றுள்ளது. திரு. ஆனந்தராசா அதிபர் அவர்கள் பிரசங்கங்களை திகழ்த்தியிருக்கிறார். இவ்விதமாக உரும்பிராய் மக்களின் விவசாயம் பெருகவும், சைவசமயம் ஓங்கவும், நோய் நொடி அகலவும் பழமை பேணவும் அண்ணமார் ஆலய வழிபாடுகள் உதவி நிற்கின்றன எனலாம்.
உரும்பிராய் வடக்கு காமாட்சி அம்மன் கோயில்
இவ்வாலயம் உரும்பிராய் வடக்கில் அமைந்துள்ளது. பெருந்தொகையான பக்தர்களின் வழிபாட்டிற்கு முக்கிய ஆலயமாகத் திகழ்கின்றது. தங்கம்மா கோயில் என்றும் அடியவர்கள் குறிப்பிடுகின்றனர். நோய் தீர்ப்பவளாகக் காமாட்சி விளங்குகிறாள். ஆலயத்தில் கலையாட்டம் நிகழ்வதில்லை. சரஸ்வதி பூசை, திருவெம்பாவைப் பூசைகள் மிகவும் மக்கள் நிறைந்த விழாக்களாக அமைந்துள்ளன.
முன்னோர்கள் காணி ஒன்றை காமாட்சிக்கு என்று ஒதுக்கினார்கள். அக்காணியில் நாகங்கள் அடிக்கடி வந்து காட்சிதரும். அந்தக் காணியில் காமாட்சி கோயில் உருவானது.
நாகராசா தங்கம்மா (79வயது) அவர்கள் கோயிலைக் கட்டுவித்தார். அவரின் பெற்றோர் காமாட்சியை ஆதரித்தனர். அதனைத் தங்கம்மா இன்றுவரை தொடருகின்றார்.
வேம்பு தலவிருட்சமாக உள்ளது. மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகம் அமைந்துள்ளது. பரிவாரத் தெய்வங்களாக 11 மூர்த்திகள் காணப்படுகின்றன. இற்றைக்கு 15 வருடங்கள் முடிகின்றன ஆலயத்தை கட்டி எழுப்பிபுகின்ற குடும்பத்தவர் கூறுகின்றனர்.
உரும்பிராய் மக்களும் அயற்கிராம மக்களும் வழிபடுவோராக உள்ளனர். அவர்கள் பொங்கல் விழாக்கள் செய்து படைத்து வழிபட்டு ஆலயத்துக்குப் பெரும் பண உதவியும் செய்கின்றார்கள். அதனால் அம்மனுக்கு நிறைவான சொத்துக்களும் நிதியும் இருப்பில் காணப்படுகின்றது.
பொதுமக்களின் நேர்திக்கடன்கள் நிறைவாக செய்யப்படுகின்றன, திருமண நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. வெளிநாடுகளுக்குப் பக்தர்கள் சென்று பணம் திரட்டுகின்றார்கள். குழந்தைச் செல்வங்களைப் பெறுகின்றனர். ஆலயப் பூசையினை தங்கம்மாவும் அவருடைய மகளும் நிறைவேற்றுகிறார்கள். தங்கம்மா பிரதான பூசகராக உள்ளார்.
ஆலயத்தில் அற்புதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பிடக்கூடிய ஒன்று உள்ளது. ஆலயத்திற்குச் சொந்தமான ஒலிபெருக்கிகளை ஒருவர் திருடியிருந்தார் அவருக்கு பலதுன்பங்களைக் காமாட்சி கொடுத்தாள். அதனால் திருட்டுப் பொருளை ஆலயத்தில் விட்டுச் சென்றனர். அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். பின்பு அன்னையிடம் சரணடைந்தார்.
அம்பாளுக்கு என்று வங்கியில் தனிக்கணக்கு வைத்திருக்கிறார்கள். அது பிற்காலத்தில் ஆலயத்துக்கு ஐயரை வைத்துப் பூசை செய்விக்க உதவும்.
