உள்ளடக்கத்துக்குச் செல்

மாட்டு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை(திருகோணமலை) மாட்டுவண்டி
இந்திய மாட்டுவண்டி
மாட்டு வண்டிப் பயணம்
மாட்டு வண்டி
கட்டை வண்டி
மாட்டுவண்டிப் போட்டி

மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இதற்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.

அமைப்பு[தொகு]

கயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார். பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயணிகளும் பின் பகுதியில் அமரலாம். ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொதுவானது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்களில் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு. பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.

இவ்வண்டிகளின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். பெரும் பகுதி மரத்தையும், சிறிதளவு இரும்பையும் கொண்டு இவ்வண்டிகள் செய்யப்படுகின்றன. சிற்றூர்களை ஒட்டிய பகுதிகளில் இவ்வண்டிகளை செய்வதற்கென்றே பெயர் பெற்ற ஆசாரிகள் இருப்பர். தோற்றத்தில் விலை குறைவானவை போன்று இருந்தாலும், ஒரு வண்டி செய்வதற்கு குறைந்தது இந்திய ரூபாய் 15,000 செலவு பிடிக்கும். மரச்சக்கரங்களாலான பழங்கால வகை மாட்டுவண்டிகளின் இழுவைத் திறன் குறைவே. மணல், சேறு நிறைந்த பகுதிகளில் இவற்றை இழுத்துச் செல்வது கடினம். நவீன கால மாட்டுவண்டிகளின் கூடு முழுக்க இரும்பாலும், சக்கரங்கள் உருளிப்பட்டைகளாலும் ஆனவை. இவ்வகை வண்டிகளை வாங்க அரசும் கூட்டுறவுச் சங்கங்களும் கடன் மற்றும் மானியம் தந்து உதவுகின்றன. நன்கு வளர்ந்த ஓரிணை வண்டிமாடுகளின் விலை, குறைந்தது இந்திய ரூபாய் 10,000 இருக்கும். எனவே, வண்டிமாடுகளை சிறு வயதிலேயே குறைந்த விலையில் வாங்கி வளர்க்க முற்படுவர். அல்லது, தத்தம் பண்ணைகளில் பிறக்கும் காளைகளை இணையாக வளர்க்க முற்படுவர். இது தவிர மாடுகளை பராமரிக்க, அவற்றுக்கு தீவனம், வைக்கோல் அளிக்க தனிச் செலவுகள் ஏற்படும். எனவே, ஓர் உழவர் மாட்டு வண்டி வைத்திருந்தால் அவர் ஓரளவு வசதி உடையவர் என்று அறியலாம்.

மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். வண்டிகளை இழுத்துச் செல்ல, வண்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகரங்களில் ஓடும், தொழிற்சாலைப் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படும் வண்டிகள் ஒற்றை மாட்டைக் கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். சிற்றூர்களில் ஓடும் வண்டிகள் இரண்டு மாடுகளை கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மாட்டு வண்டியின் பாகங்கள்[தொகு]

மாட்டு வண்டி
அருங்காட்சியகம், தில்லி

நுகத்தடி[தொகு]

நுகத்தடி வண்டியை இழுத்து செல்லும் மாடுகளைப் பூட்ட பயன்படும் நீளமான தடி ஆகும். இதில் மாடுகளைப் பூட்ட நுகத்தடியில் இரு பக்கங்களிலும் துளைகள் இருக்கும்.

பூட்டாங்கயிறு[தொகு]

நுகத்தடியில் உள்ள துளைகளின் ஒரு கயிறு மாட்டப்பட்டு மாடுகளின் கழுத்தை சுற்றி மாட்டப்படுவது. இதனால் மாடுகள் வண்டியை இழுக்கும்போது நுகத்தடியை விட்டு நகராமல் இருக்கும்.

கட்டு[தொகு]

இது மரத்தாலான சக்கரம் உடையாமல் இருக்கவும் வலிமையாக இருக்கவும் உதவும்.

வட்டை[தொகு]

ஒரு சக்கரத்தை வடிவமைக்க பல வளைந்த அமைப்புடையது. ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். இது வலிமையான தேக்கு மரத்தால் செய்வது வழக்கம்.

ஆரக்கால்கள்[தொகு]

வட்டையையும் குடத்தையும் இணைக்கும் கால்கள் ஆகும். ஒரு சக்கரத்திற்கு ஆறு ஆரக்கால்கள் இருக்கும்.

இருசு கட்டை[தொகு]

இது வண்டியின் பாகத்தைத் தாங்கி நிற்பதோடு இக்கட்டையின் வழியே தான் அச்சுசெல்லும். இந்த அச்சு வழியேதான் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

குடம்[தொகு]

இது ஆரக்கால்களை வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி.

