இரதம்
இரதம்(ⓘ) (ஆங்கிலம்:Chariot) என்பது இழுத்துச் செல்லப்படும் ஒருவகை வண்டியாகும். பெரும்பாலும் குதிரைகளைக் கொண்டே இழுத்துச் செல்லப்படுகிறது. அக்கால இராணுவத்தில் வில்வித்தை, வேட்டை போன்றவற்றிற்கு வாகனமாகவும், போக்குவரத்திற்கும் பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
ஆங்கிலத்தில் சாரட் (chariot) என்பது இலத்தீன் சொல்லான காரஸ் என்ற சொல்லிருந்து உருவானது. இராணுவ அணிவகுப்பில் இரத அணிவகுப்பும் ஒன்றாகும். பண்டைய ரோம் மற்றும் இதர பண்டைய நாடுகளில் இரு குதிரை பூட்டிய ரதம், முக்குதிரை பூட்டிய ரதம், நான்கு குதிரை பூட்டிய ரதம் என்றெல்லாம் இருந்துள்ளது.
குதிரை இரதம் என்பது வேகமான, எடைகுறைவான, திறந்த, இருசக்கரம் கொண்ட கலனை இரண்டு அல்லது மூன்று குதிரை கொண்டு இழுத்துச் செல்லும் அமைப்புடையது. பண்டைய வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலத்தில் போர்க்களத்தில் பயன்பட்டுவந்தது, பின்னர் படிப்படியாகப் பயணவாகனமாகவும், அணிவகுப்பு வாகனமாகவும், தேர்ப் பந்தயத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு கான்ஸ்டண்டினோபில் காலத்தில் இராணுவ முக்கியத்துவத்தையும் தாண்டி தேர்ப் பந்தயம் ஆறாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்தது.
ஐரோப்பா
[தொகு]நாகரிக வளர்ச்சியை நோக்கிய முக்கிய நகர்வில் வீட்டு விலங்காகக் குதிரை மாறியதும் ஒன்று. 4000-3500 கிமு கால வாக்கில் உக்ரைன் பகுதியைச் சேர்ந்த யுரேசியப் புல்வெளிகளில் குதிரைகள் வீட்டு விலங்காக மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.[1][2][3] சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியது அக்கால மெசொப்பொத்தேமியா (தற்கால யுக்ரேன்) பகுதிகளில் இருக்கக் கூடும். மத்திய ஐரோப்பா, வடக்கு மேகோப் நாகரிகப் பகுதிகளில் மத்திய கிமு 4ஆம் ஆயிரமாண்டைச் சேர்ந்த சக்கரம் கொண்ட வாகனங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. முதலில் மாடுகளைக் கொண்டு வண்டி இழுக்கப்பட்டிருக்கலாம்.[4]
ரஷ்யாவின் குபன் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரத இடுகாட்டில் (இறந்தவர்களை அவர்கள் இரதத்துடன் புதைப்படும் இடம்) இரு மரச் சக்கரங்களுடன் குதிரையுடன் இருக்கும் இரதத்தின் ஆதாரம் கிடைத்துள்ளது. இது கிமு 4ஆம் ஆயிரமாண்டின் இரண்டாவது பாதியைச் சேர்ந்ததாகும். இதுபோன்ற பல இடுகாட்டில் இரதங்கள் கண்டெடுக்கப்பட்டன.[5][6]
கிமு 3150 ஆண்டைச் சேர்ந்த சக்கர ஆரை கொண்ட வண்டியே கிழக்கு ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையானதாகும்[7]
பண்டைய கிரேக்கத்தில் கிமு முதலாம் ஆயிரமாண்டில் குதிரைப்படை இருந்திருந்தாலும் கரடுமுரடான கிரேக்க நாட்டில் இரதங்கள் ஓட்டுவது கடினமாகும். வரலாற்றுப்படி கிரேக்கப் போர்க்களத்தில் இரதங்கள் பயன்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இருந்த போதும் கிரேக்க இதிகாசங்களில் இரதங்களை உயர்வாகவே பேசப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும், தேவ விளையாட்டுகளிலும், இதர விழாக்களிலும், பொது நிகழ்ச்சியிலும் இரதங்கள் பயன்பட்டுள்ளன. திருமண அழைப்பில் மாப்பிள்ளைத் தோழன் அல்லது மாப்பிள்ளைத் தோழி இரதங்களில் சென்று அழைத்து வந்துள்ளனர். எரோடோட்டசு குறிப்புகளின் படி கருங்கடல்–காசுப்பியன் கடல் புல்வெளிகளில் சிக்னீயே மக்கள் இரதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆசியா
[தொகு]ரிக் வேதத்தில் இரதம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன, கிமு இரண்டாம் ஆயிரம் ஆண்டைச் சேர்ந்த ஆதாரங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. அக்னி தேவன் முதலாக பல்வேறு தேவர்கள் இரதங்களில் சென்றதாக இதிகாசங்களில் வழங்கப்படுகிறது. விந்திய மலைத்தொடர் மணல்கற்களில் சில இரத ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. மிர்சாபூர் மாவட்டத்தில் மோர்ஹான பகர் என்ற இடத்தில் இரு ஓவியங்கள் உள்ளன. அதில் ஆறு ஆரைச் சக்கரமுடன் நான்கு குதிரை பூட்டிய ரதமும், இரு குதிரை பூட்டிய ரதமும் உள்ளது. தமிழகத்தில் கழுகுமலை வெட்டுவான் கோயிலில் பாண்டிய காலத்து ஒற்றைக்கல் இரதம் குடைவரைச் சிற்பமாக உள்ளது.[8]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Matossian Shaping World History p. 43
- ↑ "What We Theorize – When and Where Did Domestication Occur". International Museum of the Horse. Archived from the original on 2010-12-17. பார்க்கப்பட்ட நாள் 2010-12-12.
- ↑ "Horsey-aeology, Binary Black Holes, Tracking Red Tides, Fish Re-evolution, Walk Like a Man, Fact or Fiction". Quirks and Quarks Podcast with Bob Macdonald (CBC Radio). 2009-03-07. http://www.cbc.ca/quirks/episode/2009/03/07/horsey-aeology-binary-black-holes-tracking-red-tides-fish-re-evolution-walk-like-a-man-fact-or-ficti/. பார்த்த நாள்: 2010-09-18.
- ↑ David W. Anthony, The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World. Princeton University Press, 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1400831105 p416
- ↑ Christoph Baumer, The History of Central Asia: The Age of the Steppe Warriors. I.B. Tauris, 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1780760604 p90
- ↑ Chris Fowler, Jan Harding, Daniela Hofmann, eds, The Oxford Handbook of Neolithic Europe. OUP Oxford, 2015 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0191666882 p113
- ↑ Gasser, Aleksander (March 2003). "World's Oldest Wheel Found in Slovenia". Government Communication Office of the Republic of Slovenia.
- ↑ முனைவர் லோ. மணிவண்ணன். "D0512 சிற்பக்கலை, ஓவியக்கலை". த.இ.க. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.