சரஸ்வதி பூசை, திருவெம்பாவை, வைகாசிப் பொங்கல், ஆனி உத்தரம் என்பவை அடியார்களால் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் ஒருவேளைப் பூசை நடைபெறுகின்றது (மதியத்தில் இடம்பெறும்). ஆலயத்தில் பார்வை பார்த்து நூல் கட்டிவிடுதல் மூலம் அடியாரின் குறைகள் தீர்க்கப்படுகின்றன. மூலஸ்தானமும். ஒரு மண்டபமும் ஒரு அறையும் கொண்ட ஆலயம். தேவாரம் இசைத்து விபூதி கொடுத்தல் விஷேட அம்சமாகும். அண்ணமார் வழிபாடும் இங்கு இடம்பெறும். தங்கம்மா 40 வருடங்களுக்கு மேலாக இவ்வாலயத்தை ஆதரிக்கின்றார். அவரின் பின்பு அவரின் வாரிசுகளும், பரம்பரையினரும் ஆதரிப்பார்கள்.
இவ்விதமாகக் காமாட்சி அம்மன் ஆலயம் உரும்பிராய் மக்களின் வாழ்வோடு இணைந்து அவர்களின் முன்னேற்றத்திற்கும் சமயப் பழக்க வழக்கங்களுக்கும் பெருந்துணை செய்து வலுவூட்டுவது இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது.
கிருஷ்ணன் ஆலயம்
உரும்பிராயின் கிழக்கெல்லையில் கோப்பாய் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இது கோப்பாய் கிருஷ்ணன் ஆலயம் என்ற பிரபல்யம் பெற்றாலும் உரும்பிராயின் கிழக்குப்புற மக்களின் வழிபாட்டில் பெரிதும் பங்கு வகிக்கின்றது. இது தனியாரின் ஆலயம் இலங்கையில் தமிழ் மொழியில் பூசைகள் நிகழ்கின்ற ஆலயமாகும். சைவப் பாரம்பரியமும் வைஷ்ணவப் பாரம்பரியமும் இடம்பெறுகின்றன. சிறந்த மரங்களின் சோலையில் அமைந்து உரும்பிராயமக்களையும் கோப்பாய் மக்களையும் சைவ வைஷ்ணவ வழிபாட்டில் ஒன்றிணைக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
உரும்பிராயில் சைவத்தையும், தமிழையும், சாந்தி சமாதானத்தையும் வளர்ப்பதில் முன்னணிப் பங்கு வகிப்பவைகளாக சைவ ஆலயங்களும், சைவப்பாடசாலைகளும் திகழ்கின்றன. மக்கள் தொடர்ந்து அவற்றின் வழியில் நின்று மேம்பாடு அடைவார்களாக.
ஆதாரம்: கற்பகம்: யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் நூற்றாண்டு விழா மலர் (1915-2015)
பாடசாலைகள்
[தொகு]இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பிராய் இந்துக் கல்லூரியாகும். இது பலாலி வீதியில் உரும்பிராய்ச் சந்தியிலிருந்து ஊரெழுவிற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஆகிய பாடசாலைகளும் ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலைகளாகக் காணப்படுகின்றன.
சமயப் பின்னணி
[தொகு]பெரும்பான்மையானவர்கள் சைவசமயத்தையே சார்ந்தவர்கள் பிற்காலத்திற் சைவசமயத்தினரில் ஒரு பகுதியினர் மதமாற்றத்துக்கு உட்பட்டார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் உறோமன் கத்தோலிக்க சமயத்தையும் அதற்கு முன் ஒருசாரார் புரட்டஸதாந்து சமயத்தையும் (அங்கிலிக்கன் சபை) தழுவிக் கொண்டனர். உறோமன் கத்தோலிக்க சமயநெறி 1916 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் பரப்பப்பட்டது.
உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்
[தொகு]- செ. நாகலிங்கம், எழுத்தாளர்
- செ. சுந்தரலிங்கம், அரசியல்வாதி
- பொன். சிவகுமாரன், போராளி
- சோ. கிருஷ்ணராஜா, பேராசிரியர்
- அருண் விஜயராணி, எழுத்தாளர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urum-pirāy, Vēm-pirāy, Kaṭṭaip-pirāy, Vēlam-pirāy, Pirāyaṉ-kāṭu". TamilNet. July 11, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22702.
- ↑ ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
- ↑ "கற்பகம்: யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் நூற்றாண்டு விழா மலர் (1915-2015)". யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம். September 30, 2015. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D....
வெளியிணைப்புகள்
[தொகு]- http://www.eurumpirai.com/ பரணிடப்பட்டது 2012-05-07 at the வந்தவழி இயந்திரம்