முளக்குச்சி[தொகு]

வண்டியின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஆறு வீதம் துளையிட்டு செங்குத்தாக நிறுத்தியிருப்பர். அககுச்சிகளை மூங்கில் பட்டைகளால் இணைத்து கட்டியிருப்பர். சுமை ஏற்றும் போது சுமை வெளியில் விழாமல் இது பாதுகாக்கும்.

கடையாணி[தொகு]

இது சக்கரங்கள் அச்சை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்க அச்சிலுள்ள துளையில் சொருகப்பட்டிருக்கும்.

கொலுப்பலகை[தொகு]

வண்டியை ஓட்டுபவர் அமர்ந்து செல்ல வண்டியின் முன் பக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு பலகை ஆகும்.

புறக்கந்து[தொகு]

வண்டியச்சின் முனை (யாழ்ப்பாணப் பயன்பாடு)

கூட்டு வண்டி[தொகு]

மாட்டு வண்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்லவதற்குரிய இடம் மூடியதாக கூடார அமைப்பு கொண்டு காணப்படும் அமைப்பிலான வண்டி கூட்டு வண்டி எனப்படும். மாட்டுவண்டி பிரதான பயணிகள் போக்குவரத்துக்குரிய சாதனமாக கணப்பட்ட காலங்களில் கூட்டுவண்டி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கே வண்டி பயன்படுத்தப்படுவதால் கூட்டுவண்டிப் பயன்பாடு குறைவடைந்து விட்டது.

மாடுகள்[தொகு]

வண்டிமாடுகள், ஓட்டுனரின் எடையைத் தாண்டி பொருட்களை வண்டியின் பிற்பகுதியில் ஏற்ற மாட்டனர். மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் சாட்டையும் பொருத்தப்பட்ட பிரம்புக் குச்சியாகும். மாடுகள் வேகம் குறையும்போது, சாட்டையால் அடித்தோ ஊசி கொண்டு குத்தியோ மாடுகளை வேகம் கொள்ளச் செய்வர். மாட்டின் வாலை தட்டி வேகமூட்டுவதும் உண்டு. ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனரின்றி குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு வண்டியிழுக்கப் பயன்படும் மாடுகள் அவற்றின் சிறு வயது முதலே இணையாக வளர்க்கப்படும். இவ்வாறு இணை சேர்க்கப்படும் மாடுகள் ஒரே உயரம், வளர்ச்சி உடையனவாக பார்த்துக் கொள்ளப்படும். பொலி காளைகளை போன்றன்றி, இம்மாடுகளின் இனப்பெருக்க விதைப் பைகள் சிதைக்கப்பட்டே வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இல்லையெனில், இவற்றை கட்டுப்படுத்தி வண்டி இழுக்கப் பயன்படுத்துவது சிரமமாகும். நன்கு வளர்ந்த ஒன்றுக்கொன்று பழக்கப்படாத புதிய மாடுகளை வண்டி இழுக்கச் செய்வது கடினமாகும். வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், இணைமாடு மற்றும் வண்டியின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மாடுகளுக்கு போதுமான பயிற்சி தேவை. பயிற்சியற்ற மாடுகளை வண்டியில் பூட்டி இழுக்க இயலாது.

மாட்டு வண்டிகளை தடை செய்யும் சந்திகர் மாநிலப் போக்குவரத்துச் சின்னம்.

தற்கால நிலை[தொகு]

உழவர் வீடுகளில் உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளே வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. எக்காரணம் கொண்டும், பசு மாடுகளை இவற்றில் பூட்டி ஓட்டுவதில்லை. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலின் காரணமாகவும் உயர்ந்து வரும் கூலித் தொகைகளின் காரணமாகவும், தற்பொழுது உழவுக்கு மாடுகள் வளர்ப்பதும், உழவு வாடகைக்கு என மாடுகளை விடுவதும் குறைந்து வருகிறது. இதனால், வண்டி மாடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேம்பட்டு வரும் சாலை வசதிகள், சுமையுந்துகளின் பெருக்கம் காரணமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளின் தேவை குறைந்து வருகிறது.

பயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணி வைப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கவுரவமாக கருதுகின்றனர். மாட்டுப் பொங்கல் நாளை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கு வண்ணமடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்டப் போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. திருவிழாக் காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழுக் குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர். இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்குப் பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டு_வண்டி&oldid=3939247" இலிருந்து மீள்விக்கப்பட்டது